வள்ளுவருக்கு காவி பூசிய களவாணிகள் தண்டிக்கப்பட வேண்டும்?
திருவள்ளுவர் தந்த திருக்குறள் உலகப் பொதுமறையாக கொண்டாடப்படுகிறது.
எம்மதமும் சாராத இறைக்கொள்கையே வள்ளுவம்.
இதில் இதுவரை எந்த குழப்பமும் ஏற்பட்டதில்லை.
ஆனால் பார்ப்பனர்கள் சிலர் வள்ளுவர் அந்தணர் மரபில் வந்தவர் என்று கட்டுக் கதைகளை பரப்ப முயன்றனர். எடுபடாத முயற்சியாகி விட்டது. இன்று பிரதமர் மோடி வள்ளுவரை புகழ்கிறார். திருக்குறளை மேற்கோள் காட்டுகிறார். ஏன் என்று எங்களுக்கு தெரியாதா?
உண்மையையும் உள்நோக்கத்தையும் பாகுபடுத்தி பார்க்கத் தெரியாதவர்களா தமிழர்கள்.
தாய்லாந்து சென்று அங்கு திருக்குறளின் தாய் மொழி ஆக்கத்தை வெளியிட்டு பெருமை சேர்த்திருக்கிறார் பிரதமர் மோடி.
அதைப் பாராட்ட முனைவதற்குள் இங்குள்ள பாஜகவினர் தங்கள் வலை தளத்தில் திருவள்ளுவருக்கு காவி உடை போட்டு நெற்றியிலும் கையிலும் திருநீறு பூசி அவரை சைவ சமயத்தை சார்ந்தவர் போல சித்தரிக்க முற்பட்டிருப்பது கடைந்தெடுத்த ஏமாற்று வேலை.
திருவள்ளுவரை அவமதித்திருக்கிறார்கள். குற்றம் இழைத்திருக்கிறார்கள். நீதிமன்றம் தலையிட்டு நீதி வழங்க வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்கட்டும்.
பொறுப்புள்ளவர்களாக இருந்தால் அவர்களாகவே முன்வந்து இந்த தவறான படத்தை உடனே நீக்க வேண்டும்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கிறதே மாநில அரசு ?
பல கட்சிகளும் இந்த செயலை கண்டித்து அறிக்கை விடுத்திருக்கிறார்கள். அரசு விழித்துக் கொள்ளுமா?
வெந்த புண்ணில் வேல பாய்ச்சுவதுபோல் சனாதன தர்மத்தை தான் வள்ளுவர் அறம் பொருள் இன்பம் என்று எழுதியிருக்கிறார் என்று ஒருவர் விளக்கம் சொல்கிறார்.
கடவுள் வாழ்த்தில் வள்ளுவர் சொன்ன ‘வாலறிவன் நற்றாள்‘ சொல்லாடலை சுட்டிக் காட்டி பாஜக வாதிடுகிறது.
முக ஸ்டாலின் யாகாவாரினும் நாகாக்க குறளை பிழையில்ல்மல் சொல்லி விட்டால் மேற்படி பதிவை நீக்கி விடுகிறோம் என்று பாஜக டிவிட்டர் கூறுகிறது. ஸ்டாலினுக்கும் உங்களுக்கும் உள்ள பிரச்னையை தீர்க்க திருவள்ளுவர் ஏன் பந்தாடப்பட வேண்டும்?
வள்ளுவர் நாத்திகர் என்று எப்போது யார் சொன்னார்கள்? பார்ப்பனீயத்தை ஏற்றுக் கொள்ளாத ஓரிறை கோட்பாட்டை வள்ளுவம் ஏற்றுக் கொள்கிறது.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவம் எப்படி பிறப்பின் அடிப்படையில் பேதம் கற்பிக்கும் சனாதனத்தை ஏற்றுக் கொள்ளும்.?