தீபாவளியை கொண்டாடுகிறவர்கள் பெரும்பாலானவர்கள் எதை மனதில் வைத்து கொண்டாடுகிறார்கள்?
தீமை என்ற இருள் அகன்று அனைவரது வாழ்விலும் ஒளி தோன்ற வேண்டும் என்பதே அனைவரும் விருப்பமும் வேண்டுதலும்.
மனிதர்கள் வாழ்வில் சந்திக்கும் எண்ணிலடங்கா பிரச்னைகளை ஒருநாளேனும் மறந்து குடும்பத்தாருடன் சுற்றத்தாருடன் நட்புகளுடன் கொண்டாடி மகிழ்வதே தீப ஒளித்திருநாள் .
இதற்கு எதற்கு மதச்சாயம்? தொடக்கம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். எத்தனை பேர் மதம் சார்ந்த சிந்தனைகளை இன்று பாராட்டுகிறார்கள்?
புராணக் கதைகளை இன்று நினைவு கூர்வோர் மிகச் சிலபேர்தான். மகாவிஷ்ணுவுக்கும் பூமாதேவிக்க்கும் பிறந்த நரகாசூரனை அவனது தாயின் அம்சமான சத்தியபாமா கொல்வதுதான் புராணக் கதை. அதாவது தாயே மகனைக் கொன்றதுதான் தீபாவளி பண்டிகை. அவன் இறந்த நாளை கொண்டாட அவனே கேட்டுக்கொண்டனாம்.
இதையே வட மாநில மக்கள் ராமர் வனவாசம் முடிந்து நாடு திரும்பிய நாளை வீடு தோறும் தீபங்களை ஏற்றி தீபாவளியாக கொண்டாடுகிறார்கள். வங்காளத்தில் காளி பூஜை செய்யும் நாளாகவும் குரு கோவிந்த் சிங் சீக்கிய அமைப்பான கால்சாவை அமைத்த தினமாகவும் புத்தர் நிர்வாண தீட்சை பெற்ற தினமாகவும் மாவலி சக்கரவர்த்தி முடிசூடிய தினமாகவும் இன்னும் பல்வேறு நிகழ்வுகளை முன்னிறுத்தியும் தீப ஒளித்திருநாள் கொண்டாடப் படுகிறது. எனவே இதற்கு மத சாயம் பூச வேண்டிய அவசியம் இல்லை. இந்த புராணக்கதைகளை தீபாவளி கொண்டாடுவோர் நினைவு கூறுகிறார்களா என்றால் இல்லை என்று உறுதியாக கூறலாம்.
அதை அங்கீகரிக்காதவர்கள் தான் பெரும்பான்மை. ஆனால் அவர்கள்தான் தீபாவளிதிருநாளை கொண்டாடி மகிழ்கிறார்கள்.
பழக்கப் பட்டு விட்டார்கள். வெந்நீரில் எண்ணெய்குளியல், புத்தாடை, இனிப்புகள் பண்டிகையுடன் இரண்டற கலந்து விட்டன. பாரம்பரியமாக கொண்டாடுவதை ஏன் நிறுத்த வேண்டும்? அந்த மகிழ்ச்சி குடும்பத்துக்கு சொந்தமானது. ஏன் அதை தவிர்க்க வேண்டும்.?
பட்டாசுகள் தீபாவளியின் ஒரு அங்கமாக சில நூற்றாண்டுகளாக உருவாகி இருக்க வேண்டும். சீனாவில் தோன்றிய பட்டாசு இந்தவுக்கு இறக்குமதி ஆகி சில பல நூற்றாண்டுகள் ஆகியிருக்கும். அதற்கும் பூர்விக பண்டிகைக்கும் சம்பந்தமே இல்லை. அதிலும் இப்போது உச்ச நீதி மன்ற தீர்ப்புக்கே பிறகு பட்டாசின் மகத்துவம் சிறிது சிறிதாக குறையும்.
தீபாவளி வாழ்த்து சொல்லும் அரசியல் தலைவர்கள் கூட புராண சம்பவங்களை மேற்கொள் காட்டுவதில்லை. அறியாமை இருள் அகல, துன்பம் நீங்க , மகிழ்ச்சி பொங்க என்று பொதுவாகத்தான் குறிப்பிடுவார்கள். அதிலும் திமுக, கம்யுனிஸ்டு தலைவர்கள் தீபாவளி வாழ்த்து சொல்வதில். அதில் பார்ப்பனீய மதத்தின் புராண கதைகள் தொடர்பிருப்பதால் வாழ்த்து சொல்வது அங்கீகரிப்பது ஆகிவிடும் என்ற அச்சம் காரணமாக இருக்கலாம்.
ஏனைய மதம் சார்ந்த விழாக்களுக்கும் தீபாவளிக்கும் இருக்கும் வேற்றுமைகள் ஏராளம்.
அவற்றை மனதில் கொண்டு தீபாவளியை மதம் சாராத பண்டிகையாக மற்றும் ஒரு பொங்கல் விழாவாக கொண்டாடுவதே தமிழர்களுக்கு சிறப்பு .
எந்த குறிப்பிட்ட இறைவனையும் வணங்க வேண்டியதில்லை. தீபத்தை ஏற்றி ஒளியை மட்டுமே வணங்கினால் கூட போதுமே.
This website uses cookies.