மதத்தில் இருப்பவன் முட்டாள் ! மதம் மாறுபவன் படுமுட்டாள்
மதத்தின் பேரால் உலகில் நடைபெறும் சர்ச்சைகளும் சண்டைகளும் அமைதியின்மையும் மதங்களின் மீது ஒருவித வெறுப்பை மக்களிடம் தோற்றுவித்திருக்க வேண்டும்.
மாறாக மதப் பிரச்சாரம் வளர்ந்து கொண்டே போவதன் காரணம் மதங்கள் ஆதிக்க சக்திகளின் பிடியில் வலுவாக சிக்கியிருப்பதுதான். மற்ற மதங்களை மதிப்பதாக உதட்டளவில் சொல்லிக்கொண்டே தன் மதப் பிரசாரத்தை வலுவாக்கிக் கொண்டேயிருக்கிறார்கள்.
பிறக்கும் குழந்தைக்கு பெற்றோரின் மதத்தை திணிக்கும் செயலில் நியாயம் இருக்கிறதா?
இந்த நடைமுறையை மாற்ற சட்டம் கொண்டு வந்தால் என்ன? பதினெட்டு வயது வந்தபின்தான் ஒருவருக்கு தன் மதத்தை தேர்ந்தெடுக்கும் உரிமை வழங்கப் பட வேண்டும்.
கிறிஸ்துவும் முஹம்மது நபியும் பிறந்து பல நூற்றாண்டுகளுக்கு பிறகுதான் பைபிளும் திருக்குரானும் அவர்கள் காலத்தில் வாழ்ந்தவர்கள் தந்த சாட்சியத்தை அடிப்படையாக வைத்து தொகுத்ததாகவும் அதிலும் பல்வேறு திருத்தங்களை மேற்கொண்டு சாட்சியம் இல்லாதவற்றை நீக்கிவிட்டு திருத்தி இறுதி வடிவம் கொடுத்ததாக வரலாறு கூறுகிறது.
எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக்கொண்டு விட்டால் ஏதோ ஒன்றுதான் உண்மை என்றாகிவிடும். மற்றது பொய் . இந்த விவாதம் தேவைதானா?
எல்லாவற்றிலும் இருக்கிற நன்மைகளை மட்டும் ஏற்றுக்கொள்வோம் என்றால் அதற்கு ஒருவர் அந்த மத அடையாளத்தை சுமந்து திரிபவர் ஆக இருக்க வேண்டும். அறிவாயுதத்தை விட இன்று கொலை ஆயுதமே வெற்றி பெற நம்பப்படுகிறது.
இந்து என்பது ஒரு மதமே அல்ல , அது ஒரு வாழ்க்கை முறை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு சொன்ன பிறகும் , அதன் தீர்ப்பு அனைவரையும் கட்டுப்படுத்தும் , என்று அரசியல் சட்டம் சொல்லும் நிலையிலும் , அது ஒரு மதமாகவே மாநில மத்திய அரசுகளால் அங்கீகரிக்கப் படுவது எப்படி?
தமிழன் இறை நம்பிக்கை உள்ளவன். அவன் இறைவன் எந்த மதத்தையும் சார்ந்தவன் அல்ல. அவன் வணங்கும் கடவுளர் அவன் முன்னோர்களே!! எந்த உருவத்திலும் மதம் சாரா இறைவனை அவனால் உணர முடியும். திருக்குரானில் 1,25,000 தூதர்கள் மண்ணில் வந்திருக்கிறார்கள் என்றும் இன்று பல மதங்களால் அடையாளங்காட்டப்படும் அனைவருமே முந்தைய நபிமார்களின் எண்ணிக்கையில் அடங்குபவர்கள் என்றும் சொல்கிறார்கள்.
இன்று எத்தனை பேர் எல்லா மதங்களையும் ஆய்ந்து தெளிந்து மதத்தில் இருக்கிறார்கள்? திணிக்கப் பட்ட மத அடையாளத்தைதானே சுமந்து திரிகிறார்கள்.
ஆன்மிக பாதை காட்டுகிறோம் என்று சொல்லி இருட்டில் வைத்துக்கொண்டு ஆதாயம் அடைய முயற்சிக்கிறார்கள்.
இப்படி ஆய்ந்து தெளிந்து மதத்தை தேர்ந்தெடுக்காதவர்களை முட்டாள் என்று சொல்வது எப்படி தவறாகும்?
இருக்கும் மதத்தின் உண்மைகளையே முற்று முழுதாக அறிந்து கொள்ளாமல் அல்லது ஆராயாமல் மற்றொரு மதத்தை தேர்ந்தெடுப்பவனை படு முட்டாள் என்று கூறுவது எப்படி தவறாகும்?
சரியோ தவறோ, ஆராய்ந்தோ ஆராயாமலோ ஒருவன் தனக்கு அதில் மகிழ்ச்சி ஏற்படுகிறது என்பதற்காக அல்லது ஆதாயத்திற்காக, தனக்கு இருக்கும் தனி மனித உரிமையை பயன் படுத்தி மதம் மாறுவது தவறு என்றோ குற்றம் என்றோ சொல்பவனை உலா மகா முட்டாள் என்று சொன்னால் அது எப்படி தவறாகும்???
எவர் மனதையும் புண் படுத்தும் நோக்கம் நமக்கில்லை. ஏதோ ஒரு மதத்திற்கு சாமரம் வீசினால் மட்டுமே உள் நோக்கம் கற்பிக்க முடியும். இது சிந்தனையை தூண்டும் நோக்கத்தை மட்டுமே கொண்டது என்பதால் சிந்திப்பீர் உலகத்தீரே!!!!