தமிழகத்தில் உள்ள சாலைகள், நடைபாதைகள், அரசு புறம்போக்கு நிலங்கள் நீர்நிலைகள், அரசு அலுவலக வளாகங்கள் என எல்லா இடங்களிலும் கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள், என்று காணுமிடமெங்கும் ஆக்கிரமிப்புகள்.
பொது இடங்களில் வழிபாட்டு தலங்கள் இருக்க கூடாது என்று தமிழக அரசு சென்ற 1968ல் அரசாணை வெளியிட்டது. பின்னர் அதை அமுல்படுத்த 1994ல் உறுதி படுத்த ஆணையிடப்பட்டது. உயர்நீதி மன்றத்தின் மதுரை கிளை 2010ல் மதம் தொடர்பான நிகழ்ச்சிகள் அரசு அலுவலகங்களில் நடைபெறாமல் இருக்க உத்தரவிட்டது. 2009ம் ஆண்டில் உச்ச நீதி மன்றம் பொது இடங்களில் வழிபாட்டு தலங்களை கட்டுவதை தடை செய்து உத்தரவிட்டுள்ளது.
ஆனால் இவை எதுவும் அமுல்படுத்தப் படவே இல்லை.
இது தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கில் அரசு தமிழகம் எங்கும் 3168 வழிபாட்டு தலங்கள் ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ளன என்று தகவல் தரப்பட்டு உள்ளது. இதில் 3003 கோவில்கள் 131 தேவாலயங்கள் 27 மசூதிகள் அடங்கும். இவற்றை அகற்ற உத்தரவிடக்கோரி தொடுக்கப் பட்ட பொதுநல வழக்கில் அறிவிப்பு அனுப்ப உத்தரவிட்டது உயர்நீதி மன்றம்.
ஆனால் அதில் ஏன் எதிர்மனுதார் களாக வக்பு வாரியம் கிறிஸ்தவ தேவாலய அமைப்புகளை சேர்க்கவில்லை என்று கேள்வி எழுப்பியது நீதிமன்றம். தந்தை பெரியார் திராவிடர் கழகம் இப்படி பாகுபாடு காட்டி மனு போட்டிருக்க வேண்டியதில்லை.
அரசு அலுவலகங்களில் மத படங்கள் இருந்தால் யாரையாவது பொறுப்பாக்கி தண்டித்தால்தான் இந்த வழக்கம் நிற்கும்.
அவரவர்கள் வீட்டில் வைக்க வேண்டிய சாமி படங்களை ஏன் பொது அலுவலகத்தில் வைக்க வேண்டும்?
புகார் கொடுக்கலாம் என்று காவல் நிலையம் சென்றால் அங்கும் இதே நிலை. காவல் நிலையங்களில் எல்லாம் இப்படி படங்கள் இருந்தால் அவர்கள் மற்றவர்கள் மீது எப்படி நடவடிக்கை எடுப்பார்கள்?