அத்திவரதரை தரிசனம் செய்ய தினமும் ஒன்று முதல் ஒன்றரை லட்சம் பேர் வருகிறார்களாம். இத்தனை பேர் வருவார்கள் என எதிர்பார்க்க வில்லை என்று முதல்வர் பழனிசாமி சட்ட மன்றத்தில் கூறுகிறார்.
திருப்பதியில் கூட தினமும் 75000 பேர்தான் தரிசனம் செய்ய முடியும். ஆனால் இங்கே தினமும் ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் பேர் எப்படி தரிசனம் செய்ய முடியும்?
கூட்ட நெரிசலில் சிக்கி இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் மரணம் அடைந்திருக்கிறார்கள். எல்லாம் வயதானவர்கள்.
தலா ஒரு லட்சம் நிவாரணம் அறிவித்து விட்டார் முதல்வர். போதுமா? கவனக்குறைவுக்கு யார் பொறுப்பு?
அரசு தனது பொறுப்பை தட்டிக் கழிக்க முடியாது. இனியாவது இத்தகைய கொடுமைகள் நிகழாமல் தடுக்க வேண்டும்.
சாய்ந்தால் சாய்கிற பக்கம் சாய்கிறவர்கள் பக்தர்கள். பத்திரிகைகளும் தொலைக் காட்சிகளும் கொடுக்கும் விளம்பரத்தில் மயங்கி ஒருமுறையாவது தரிசனம் செய்து விட வேண்டும் என்ற ஆவலில் குழுமுகின்றனர்.
அதை பயன்படுத்திக் கொண்டு வணிகம் செய்பவர்கள் முதற்கொண்டு பக்தர்களை வதைக்கிறார்கள்.
நம்பிக்கை உள்ளோர் கூடும்போது அவர்களுக்கு உரிய பாதுகாப்பை கொடுக்க வேண்டியது அரசின் கடமை.
இதுவரை முப்பது லட்சம் பேர் கூடினார்கள் என்று சொல்கிறார்கள். எந்த பக்தரும் தரிசனம் செய்து விட்டு சும்மா திரும்புவதில்லை. அவர்கள் தரும் காணிக்கைகள் எப்படி பாதுகாக்கப்படுகின்றன. இந்து அறநிலையத் துறை தன் கட்டுப்பாட்டில் தான் வைத்திருக்கிறதா? அதில் ஏதும் முறைகேடு நடைபெற வழியில்லையா என்பதையெல்லாம் அறிய பொதுமக்களுக்கு உரிமை உள்ளது.
ஏன் என்றால் தாத்தாச்சாரியார் ஒருவர் தாங்கள்தான் அத்திவரதர் இருப்பதை கண்டுபிடித்து சொன்னோம் என்று தனி உரிமை கோருவதாக செய்திகள் வருகின்றன. அதில் எந்த அளவு உண்மை இருக்கிறது என்பதையும் அறநிலையத்துறை விளக்க வேண்டும்.
உயிரை பலி கொள்ளும் அளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்திருக்கின்றன என்பதால் தமிழக அரசே முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும்.
உயிர்ப்பலி வரதனுக்கே அடுக்காது??!!
This website uses cookies.