சுய சிந்தனை இல்லாத ஒருவனை உச்சத்தில் ஏற்றி வைத்தால் என்ன ஆகும் என்பதை ரஜினிகாந்த் வடிவத்தில் இன்று தமிழ் சமூகம் அனுபவித்துக் கொண்டிருக்கிறது.
துக்ளக் விழாவில் யாரோ எழுதிக் கொடுத்த வசனத்தை ஒப்பித்து தனது தற்குறித் தனத்தை வெளிக்காட்டி இருக்கிறார் ரஜினி.
துக்ளக் சோவை பாராட்ட வேண்டுமென்றால் அது அவரது விருப்பம். ஆனால் அதற்காக பெரியாரை நிந்தித்து திமுகவை வம்பிழுக்க வேண்டுமா?
பெரியாரின் தாக்கம் தமிழகத்தில் இருக்கும்வரை சனாதன தர்மத்தை இங்கு நிலைநாட்ட முடியாது என்பதை உணர்ந்தவர்கள் தொடர்ந்து செய்து வரும் சூழ்ச்சியின் விளைவுதான் ரஜினியின் பேச்சு.
1971ல் சேலம் மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாட்டில் ராமர் படத்துக்கு செருப்பு மாலை போட்டார் பெரியார் என்றும் அதை துக்ளக் பிரசுரித்தது என்றும் ரஜினி பேசியிருக்கிறார்.
அதை 2017 ல் வெளியான அவுட்லுக் இதழில் வந்த கட்டுரையை மேற்கோள் காட்டி அதில் வெளியானதைத் தான் பேசினேன் என்கிறார் ரஜினி.
ரஜினி அந்த அளவு படிப்பாளரா? யாரோ எடுத்துக் கொடுத்ததை ஒப்பித்திருக்கிறார் என்பது தெளிவு. ஏன் என்றால் துக்ளக் சோ அவசர நிலை பிரகடனம், தமிழ் எழுத்து சீர்திருத்தம், மூடநம்பிக்கையா பக்தியா, இட ஒதுக்கீடு, பார்ப்பனீயம், என்று பல பிரச்னைகளில் ஏறு மாறான கருத்துக்களை கொண்டிருந்தவர்.
அவரது சிறப்பு நையாண்டி. சரியான வழியை சொல்வது தான் கடினம். எதையும் நகைச்சுவையாக நக்கல் அடிக்கலாம். அதில்தான் சோ கைதேர்ந்தவர். பார்ப்பனீயத்தின் பிரதிநிதி.
முரசொலி வைத்திருந்தால் அவர் திமுகவாம். துக்ளக் வைத்திருந்தால் அவர் புத்திசாலியாம். எல்லாம் அவரவர் கண்ணோட்டம். இரண்டின் செல்வாக்கு என்ன? ஒப்பிட முடியுமா? முரசொலி ஒரு தத்துவத்தின் அடையாளம். துக்ளக் அடிமைகளின் அடையாளம். இப்படியும் சொல்லலாம் அல்லவா?
எதிர்ப்பு அதிகமானதால் அது மறுக்க வேண்டிய விடயமல்ல. மறக்க வேண்டிய ஒன்று என்கிறார். மன்னிப்பு கேட்க மாட்டாராம். பெரியாரை அவமத்தவரை எப்படி மன்னிக்க முடியும்?
பார்ப்பனீயம் எதை எதிர்பார்க்கிறது என்றால் ரஜினி பெரியாருக்கு எதிராக பேச வேண்டும். யாராவது எதிர்த்தால் அவர்களை ரஜினி ரசிகர்கள் எதிர்க்க வேண்டும் என்பதுதான். அது மட்டுமல்ல அவர்கள் பெரியாருக்கு எதிராகவும் பேசவேண்டும். இப்படியாக பெரியாருக்கு எதிரான குரல்கள் ஒலிக்க வைக்க வேண்டும் என்பதுதான். தமிழர்கள் பார்ப்பனீயத்தின் இந்த சதியை புரிந்து கொண்டு ரஜினியை பேசியதை பெரிது படுத்தாமல் சட்ட பூர்வ நடடிக்கை மட்டும் தொடர்ந்தால் போதும்.
அதிமுகவின் ஜெயக்குமாரும் ஒபிஎஸ்ம் மறைமுகமாக ரஜினியை கண்டிக்கிறார்களே தவிர நேரடியாக சொல்ல வேண்டாமா?
திரையில் ரசித்தொமோ பொழுது போக்கினோமா என்று விட்டு விடாமல் அவர்களுக்கு அரசியல் மரியாதை கொடுக்க துவங்கிய வரலாற்று தவறுகளை தமிழர்கள் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள்.
அந்த தவறு ரஜினி விடயத்தில் தொடரக் கூடாது.
அதுவும் ரஜினி என்ற அம்பை யார் எய்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டால் அந்த தவறு நிகழாது.