பால்ய சாமியார்களை தடை செய்ய சட்டம் கொண்டு வா??!!

paalya-vivagam
paalya-vivagam

பால்ய விவாகம் இந்து பார்ப்பன மதத்தில் ஏற்கப் பட்ட ஒன்றாக இருந்தது பல தலைமுறைகளாக .

ஒரு வழியாக சட்டப்படி அது தடை செய்யப்பட்டுவிட்டது.  இருந்தாலும் இன்னமும் அங்கும் இங்கும் அதுவும் நடந்து  கொண்டுதான் இருக்கிறது.

சட்டமாவது இருக்கிறதே.

ஆனால் கும்பமேளா நடந்து வரும் பிரயாக்ராஜ் நகரில்  கூடும் லட்சகணக்கான கூட்டத்தில் பார்க்கும் போதுதான் எத்தனை ஆழம் நம்பிக்கை ஊடுருவி மக்களின் வாழ்க்கை நிலைகளை பாதித்து இருக்கிறது என்று தெரிகிறது.

சன்யாசின் அகாடா அமைப்பு பெண் சாமியார்களுக்கு விலக்கு ஏற்படும் மூன்று நாட்களுக்கு விடுப்பு கொடுத்து மற்ற வகைகளில் பங்கேற்க வசதி செய்து கொடுக்கிறது.

பால்ய சாமியார்கள் என்று சொல்லும் பத்து வயது சிறுவர்கள் மத அடையாள சின்னங்களை சுமந்து கொண்டு நீராடுவது முதலான பல வகை சடங்குகளையும் செய்கிறார்கள்.

இதை அவர்கள் அறிவு பூர்வமாக தேர்ந்தெடுத்து செய்வதாக சொல்ல முடியுமா?

அவர்கள் பெற்றோர்கள் அவர்களை இதில் ஈடுபடுத்தி இருக்க வேண்டும்.   அல்லது யாராவது உள் நோக்கத்தோடு அவர்களை பயன் படுத்திக் கொண்டிருக்க  வேண்டும்.

சங்கர மடத்தில் கூட இளம் பிராயத்திலேயே பெற்றோர் சம்மதத்துடன் ஒருவரை மடத்துக்கு அனுப்பி  இள வயதிலேயே துறவு பூண வைக்கிறார்கள்.

அதுவே கூட சரியா என்ற விவாதம் தேவை. யாரும் யாராக வேண்டுமானாலும் ஆகட்டும். அந்த வயது வரும்போது. அதாவது எதுவாக ஆக வேண்டும் என்று தீர்மானிக்கும் தகுதி  வரும்போது. அது பதினெட்டு வயதில் தான் வரும். அப்போதுதான் அரசியல் சட்டம் ஒருவரை மேஜர் என்கிறது. அதாவது தன் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் திறன் படைத்தவர் என்று அங்கீகரிக்கிறது.

வாக்குரிமையும் அப்போதுதான் தரப்படுகிறது.

திருமணம் செய்து கொள்ள, வாக்களிக்க, எல்லாவற்றிக்கும் வயது பதினெட்டு  ஆக வேண்டும் என்று சொல்லும் சட்டம் சாமியார் ஆக மட்டும் ஐந்து வயதில் ஆகலாம் என்பதை அனுமதிக்குமா?

பெரும்பாலும் பால்ய சாமியார்கள் என்பது இந்து மதத்துக்குள் தான் இருக்கிறது  .  கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களில் பால்ய சாமியார் ஆவது வழக்கம் இல்லை.  இருந்தாலும் குற்றமே!

பாஜக ஆட்சியில் இது நடக்காது. ஆட்சி மாறட்டும். கோரிக்கை வலுவடையும்.