1809 ல் பிறந்து 1833 ல் புதுப்பிறவி எடுத்து 1851ல் மறைந்த அய்யா வைகுண்டர் கண்ட வழி தனி மதமே?!
அவரை இந்து மதம் என்ற பார்ப்பனீய மதத்தில் அடக்குவது அவருக்கு செய்யும் துரோகம். தன் வாழ்நாளில் வர்ண தர்மத்தை ஏற்காதவர் அவர் .
ஏறத்தாழ வடலூர் வள்ளலாரின் சம காலத்தவர் அய்யா வைகுண்டர்.
தமிழ் நாட்டில் வள்ளலார் செய்த புரட்சியை அய்யா வைகுண்டர் கேரள மாநிலத்தில் செய்தார். அவரது பிறந்த கன்னியாகுமரி மாவட்டம் அப்போது கேரள மன்னன் சுவாதி திருநாள் ஆட்சியில் இருந்தது.
சம்பூர்ணதேவன் என்கிற முத்துக்குட்டி க்கு பிறந்தபோது தந்தை பொன்னு நாடார் இட்ட பெயர் முடிசூடும்பெருமாள். அப்படி எல்லாம் பெயர் வைத்துக்கொள்ள அப்போது நாடார் இனத்தவருக்கு உரிமை இல்லை. புகார் செய்யப்பட்டதால் பெயரை முத்துக்குட்டி என்று மாற்றிகொண்டார்கள்.
அவர் முன்பே திருமணம் ஆன திருமலம்பாளுடன் வாழ்ந்து ஒரு பிள்ளையை பெற்று எடுத்ததாகவும் வரலாறு.
பின்னர் தனது 24 வது வயதில் திருச்செந்தூர் கோவிலில் வழிபட சென்று கடலில் காணாமல் போய் மூன்றாவது நாளில் ஸ்ரீமன் நாராயணனின் மறு அவதாரமாக மீண்டு வந்ததை தான் அவரது அவதார தினமாக பக்தர்கள் கொண்டாடுகிறார்கள். அதாவது 1833 ம் ஆண்டு முதல் அவர் வைகுண்டம் திரும்பி அடக்கமான 1851 ம் ஆண்டு வரையிலான பதினெட்டு ஆண்டுகளில் அவர் ஆற்றிய தெய்வீகப் பணி தான் அவரை அய்யாவழி மரபை உருவாக்கிய மகானாக உயர்த்தி வைத்திருக்கிறது.
இடையில் அவரது புகழ் பெருகத் தொடங்கியவுடன் புகார்களும் சென்று மன்னன் சுவாதி திருநாள் வைகுண்டரை சிறையில் 110 நாள் அடைத்து வைத்த கொடுமையும் நடந்தது.
சிறையில் இருந்து மீண்டவர் சுவாமிதோப்பு பதியில் தனது பணியை தொடர்ந்து செய்து அரிய புகழ் பெற்று தனி வழியை படைத்து மறைந்தார்.
நாடார் பெருமக்களுக்கு அந்த காலத்தில் அரசு செய்து வந்த அடக்கு முறைகளால் மனம் வெந்து சுயமரியாதையை யும் சமூக அந்தஸ்தையும் அச்சம் அகற்றலையும் போதித்த புரட்சியாளார் அவர்.
பிசாசு என்பதெல்லாம் இல்லை, நோய் என்பது இல்லை வலி என்பது இல்லை , வரி என்பதும் இல்லை, எனவே துணிவுடன் வாழுங்கள் என்று போதித்த பின்னணியில் அந்த காலத்து அரசியல் இருக்கிறது.
அன்று அவரது சீடர்களாக ஐந்து பேர் இருந்திருக்கிறார்கள் . ஆனால் அவரது புகழ் தமிழகம் முழுதும் பரவாமல் இருந்ததுதான் வருத்தத்திற்கு உரியது.
பெரும்பாலும் அவரது பக்தர்கள் நாடார் சமூகத்தில் இருப்பதும் அந்த அரசியல் பின்னணியில்தான்.
எந்த சனாதனம் கற்பித்த நால்வருணத்தை ஏற்க மறுத்தாரோ அதே சனாதனம் அவரை தன்னுள் அடக்கிக் கொண்டதுதான் வரலாற்றின் சோகம்.
அவரின் பக்தர்களும் தெரிந்தோ தெரியாமலோ சனாதனத்துக்கு வால் பிடிக்கும் வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள்.
இன்று சுவாமிதோப்பு பதி வேரூன்றி விட்டது. எனவே சனாதனம் சுவாகா செய்யப் பார்க்கிறது. ஆம். இந்து அறநிலையத்துறை சுவாமிதோப்பு பதியை ஏற்கச் செய்ய சூழ்ச்சிகள் நடை பெறுகின்றன.
அரசே ஆலயத்தை விட்டு வெளியேறு என்று வெற்று கூச்சல் இடும் சனாதனிகள் சுவாமிதோப்பை அறநிலையத்துறை ஏற்பதை வரவேற்கிறார்கள். ஏனென்றால் அங்கே பார்ப்பனீயம் கோலோச்ச வில்லை. அதை விட்டு வைப்பதா என்ற ஆதங்கம்.
சுவாமிதோப்பு பதி தனது தனித்தன்மையை காத்துக் கொள்ள வேண்டும். அதற்கு தமிழர்கள் துணை நிற்க வேண்டும்.
‘அகில திரட்டு ‘ தமிழர்களின் ஆன்மிக வழிகாட்டு நூலாக வேண்டும்.
அங்கே நடை முறையில் உள்ள சம்பிரதாயங்கள் முக்கியம் அல்ல. அய்யா வைகுண்டர் போதித்த கருத்துக்களின் சாரம்தான் முக்கியம். அதை உள்வாங்கிக் கொண்டு தமிழ் சமுதாயம் மேன்மையுற வேண்டும்.
அதற்கு முதல் படியாக அய்யா வைகுண்டர் வழியை தனி மதமாக அங்கீகரிக்க மத்திய மாநில அரசுகள் முன்வரவேண்டும். அதற்கு அய்யா வழி பக்தர்கள் போராட வேண்டும். எல்லா தமிழ் மக்களும் அதற்கு துணை நிற்க வேண்டும்.
தமிழர் சமயங்களை ஒருங்கிணைக்க முடியாதா ? முடியும் என்பதை நிரூபிப்போம்.! அதுவே சனாதனத்தை முறியடிக்க ஒரே வழி!!!