கேரள நீதிபதி வி. சிதம்பரேஷ் தமிழ் பிராமணர்கள் சந்திப்பில் உரையாற்றும்போது பிராமணர்கள் பொருளாதார இட ஒதுக்கீட்டுக்கு மட்டுமே குரல் எழுப்ப வேண்டும் என்று பேசியிருக்கிறார்.
தான் வகிக்கும் பதவி பற்றி பேசிவிட்டு பேசலாமா என்பது பற்றி சர்ச்சை வருமளவு பேசியிருக்கிறார்.
பிராமணர்கள் இரட்டை பிறவிகள். தனித்துவ பண்புகள் கொண்டவர்கள். தூய்மையான பழக்கம் உடையவர்கள். உயரிய சிந்தனை உடையவர்கள். பெரும்பாலும் சைவ உணவு உண்பவர்கள். கர்நாடக இசை பிரியர்கள். நற்குணங்கள் கொண்டவர்கள் என்றெல்லாம் புகழ்ந்து பேசியிருக்கிறார். அதுபற்றி எல்லாம் யாருக்கும் அக்கறை இருக்காது. அவரவரும் தங்களை புகழ்ந்து கொள்வதில் மற்றவருக்கு என்ன பிரச்னை.?
ஆனால் சமூக நீதிபற்றி ஒரு நீதிபதி கருத்து தெரிவிக்க்கும்போது கவனமாக இருக்க வேண்டாமா? இடஒதுக்கீடு என்பது சமூகம் அல்லது சாதி அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டுமா என்று அவர் கேட்டிருப்பது உச்சநீதி மன்ற தீர்ப்புகளுக்கு எதிரானது என்பதை அவர் அறிய மாட்டாரா?
அடக்கி வைக்கப்பட்ட கல்வி, மறுக்கப்பட்ட உரிமைகள், பறிக்கப்பட்ட மக்களைப் பற்றி நீதிபதி அங்கே பேசியிருக்க வேண்டும். கடந்த கால அநியாயங்களை சரி செய்ய முயற்சியுங்கள் என்று அவர்களை கேட்டிருக்க வேண்டும்.
சமூக நீதிக்கு பாதுகாப்பாக விளங்க வேண்டிய நீதிபதிகள் எத்தகைய கருத்துக்களை கொண்டிருக்கிறார்கள் என்பதை நினைத்தால் அச்சமாகத்தான் இருக்கிறது.
எப்படியோ மற்றவர்கள் விழிப்புணர்வு பெற இது உதவினால் சரி.