தஞ்சை பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு காவி ஆடை போர்த்தி விபூதி அணிவித்து தீப தூபம் காட்டிய இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் காவல் துறையால் கைது செய்யப்பட்டு மாலை வரை காவல் நிலையத்தில் வைக்கப் பட்டு விடுவிக்கப் பட்டிருக்கிறார்.
இந்து மக்கள் கட்சியோ, அல்லது வேறு யாருமோ வள்ளுவரை தங்கள் மதத்தை சார்ந்தவர் என்று எழுதி வாதிடவும் புத்தகம் எழுதவும் கருத்துரை பரப்பவும் உரிமை உண்டு.
அதன் படி வள்ளுவரை கிறிஸ்தவர் என்று கூற கிறிஸ்தவர்களுக்கு உரிமை உண்டு. ஆனால் அவர்களுக்கு வள்ளுவர் சிலைக்கு அல்லது படத்துக்கு சிலுவை அணிவிக்க உரிமை கிடையாது. அது தண்டிக்கத் தக்க குற்றமாக்கப் பட வேண்டும்.
முஸ்லிம்கள் வள்ளுவரை இஸ்லாமியர் என்று கூறட்டும். போற்றட்டும் ஆனால் திருவள்ளுவருக்கு பச்சை ஆடை உடுத்தி குல்லா போட்டு அழகு பார்க்க உரிமை கிடையாது. அந்தச் செயலை செய்தால் அது தண்டிக்கத் தக்க குற்றமாக்கப் படவேண்டும்.
அதைப்போலத்தான் ஜைனர்களும், பல ஆய்வுகள் திருவள்ளுவரை ஜைனராக இருக்கலாம் என்று கருத்து தெரிவித்திருக்கின்றன அவர்களும் போற்றட்டும். ஆனால் அவர்கள் கூட தங்கள் சமய சின்னங்களை திருவள்ளுவர் மீது பூசக் கூடாது. அப்படி செய்தால் அது தண்டிக்கப் பட வேண்டிய குற்றமாக்கப் பட வேண்டும்.
அதைப்போல் இந்துக்கள் என்று சொல்லிக் கொள்வோரும் வள்ளுவரை இந்து என்று சொல்லிக் கொள்ளட்டும். அப்போது இந்து என்ற சொல்லே இல்லை என்ற வாதமெல்லாம் இருக்கட்டும். ஆனால் அவர்களுக்கு திருவள்ளுவருக்கு விபூதி பூசவும் ருத்ராட்சம் அணிவிக்கவும் காவி உடுத்தவும் உரிமை இல்லை. சாணம் பூசுவதற்கு ஒப்பான செயல்கள் தான் இவை. அப்படி செய்வது தண்டிக்கப் படத் தக்க குற்றமாக்கப் படவேண்டும்.
யாரும் யாரையும் போற்றலாம். அவமதிக்க அதிகாரமில்லை
அப்படி செய்பவர்களை கைது செய்து வழக்கு போட்டால் தான் அப்படி செய்வதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறதா என்பதை நீதி மன்றம் ஆராயும். உரிமை இல்லை என்று நீதி மன்றம் சொல்லும் வரை இந்த வாதம் நீடித்துக் கொண்டு தான் போகும்.
அடுத்த ஆண்டு நாட்காட்டிகளை வள்ளுவருக்கு விபூதி பூசி காவி உடுத்தி வெளியிடுங்கள் என்று பாஜக அறிவுறுத்தி இருக்கிறது. முன்பு பட்டையும் காவியும் இருந்ததாம் நீங்கள் பூணூல் கூடத்தான் போட்டீர்கள் ஏற்றுக் கொள்ள முடியுமா? நீங்கள் செய்த அநியாயங்களை அக்கிரமங்களை ஒழிக்கத் தானே உதித்தது சுயமரியாதை இயக்கம்.
நாளையே கிறிஸ்தவர்கள் வள்ளுவருக்கு சிலுவை அணிவித்து படம் வெளியிடலாம் . முஸ்லிம்கள் குல்லா அணிவித்து படம் வெளியிடலாம். ஏற்கெனவே கமல்ஹாசன் முகத்தோடு வள்ளுவர் படம் வெளியான கொடுமையும் நடந்திருக்கிறது. வள்ளுவருக்கு கருப்பு ஆடை அணிவித்து படம் வெளியிடுகிறார்கள். அவர் நாத்திகராம் கடவுள் வாழ்த்து பாடியவர் எப்படி நாத்திகராக இருக்க முடியும்?
1964 ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் பக்தவத்சலம் முதல்வராக இருந்தபோது அனைவரிடமும் ஆலோசனை செய்து இறுதி செய்யப்பட்ட படம் அண்ணா ஆட்சிக்கு வந்த பின் அரசு அலுவலகங்களை அலங்கரித்து வருகிறது. அதை மாற்றுவது சமூக நல்லிணக்கத்துக்கு கேடு விளைவிக்கும்.
இருப்பதை மாற்றுவதற்கு உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? பட்டையையும் காவியையும் நீக்கியது தவறு என்பது உங்கள் கருத்தானால் இதுவரை மௌனிகளாக இருந்தது ஏன்? இந்த துணிவை ஆளுகிறோம் என்ற மமதை கொடுத்ததா?
எனவே அப்படி செய்து அரசியல் ஆதாயம் அடைய முயற்சிப்பவர்கள் மீது அரசு குற்ற நடவடிக்கைகள் எடுக்க உயர் நீதி மன்றம் சொல்லித்தான் அரசு செய்ய வேண்டும் என்பதில்லை. அரசு எடுக்கத் தவறினால் நீதி மன்றத்தை நாடுவதை தவிர வேறு வழியுமில்லை.
இந்த அசிங்கங்கள் நடவாமல் தடுக்க ஒரே வழி அப்படி செய்வதை தண்டிக்கத் தக்க குற்றமாக்குவதுதான்.
குற்ற நடவடிக்கைகள் எடுப்பதுதான்.
செய்யுமா தமிழக அரசு?