மதம்

அத்திவரதர் வளர்ப்பது பக்தியா? மூடநம்பிக்கையா? உண்டியல் வசூலா??!!

Share

பக்தியே!

இதுவரை எழுபது லட்சம் பேர் தரிசித்திருக்கிறார்கள். தினமும் ஒரு லட்சத்தில் இருந்து நாலு லட்சம் வரை. எல்லாம் தாங்களாகவே தங்கள் செலவில் வந்தவர்கள். நாற்பது ஆண்டுகளுக்கு பிறகுதான் அவரை மீண்டும் தரிசிக்க முடியும் என்ற தகவல் நம்பிக்கையாளர்களுக்கு ஒரு உந்துதலை ஏற்படுத்தி இருந்தது. இவர்கள் எவரும் பக்தியை அறிவைக் கொண்டு அளப்பவர்கள் அல்ல. நம்பிக்கை நம்பிக்கை நம்பிக்கை. அது மட்டும்தான் அவர்களுக்கு தெரியும். பத்திரிகைகளில் எழுதப்பட்ட வரலாறுதான் ஆதாரம். திருப்பதி வேங்கடாஜலபதியும் இவரும் வெவ்வேறானவர்களா அல்லது கருவறையில் இருக்கும் வரதரும் இவரும் வெவ்வேறானவர்களா என்பதெல்லாம் பக்தர்களுக்கு பொருட்டல்ல.

அகில இந்திய அளவில் ஆர்எஸ்எஸ் மௌனப் பிரச்சாரம் செய்தது. நம்பிக்கை உள்ளவர்களை காஞ்சி நோக்கி படை எடுக்க உந்து சக்தியாக இருந்தது. அந்த பிரசார பலம் இந்தியாவில் யாருக்கும் இல்லை.

எல்லாரும் போகிறார்கள். நாம் போக வேண்டும். குடும்பம் குடும்பமாக ஊரோடு சேர்ந்து செல்வது ஒரு தனி அனுபவம். குடும்ப பிரச்னைகள் இல்லாத குடும்பங்கள் இல்லை. அவர் அவர்கள் பிரச்னை தீர நிச்சயம் அத்திவரதர் உதவுவார். செம்மறி ஆட்டுக் கூட்டம் என்று யாராவது விமர்சித்தால் கூட அதைப்பற்றியெல்லாம் கவலைப்படும் மனநிலையில் பக்தர்கள் இல்லை. எல்லாவற்றையும் விட தரிசனத்தில் கிடைக்கும் மனநிம்மதி போதும். பக்தி என்பதற்கு வேறென்ன விளக்கம் வேண்டும்? 

மூட நம்பிக்கையே! 

1791ல் தான் அத்திவரதர் வரலாறு தொடங்குகிறது. அதாவது வெறும் 228 ஆண்டுகளுக்கு முன்னர்தான். அவரது வரலாறு குறித்தோ இப்போது கடைப்பிடிக்கப்படும் நடைமுறைகள் பற்றியோ கல்வெட்டோ குறிப்புகளோ இல்லை என்று கல்வெட்டு ஆய்வாளர் நாகசாமி கூறுவதாக இந்து முன்னை ஆர் ஆர் பாலாஜி கூறுகிறார். யாகம் செய்யும்போது நெருப்பு பட்டு வரதர் உடல் பாதிக்கப்பட்டதால் அவர் தண்ணீருக்குள் வைக்கப்பட்டார் என்பதுதான் புராணக் கதையாக பத்திரிகைகள் சொல்கின்றன.

மூலவர் கற்சிலையாகவும் அத்தி மரத்தால் செய்யப்பட்ட வரதர் தண்ணீரிலும் இருக்கிறார்கள். இறைவனை தீ பற்றுமா என்பது இருக்கட்டும். இந்த பக்தர்கள் இப்படி கூறப்படும் கதைகளை நம்பிக்கொண்டு இருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா? எத்தனை பேருக்கு இந்தக் கதைகள் தெரியும்? மாயோன் தமிழ்கடவுள்.    அவர் வேறு இவர் வேறா? அதைப்பற்றியெல்லாம் எந்த பக்தர்களும் கருத்து சொல்ல மாட்டார்கள். வரலாறு உண்மை என்றால் ஏன் இத்தனை யுகங்கள் காத்திருந்து வெளிப்பட வேண்டும்? எனவே பார்ப்பனீயம் வளர துணை செய்ய அத்திவரதர் பயன்படுகிறார். மூடநம்பிக்கை வளர்ந்தால்தான் நாம் வாழ முடியும் என்ற உண்மையை உணர்ந்தவர்கள் கூட்டுவதே இந்த கூட்டம்.

உண்டியல் வசூலே!

இதுவரை உண்டியல் வசூல் ஐந்து கோடியை தாண்டி போய்க்கொண்டிருக்கிறதாம். அதுவும் பார்ப்பனர்கள் சதி செய்து உண்டியல் அதிகம் வெளியே தெரியாதவாறு பார்த்துக் கொள்கிறார்களாம். அறநிலையத்துறை கண்காணிப்பில் இது சாத்தியமில்லை என்றாலும் துறையே அவர்கள் கைகளில் தானே இருக்கிறது. எதை  எப்படி செய்ய வேண்டும் என்பதை அவர்கள் தானே தீர்மானிக்கிறார்கள்.

அர்ச்சகர்கள் ஒவ்வொருவருக்கும் தினமும் இரண்டு லட்சம் முதல் மூன்று லட்சம் வரை வசூல் ஆவதாக சிலர் கூறுகிறார்கள். இதைப்பற்றி உண்மைதகவல்களை அதிகாரிகள் தான் தர வேண்டும். ஆனால் உண்டியல் வசூல் இதில் முக்கிய  பங்கு வகிக்கிறது. பெரிய கோவில்கள் எல்லாவற்றிலும் வசூல்தான் பிரதானம். அதிகம் வசூலித்தால் அது பெரிய கோவில். அதில் பலன் அடைகிறவர்கள் பார்ப்பனர்களாக இருக்க வேண்டியது அவசியம். யார் யாரோ பலனடைய எந்த பார்ப்பான் வேலை செய்வான்? பண வசூலை பிரதானப் படுத்தாத பெரிய கோவிலே இல்லை. அதைத்தான் அத்திவரதரும் செய்கிறார்.

இதில் எதில் உண்மை இருக்கிறது என்பதை பொதுமக்கள் விவாதித்து முடிவெடுத்துக் கொள்ள வேண்டியதுதான். 

This website uses cookies.