புராணக் கதையை நம்பி யாரும் தீபாவளியை கொண்டாடுவதில்லை.
ஏதோ பாரம்பரியம் என்று எதையும் சிந்திக்காமல் கொண்டாடும் வழக்கம் மறைந்து வருகிறது நம்பிக்கையை தருகிறது.
பார்ப்பனீயம் சொல்லித்தந்த புராணக் கதைகள் ஏட்டில் மட்டுமே இருக்கின்றன. அதற்கு ஆயிரம் விஞ்ஞான விளக்கம் சொல்லி நியாயப் படுத்தும் முயற்சிகளும் தொடர்கின்றன.
இரண்யாட்சன் பூமாதேவியை கடலுக்குள் மூழ்கடித்தான் என்றால் உலக உருண்டையான பூமி கடலையும் உள்ளடக்கியது தானே என்ற கேள்விக்கு என்ன பதில்?
நிலத்தை மட்டுமே கொண்ட பூமி எங்கே இருக்கிறது? யார் பிரிக்க முடியும்? பிரித்தால் பூமி என்பது உருண்டையாக நீடிக்கவே முடியாதே? மச்சாவதாரம் எடுத்த மகாவிஷ்ணு பூமாதேவியை கலந்து உருவானவன் நரகாசுரன் அவனை அழித்த நாள் தீபாவளி என்றால் ஏன் உலகத்தில் உள்ள பிற மனிதர்கள அதைப்பற்றி அறியாதவர்களாகவே இருக்கிறார்கள்?
பழமையை விட முடியாதவர்கள் தங்கள் சிந்தனையை செழுமைப் படுத்திக் கொள்ளலாம்.
தீமைகள் அகன்று நன்மைகள் பிறக்கட்டும் என்று இறைவனை ஒளி வடிவில் வணங்குவதே சிறப்பு!
பட்டாசு வெடிப்பது மாசு விளைவிக்கும் என்பதால் தவிர்ப்பது நல்லது.
அன்றுதான் புத்தாடை அணிய வேண்டும் என்றும் அவசியமில்லை.
தீபாவளி மட்டுமல்ல. பழகி விட்ட பல பண்டிகைகளை சீர்தூக்கி பார்த்து அதனதன் தன்மைக்கேற்ற வகையில் பார்ப்பனீய சடங்குகளை தவிர்த்து நம் வழியில் கொண்டாட பழகிக் கொள்வோம்.
முற்றாக உடனடியாக நிறுத்த முடியாத பார்ப்பனீய பண்டிகைகளை அதன் சடங்குகளை தவிர்த்து நம் தன்மைக்கேற்ற வகையில் கொண்டாடி மாற்றுப் பாதையை உருவாக்க உறுதி ஏற்போம்.
திமுக தவிர்த்த அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தீபாவளி வாழ்த்து தெரிவித்து செய்திகள் வெளியிட்டார்கள். அதில் மாற்று மதத்தினர் உட்பட எல்லாரும் அடக்கம். ஆனால் எவருமே தீபாவளியில் நரகாசுரன் வதம் பற்றி எதுவுமே சொல்ல விரும்பாமல் அல்லது சொல்ல வெட்கப்பட்டு அதை தவிர்த்து பொதுவாக தீமைகள் அகன்று நலம் பிறக்கட்டும் என்றோ ஒளி பிறக்கட்டும் என்றோ சொல்லித்தான் வாழ்த்தினார்கள்.
அந்த அளவுக்காவது சுயமரியாதையை பெற்றிருக்கும் இந்த தலைமுறை தமிழ் சமுதாயத்தை யாரும் அடக்கி ஆண்டு விடமுடியாது.