Home Blog Page 99

அர்ப்பணிக்கப்பட்ட தவ வாழ்வு வாழ்கிறாராம்???!!! சொல்லிக் கொள்கிறார் ஜெயலலிதா!!!

அண்ணாவின் 108  வது பிறந்த நாளில் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் ஜெயலலிதா பல முரண்பாடுகளை  உதிர்த்து இருக்கிறார்.

அண்ணா வைப் பற்றி சொல்லும்போது ‘ பெரியாரது சமூக சீர்திருத்த கருத்துகளுக்கு செயல் வடிவம் தந்த தியாகச் செம்மல் , தமிழ்நாட்டில் பகுத்தறிவு தழைத்தோங்கவும் ஏற்றத் தாழ்வுகள் அற்ற சமத்துவ சமுதாயம் உருவாகிடவும் தமிழர் என்ற ஓர் அடையாளத்தின் கீழ் தமிழ்ச் சமூகம் வாழ்ந்திடவும் தன் வாழ்நாள் எல்லாம் உழைத்த ஒப்பற்ற தலைவர் ‘ என்று புகழாரம் சூட்டுகிறார்.

தீய சக்தி என்று அடிக்கடி கலைஞர் கருணாநிதியை மறைமுகமாக குறிப்பிடும் ஜெயலலிதா தன்னைப் பற்றி கூறும்போது ‘ மக்களுக்கு தொண்டு  செய்ய இந்த வாய்ப்பு எனக்கு அருளப் பட்ட ஒன்றாகவே ஏற்று அர்ப்பணிக்கப் பட்ட தவ வாழ்வினை நான் வாழ்ந்து வருகிறேன்.’ என்று முடிக்கிறார்.

மேலும் கடைசியில் ‘ தமிழ்நாட்டில் தனி மனித காட்டாட்சிக்கோ ஒரே குடும்பத்தின் வாரிசு ஆட்சிமுறைக்கோ ஜனநாயக விரோத செயல்களுக்கோ எப்போதும் இடமில்லை ‘ என்றும்   முடிக்கிறார்.

படிக்கும் எவருக்கும் இவர் எப்போது தமிழர் அடையாளம் காப்பாற்ற பாடுபட்டார்  இவருக்கு யார் தொண்டு செய்ய வாய்ப்பு அருளினார்கள்  இவர் வாழ்வது  தவ வாழ்வா  என்ற கேள்விகள் எழுவதை தவிர்க்கவே முடியாது .

தலைமைப் பதவியை கைப்பற்ற இவர் ஜானகியோடு போராடியது யார் தூண்டி? தலைமையை கைப்பற்றி எல்லாரையும் விரட்டி ஓரங்கட்டி அடிமைப் படுத்தி காட்டாட்சி நடத்தி வருகிறாரே அதுதான்  தவ வாழ்வா??

இவர் கட்சியில் ஜனநாயகம் இருப்பது யாருக்காவது தெரியுமா?    தனி மனித காட்டாட்சி என்று தன்னை தானே சொல்லிக் கொள்கிறாரா?

சொத்துக்  குவிப்பு வழக்கில் மாட்டி சிறைக்குச் சென்றது உச்ச நீதி மன்ற மேல்முறையீட்டில் பதவி தொக்கி நிற்பது எல்லாம் இவருக்கு தெரியாதா?   அல்லது யாருக்கும் நினைவிருக்காது  என்று நம்புகிறாரா?

அலிபாபாவும்  நாற்பது  திருடர்களும் என்று கேள்விபட்டிருக்கிறோம் .         இன்று ஊழல் செய்வதையே ஒரு கட்சியின் அடி மட்டம் முதல் மேல் மட்டம் வரை வரையறை செய்யப் பட்ட ஒரு நிறுவனமாக உருவாக்கி அதில் பங்கேற்போர்  அனைவரையும் பந்து போல் தூக்கிப் போட்டு விளையாடுவதுபோல் ஆடிக்கொண்டிருகிறாரே  அதற்குப் பெயர் ஆட்சியா??

அடிமைகளின் கூடாரம் என்று ஒரு முன்னாள் அடிமை சசிகலா புஷ்பா சொல்கிறாரே அதில் உண்மையில்லையா?

ஜெயலலிதாவின் அறிக்கை அவரையே சுட்டிக் காட்டும் என்பதை அறியாமலே அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.   சும்மா இருந்திருக்கலாம் .

தீக்குளித்த விக்னேஷுக்கு வீர வணக்கம்??!! தொடர வேண்டாம் இந்த கொடூரம்??!!!

கன்னட வெறியர்களை கண்டித்து நடந்த முழு அடைப்பின் போது நாம் தமிழர் கட்சியின் தொண்டர் விக்னேஷ் சென்னையில் தீக்குளித்து மாண்டிருக்கிறார் .

ஈழத் தமிழர்கள் படுகொலையின் போது உயிராயுதம் ஏந்தி மாண்ட முத்துக்குமார் அவருக்குப்பின் இருபது தமிழர்கள் நினைவுக்கு வருகிறார்கள்.   மாள்வதா தமிழர் பண்பு என்ற ஏக்கம் தவிர்க்க இயலவில்லை.

ஜெயலலிதா சிறைக்குப் போனபோது மாண்டார்களே இருநூறு பேர் அவர்களை எந்தக் கணக்கில் சேர்ப்பது. ?

உச்சநீதி மன்றம் தந்த தீர்ப்பையே மதிக்காதவர்கள் எப்படி தீர்வை நோக்கி நகர்வார்கள்.?     ஆனாலும் ஒரு நூற்றாண்டைத் தாண்டிய பிரச்னை ஏதோ ஒரு முடிவுக்கு வந்துதானே தீரவேண்டும்.

விக்னேஷின் குடும்பம் அவரை நம்பியே இருந்திருக்கிறது.      தமிழக அரசு இதுபற்றி எந்த அறிக்கையும் தரவில்லை.    அவரது குடும்பத்துக்கு அரசு நிவாரணம் வழங்கியே ஆக வேண்டும்.     கர்நாடக அரசு துப்பாக்கி சூட்டில் இறந்தவரின் குடும்பத்துக்கு மூன்று லட்ச ரூபாய் நிவாரணம் அறிவித்து உள்ளதே?

பொதுவேலை நிறுத்தம் போராட்டம் நடக்கும் போதே அ தி மு க வினர் இன்றே உள்ளாட்சி தேர்தலுக்கு மனு வாங்கும் வேலையை திருவிழா போல்  நடத்த வேண்டுமா?

அடுத்த நாள் தொடங்கினால் என்ன குடி முழுகி  விடும். ?

ஆளும் கட்சியின் இந்த இரட்டை வேடத்தையும் மீறி  பொது வேலை  நிறுத்தம் எல்லாக் கட்சிகளின் ஆதரவோடு வெற்றி  பெற்றது  நல்ல அறிகுறி.

விக்னேஷின் தியாகம் வீண் போகாது!!

பாராலிம்பிக்கில் மாரியப்பன் தங்கவேலு தங்கப்பதக்கம் !!!தமிழகத்தில் கொண்டாட்டம் !!!!!!

ஒலிம்பிக்கில் தங்கம் கிடைக்காத குறையை பாராலிம்பிக்கில் தமிழகத்தின் மாரியப்பன்  தங்கவேலு உயரம் தாண்டும் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்று தமிழகத்திற்கு  பெருமை சேர்த்திருக்கிறார்.     தாண்டிய உயரம்    1.89 மீட்டர்.

விபத்தில் சிக்கி ஒரு காலின் கட்டை விரலைத் தவிர மற்ற விரல்களை இழந்த மாரியப்பன் ஐந்து வயது முதலே விளையாட்டில் ஈடுபாட்டுடன் பயிற்சி பெற்று வந்திருக்கிறார்.

சேலம் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில்  தந்தை ஆதரவு இல்லாமல் தாயின் அரவணைப்பில் வாடகை வீட்டில் வசித்து சகோதர சகோதரியின் பாச பிணைப்பில் வளர்ந்த மாரியப்பன் செய்திருக்கும் சாதனை , மாற்றுத் திறனாளிகளின் மத்தியில் பெருத்த உற்சாகத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம்  இல்லை.

தமிழக அரசு அறிவித்திருக்கும் இரண்டு கோடி மற்றும் மத்திய அரசு அறிவித்திருக்கும் எழுபத்தி ஐந்து லட்சம்  பரிசுகள் அவர்கள் குடும்பத்தின் எதிர் காலத்துக்கு உத்தரவாதம் அளிப்பதாக அமையும்.

தன்னம்பிக்கையும்  தளரா முயற்சியும் எப்போதும் வெற்றி பெறும் என்பதற்கு மாரியப்பன் மிகச் சிறந்த உதாரணம்.

மற்ற மாநிலங்களில் வெற்றி பெற்று  வரும் வீரர்களுக்கு அந்த மாநில அரசுகள் அளிக்கும் ஊக்க பரிசுகளோடு ஒப்பிட்டுப் பார்க்க நமக்கு சங்கடமாக இருக்கும்.    இன்னும் கொஞ்சம் உற்சாகப் படுத்தலாம்.

இன்னும் பல வெற்றிகளை அந்தத் தம்பி பெற வேண்டும்.

தமிழரை அடித்து உதைத்து முகநூலில் பதிவிட்ட கன்னட வெறியர்கள்??!! கைது செய்யாமல் வேடிக்கை பார்க்கும் அரசு??

உச்சநீதி மன்றம் காவிரியில் தண்ணீர் விடச் சொல்லி உத்தரவிட்டது .       கர்நாடகாவில் பந்த் நடத்துகிறார்கள்.    தமிழ்நாட்டு பேருந்துகள் தாக்கப் படுகின்றன.     பெங்களுரு செல்லும் பேருந்துகள் நிறுத்தப் படுகின்றன.   அனைத்துக் கட்சி கூட்டம் நடக்கிறது.     ஆனால் பெங்களுருவிலிருந்து சென்னை செல்லும் பேருந்துகள் வந்து போகின்றன.

எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக பெங்களுருவில் இருந்து ஓர் தமிழர் முகநூலில் ஒரு க்பதிவு செய்கிறார்.     சென்னை அமைதியாக இருக்கிறது.   ஆனால் பெங்களுருவில் ஏன் அமைதி இல்லை என்று கேட்கிறார்.

அவரது முகவரியை தேடி ஆளைப் பிடித்து கூட்டமாக கூடி நின்று அடிக்கிறார்கள்.   காவிரி கர்நாடகத்துக்கே  சொந்தம் என்று சொல்ல வைக்கிறார்கள்.  அவர் கன்னடத்திலேயே பேசுகிறார்.   எல்லாவற்றையும் பதிவு செய்து வெளியிடுகிறார்கள்.    நோக்கம் என்ன ?    பிற கன்னடர்களுக்கு நீங்களும் இப்படி செய்யுங்கள் என்பதுதானே?

எத்தனை நாட்களுக்கு தமிழர்கள் அமைதி காக்க வேண்டும்?

பிரச்சினை வேறு திசையில் பயணிக்கிறது .

காங்கிரஸ் அரசு சட்ட ஒழுங்கை காக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கிறது.

தமிழர் வெறுப்பு விதைக்கப் படுகிறது. வளர்க்கப் படுகிறது.  ஆனால்  வஞ்சிக்கப் பட்ட தமிழகம் அமைதி காக்கிறது.

தமிழக அரசு மௌனம் காக்கிறது.    உணர்வாளர்கள்  கொதிக்கிறார்கள் !

விரும்பத்தகாத விளைவுகளுக்கு இரண்டு மாநில அரசுகளே பொறுப்பு??!!

வருமுன் காப்பாளர்களா?    வந்தபின்னும் வஞ்சிப்பார்களா?

மருத்துவப் படிப்பிற்கு விளையாட்டு கோட்டா சட்ட விரோதம்??!! ஹைதராபாத் உயர் நீதி மன்றம் தீர்ப்பு ??!!

ஏற்கெனவே விளையாட்டில் நாம் மிகவும் பின்தங்கி இருக்கிறோம்.

விளையாட்டு கோட்டாவில்  டெண்னிகாயிட், நெட்பால், த்ரௌபால்  போன்றவற்றை சேர்க்க ஆந்திர அரசு முயற்சித்தது.

விளையாட்டு கோட்டாவில் தன்னை சேர்க்காததை எதிர்த்து போடப்பட்ட வழக்கில்  தீர்ப்பு சொன்ன நீதிமன்றம்   விளையாட்டு கோட்டா  என்பதே அரசியல் சாசன சட்டத்திற்கு முரணானது என்று தீர்பளித்தது. .

விளையாட்டு  கோட்டா என்பதே தாழ்த்தப் பட்டவர்களுக்கு அரசியல் சட்டம் தந்த உத்தரவாதத்தை நீர்த்துப்  போகச்செய்யும் உள் நோக்கம் கொண்டது என்றும்  குறிப்பிட்டது.

கோட்டா நிற்குமா  அல்லது உச்ச நீதி மன்றம் தலையிட்டு நீடிக்கவைக்குமா ?

உள்ளாட்சிகளுக்கு மீண்டும் மறைமுக தேர்தல் ஏன் ? ஜெயலலிதாவின் திடீர் முடிவுகள் ??!!

தமிழ்நாட்டில் பிரச்னைகளை  திசை திருப்ப ஜெயலலிதா  அடுத்தடுத்து பல பொருளற்ற சில்லறை காரியங்களை செய்து கொண்டிருப்பது வழக்க மாகி விட்டது.

அமைச்சர்கள் மாற்றம் , அதிகாரிகள் மாற்றம்  கட்சி நிர்வாகிகள் மாற்றம் என்று நாளுக்கொரு அறிவுப்புகள் தன்னை தூக்கி நிறுத்தும் என்றும் தன் மீதான அச்சத்தை அதிகரிக்கும் என்றும் ஜெயலலிதா நம்புகிறார்.

முன்பு உறுப்பினர்கள் சேர்ந்து தலைவரை உள்ளாட்சிகளில் தேர்ந்தெடுத்து வந்தார்கள்.   அதை மாற்றி தலைவரை மக்கள் நேரடியாக தேர்ந்தெடுக்க வகை செய்தவர் ஜெயலலிதா.

இப்போது மீண்டும் மேயரையும் நகராட்சி  பேரூராட்சி தலைவரையும் அந்தந்த மன்ற உறுப்பினர்களே தேர்ந்தெடுக்கும் வகையில் சட்ட திருத்தம் செய்ய ஜெயலலிதா முடிவெடுத்துள்ளார்.

தோல்வி பயமா?    அல்லது ஆட்சி அதிகாரத்தை வைத்து செலவைக் குறைத்து மீண்டும் அராஜக வழியில் எல்லாவற்றையும் கைப்பற்றி விட முடிவா?

பொதுத் தேர்தலில் வாக்காளர் பட்டியலில் கண்ட குறைகளையே தேர்தல்  ஆணையம் சரி செய்ய வில்லை.       அப்பொழுதும் பணம் தான் வெற்றியை முடிவு செய்தது.     அந்த வாக்காளர் பட்டியலை வைத்து நடத்தப் படும் தேர்தலில் என்ன மாற்றத்தை கொண்டு வந்து விட முடியும்?

அகில இந்திய தேர்தல் ஆணையம் செய்ய முடியாததை மாநில அரசின் கட்டுபாட்டில் இருக்கும் மாநில தேர்தல் ஆணையம் என்ன செய்து விட முடியும்?

சட்ட மன்றத்திலேயே  ஒரு அமைச்சர் காலில் விழுகிறார்.    உறுப்பினர் நடராஜ் முதன் முதலில் பேசி முடிக்கும் போது கபாலி ஸ்டைலில்  ”  அம்மாடா ” என்று முடிக்கிறார்.  ஒரு அமைச்சர் ஆமாம் நாங்கள் எல்லாம் அடிமைகள்தான் என்று பெருமையுடன் பேசுகிறார்.     சட்ட மன்றம் தனது மாண்பை  இழந்து வெளிறி நிற்கிறது.

ஆண்கள் எல்லாம் அடிமைகள்தான் என்று குப்புற விழுந்து கிடக்கும்போது  ஒருபெண் மட்டும் தன்னால் எதிர்த்தும் நிற்க முடியும் என்று களத்தில் நிற்கிறார்.   அவர்தான் சசிகலா புஷ்பா.     பிணை கிடைக்குமா இன்னும் பின்னப்பட இருக்கும் சதி வலைகளில் இருந்து அவரால் மீண்டு வர முடியுமா என்பதை காலம் தான் நிர்ணயிக்க வேண்டும்.

மக்களின்கவனத்தை திசை திருப்ப இம்மாதிரி அறிவிப்புகள் உதவலாமே தவிர வேறு எந்த பலனையும் இந்த முடிவு யாருக்கும் அளிக்கப் போவதில்லை.

 

 

ஒலிம்பிக்கில் இந்தியா – ஏமாற்றம் ?? ஆறுதல் தந்த சிந்து ,சாக்க்ஷி மாலிக் !!!!

மக்கட்தொகை அடிப்படையில் இந்தியா ஒலிம்பிக்கில் பல தங்கங்கள் அல்லது  வெள்ளிகள் பெற்றிருக்க  வேண்டும்.

ஊக்க மருந்து உட்கொண்டதாக நர்சிங் யாதவ்  நான்கு ஆண்டுகள் தடை செய்யப் பட்ட பின்னணியில் நம் நாட்டிலேயே அவருக்கு எதிராக சதி செய்யப் பட்டதாக வந்த செய்திகளை ஆய்வு செய்யகூட நம்மால் முடிய வில்லை.

பெண்கள்தான் நாட்டின் மானத்தை காப்பாற்றி இருக்கிறார்கள்.      பெண் சிசுக்கொலை யை நாம்  தடுத்திரா விட்டால் சாக்ஷி மாலிக் போன்றவர்கள் என்னவாகி இருப்பார்கள் என்ற கேள்வியை எழுப்பி கிரிகெட் வீரர் ஷேவாக் அருமையாக விமர்சித்திருந்தார்.

தீபா கர்மாகர்  சானியா மிர்சா , சைய்னா நேவால்  லலிதா பாபர்  போன்ற பெண்மணிகள் முன்னணியில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

பி வி சிந்து பெற்ற வெள்ளியும் சாக்ஷி பெற்ற வெண்கலமும் இந்தியாவின் மானத்தை காப்பாற்றி இருக்கின்றன.

தெலுன்கானாவும் அரியானாவும் மகிழ்ச்சி யடையலாம் .

தமிழ்நாட்டுக்கு அதற்கெல்லாம் நேரமில்லை.    நமக்கு நெறைய வேறு வேலைகள் இருக்கின்றன.   அரசியல் விளையாட்டுக்கே நேரம் போதவில்லை.

சிந்துவுக்கும் சாட்சி மாலிக்கிக்கும்  வாழ்த்துக்கள்.

 

நஞ்சூட்டி சாகடிக்கப் படும் மறுவாழ்வு மையங்களில் இருக்கும் விடுதலை புலிகள் ??!! இந்திய அரசு தலையிட வேண்டும்??!!

11600  விடுதலைப் புலிகள் போரின் முடிவில் சரண் அடைத்தார்கள்.    அவர்களை மறுவாழ்வு முகாம்களில் அடைத்து வைத்திருக்கிறது  சிங்கள அரசு.

அவர்களில் 104   பேர் தொடர்ச்சியாக புற்று நோய் தாக்கி உயிர் இழந்திருக்கிறார்கள்.

போலோனியம் என்ற மருந்தை செலுத்தி புற்று நோயை வரவழைத்து சாகடிக்க திட்டமிட்டு செயல்படுகிறது  இனவாத சிங்கள அரசு.

மிச்சமிருக்கும் புலிகளையும் மெல்ல மெல்ல கொன்று விடுவார்கள் என்ற அச்சம் வந்து விட்டது.     வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் ஆதாரம் இல்லாமல் குற்றம் சாட்ட மாட்டார்.

போர் முடிந்து ஏழு ஆண்டுகள் ஆகியும் இன்னமும் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு  குறித்து

எந்த விதமான பேச்சு வார்த்தையும் ஆரம்பம் ஆக வில்லை. இன்னமும் மறுவாழ்வு சீரமைப்பு என்று  சொல்லிக் கொண்டே ராணுவத்தை விலக்காமல் கொடுங்கோல் ஆட்சி செய்து வருகிறது சிங்கள பேரினவாதம்.

இந்திய மீனவர்களின் உரிமைகளை பாதுகாக்காத இந்திய அரசு இலங்கை தமிழர்களின் உரிமைகளை எவ்வாறு மீட்டெடுக்கும் ?.

எதுவானாலும் ஒன்று பட்ட குரல் தமிழகத்தில் இருந்து எழ வேண்டும். அது மட்டுமே இலங்கைத் தமிழர்களின் பிரச்னைகளை தீர்க்கும்..

மத்திய அரசை தமிழர் நலன் காக்க நடவடிக்கை எடுக்க வைப்பதில்  எப்போது தமிழர் இயக்கங்கள்  வெற்றி பெருகின்றனவோ அன்றுதான் இறுதி வெற்றி கிடைக்கும்..

மோடி வந்தால் தீர்வு கிடைக்கும் என்று நம்பினோம்.  அறிகுறி தெரியவில்லையே ?

 

நீதிபதிகள் நியமனத்தில் மோதிக்கொள்ளும் உச்சநீதி மன்றமும் மத்திய அரசும் ???!!!

நீதிபதிகள் நியமனத்தில் தேசிய நீதித்துறை நியமனங்கள் கமிஷன் மூலம் கொண்டு வரப்பட்ட விதிமுறைகள் செல்லாது என்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்துவிட்டு தானே கொலிஜியம் என்ற ஐந்து நீதிபதிகள் அடங்கிய குழு தேர்ந்தெடுத்த  75  உயர் நீதி மன்ற நீதிபதிகள் பட்டியலை மத்திய அரசின் ஒப்புதலுக்கு  அனுப்பி விட்டு   காத்திருக்கிறது .     எட்டு மாதங்களாக கிடப்பில் போட்டு விட்டது மத்திய அரசு.

கொலிஜியம் தேர்ந்தெடுக்கும் நபர்களை தாங்கள் மறுபரிசீலனை செய்யும் உரிமை வேண்டும் என்கிறது மத்திய அரசு.   கூடாது என்கிறது உச்சநீதிமன்றம்.

இந்த சண்டையில் 44.3 %  நீதிபதிகள் பதவிகள் காலியாக கிடக்கின்றன.

ஏற்கெனெவே செய்யப் பட்ட நியமனங்களில் நீதிபதிகளின் உறவுகள் நண்பர்கள் அதிகம் இடம் பெற்றது விமர்சனத்துக்கு ஆட்பட்டது.

வெளிப்படைத் தன்மை இல்லாத வகையில்தான் நீதிபதிகள் நியமிக்கப் படுகிறார்கள்.

கொலிஜியம் முறை பல தவறுகளுக்கு இடம் கொடுக்கிறது .    அதே சமயம் மத்திய அரசின் முழு கட்டுப்பாட்டிலும் கொண்டு வரக கூடாது.  வந்தால் அரசியல் நியமனங்கள் இடம்  பெறுவது தவிர்க்க முடியாது.

எனவே இரண்டிற்கும் பொதுவாக நியாயமான முறையில் அனத்து தரப்பினரும் பங்கு பெறும் ஒரு முறையை வகுத்து அதன் படி நீதிபதிகள் நியமனம் நடை பெற்றால்தான் நியாயம் கிடைக்கும்.

 

தமிழ்ச்செய்திகள் நிறுத்தம், நெய்வேலி சுரங்க பெயர் மாற்றம் – பா ஜ க வின் ஆதிக்க கோர முகத்தின் வெளிப்பாடுகள்??!!

தூர்தர்ஷனில் அனைத்து மாநில செய்திகள் வாசிப்பதை நிறுத்தப் போவதாக வந்திருக்கும் செய்தி ஒற்றுமைக்கு உலை வைப்பது என்பது தெரிந்தும் ஏன் செய்கிறார்கள். ?

இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டும் தூர்தர்ஷனில் செய்தி படித்தால் போதும் என்று மத்திய அரசு முடிவு செய்ய என்ன காரணம்?   மத்திய அரசு மாநில மொழிகளில் கருத்து பரிமாற்றம் செய்வதை குறைத்துக் கொள்ள விரும்புகிறது என்றுதானே பொருள் ?

மெல்ல மெல்ல அனைத்து இந்திய பயன்பாட்டில் மாநில மொழிகள் குறைக்கப் பட வேண்டும் என்றும் அதன் மூலம் இந்தியின் தேவை உணரப்பட்டு மாநில மக்கள் இந்தி மொழி  பயன்பாட்டுக்கு ஈர்க்கப் பட வேண்டும் என்பதும் தான் டெல்லியின் நோக்கம்.

பா ஜ க ஆட்சிக்கு வந்ததில் இருந்தே சமஸ்கிருத மற்றும் இந்தியின் ஆதிக்கத்தில் ஒரே நோக்கத்தோடு செயல்படுகிறது.     அது இந்திய ஒற்றுமைக்கு உலை வைக்குமா என்பது  பற்றி அது கவலைப் படுவதாக  தெரியவில்லை.     அடக்கி ஆண்டவர்கள் அல்லவா?      இப்போதும் அடக்கி விடலாம் என்பதுவே அவர்களது எண்ணம.

அதேபோல் நெய்வேலி லிக்னைட் கார்பரேஷன் பெயரை இந்தியா லிமிடெட் என்று  சேர்த்திருக்கிறார் கள்.       ஏற்கனெவே மக்களிடன் இருந்து நிலம் கையகப் படுத்தும்போது கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப் படவில்லை என்ற போராட்டம் நிலுவையில் உள்ளது.

நிலக்கரி எடுப்பது தமிழ் நாட்டில்  அதன் பலன் எல்லா மாநிலங்களுக்கும் பகிர்ந்து அளிக்கப் படுவதை நாம் பெரிதாக ஆட்செபிக்காத நிலையில் ஏன் இப்போது பெயர் மாற்றம்.?

இந்தியா என்பது இருந்தால்தான் நாளை அயல்நாட்டு  நிறுவனங்களை உள்ளே நுழைத்து பயன் பெற முடியும் என்ற திட்டம் உள்ளதா என்ற ஐயம் எழுவதை எப்படி தடுக்க முடியும். ?

மொத்தத்தில் பா ஜ க என்பது மாநிலங்கள் என்பன தனித்து எந்த அடையாளத்தையும் கொண்டிருக்கக் கூடாது தனி அதிகாரத்தையும் கொண்டிருக்க கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறது.

அடக்கி ஆள முயற்சித்தவர்கள் வென்றதாக வரலாறே இல்லை என்பதை பா ஜ க உணரும் காலம் விரைவில் வரும்.