மகாபுஷ்கரம் தமிழர் பண்டிகை அல்ல !??

மகாபுஷ்கரம் தமிழர் பண்டிகை அல்ல !??

இந்த ஆண்டு மகா புஷ்கர விழாவை தாமிரபரணி ஆற்றில் கொண்டாட திட்டமிட்டு இருக்கிறார்கள்.     அது தமிழர்களுக்கு தொடர்பான விழாவா சைவர்கள், வைணவர்கள் யாருக்கு சொந்தம் என்ற கேள்விகள் எல்லாம் ஒருபுறம் இருந்தாலும் எல்லோரையும் இந்துக்கள் என்ற போர்வையில் பலதரப்பட்ட நம்பிக்கை உள்ளவர்களையும்,  கொண்டு வந்து விட்ட பிறகு நடைபெறும் விழாக்கள் தேவையா என்று ஆராய்ந்து அதன் பின்னரே அதை அனுசரிக்கவேண்டும் . பழக்கப்பட்டு விட்டீர்களா, குறைந்த பட்சம் அனுசரிக்கும் முன்பாக அதைப் பற்றி ஆராய வேண்டும்.

நம்பிக்கை உள்ளோர் எச்சரிக்கையுடன் பாதுகாப்புடன் நீராட வேண்டும் .  பார்ப்பனர்கள் எழுதி வைத்த புராணக் கதைகளை நம்பி பண்டிகைகளை கொண்டாடுபவர்கள் தான் இந்துக்கள் என்பதான ஒரு தவறான பிரச்சாரம் செய்யப்பட்டு விட்டது.      தமிழர்களுக்கு அந்நியமான பண்டிகைகள் புகுத்தப்பட்டு விட்டன. ஒரே நாளில் ஒழிக்க முடியாது. அதில் ஒன்று தான் புஷ்கரம்.

12 ஆறுகளை தேர்ந்தெடுத்து 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதில் லட்சக்கணக்கான  மக்களை வரவழைத்து அங்கே முன்னோர்களுக்கு பிரார்த்தனை செய்து திதி கொடுங்கள்  என்று அவர்களுக்குப் போதித்து அங்கே பார்ப்பன பண்டிதர்களுக்கு வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் உத்தியாகத்தான் இந்த புஷ்கர விழா நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன .   ஒவ்வொரு 12 ஆண்டிற்கும் ஒரு புஷ்கரம் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாபுஷ்கரம் என்று கொண்டாட வைத்துவிட்டார்கள்.

இதனுடைய தொடக்கம் எங்கே தெரிகிறது என்றால் 1426ல்  வெளியான ஜாதக பாரிஜாதம் என்ற நூலில் இதன் மூலம் வெளிப்படுகிறது .     அதாவது ஒருபிராமணனுக்கு அவனுடைய பக்தியை மெச்சி சிவன் ஒரு வரம் கொடுக்கிறார் .     அந்த வரம் என்னவென்றால் அவனுக்கு நீருக்குள் வாழ்ந்து கொண்டு புனித ஆறுகளை தூய்மைப்படுத்துகிற திறன் பெற்றவனாக அவன் வாழ்கிறான் .     அந்த பிராமணன் பெயர் புஷ்கரன் .

பிரகஸ்பதி கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவன் ஒரு கிரகத்திலிருந்து  மற்ற கிரகத்திற்கு அவர் மாறும்போது தானும் ஒரு நதியில் பிரவேசிப்பதாக தீர்மானிக்கிறான்.    இந்தியாவில் அந்த நதிகள் கங்கை நர்மதை, சரஸ்வதி, யமுனை, கோதாவரி, கிருஷ்ணா காவேரி ,   பீமா – தாமிரபரணி , தப்தி, துங்கபத்ரா, சிந்து, பர்நிதா ஆகியவை ஆகும். இதில் சரஸ்வதி நதி எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை.     பீமா நதி மகாராஷ்டிரத்திலும் தாமிரபரணி நதி தமிழ்நாட்டில் இருக்கிறது. ஆனால் இரண்டுமே ஒரே விருச்சிக ராசி யில் குரு புகும்போது நடக்கும் என்று சொல்கிறார்கள்.     

அவர்கள் எந்தப் புராணத்தை எழுதி வைத்தார்களோ  அவைகளைப் பற்றி இந்த விழாக்களில் கலந்துகொள்ள வரும் பக்தர்களுக்கு  சொல்ல மாட்டார்கள். அவர்கள் சொல்வதெல்லாம் முன்னோர்களுக்கு திதி கொடுங்கள்,  மத நம்பிக்கைகளை பிரச்சாரம் செய்யுங்கள், நதியை வழிபடுங்கள், நீங்கள் வேண்டியதெல்லாம் கிடைக்கும்,    இப்படித்தான் அவர்கள் பக்தர்களுக்கு பரப்புரை செய்கிறார்கள் .

திருமுறைகளை பாடச் செய்வதும்சுவாமி தீர்த்தவாரி நடத்துவதும் அதிலேயே ஒரு சில அங்கங்கள் .             ஹோமம் செய்வது யக்ஞம் செய்வது எல்லாம் பார்ப்பனர்கள் மட்டுமே செய்யக்கூடிய சடங்குகள் . இதை நடத்துவதற்கு ஒரு கமிட்டி அமைப்பார்கள்.      அவர்கள் எல்லா பக்கங்களிலும் நிதி பெறுவார்கள். அரசின் ஆதரவையும் தேடிப் பெறுவார்கள்.

தென்னாட்டை விட வட நாட்டில் இதன் தாக்கம் அதிகம்.   ராஜமுந்திரியில் கோதாவரி மகாபுஷ்கரத்திற்கு மூன்று கோடி பக்தர்களை எதிர்பார்த்தார்களாம்.     இந்த ஆண்டு தாமிரபரணி புஷ்கரத்தை காஞ்சி காமகோடி பீடம் நடத்துகிறது . இந்த விழா எத்தனை ஆண்டுகளாக  நடந்தது, , அதற்கு என்ன ஆதாரம , என்பவைகளை எல்லாம் நாம் இப்போது ஆராயத் தேவையில்லை. நதிகளை தாயைப்போல வணங்குவது என்பது வேறு .   நீராதாரத்தை பாதுகாப்பது என்பது வேறு. இந்த நதிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டு இருக்கின்றன . அவைகளை நிரந்தரமாக பாதுகாக்க வேண்டும் மதிக்க வேண்டும் என்றெல்லாம் சொன்னால் அதில் பகுத்தறிவு இருக்கும் .           ஆனால் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிற ஒரு நதியில் குறிப்பிட்ட நாளில் மட்டும் சென்று கோடிக்கணக்கில் மக்கள் நீராட வேண்டும் வழிபட வேண்டும் அங்கே திதி கொடுக்க வேண்டும் எல்லாம் பரப்புரை செய்து அவர்களை நம்ப செய்வது என்பது எப்படி பக்தி ஆகும் என்பதை அவர்கள்தான் விளக்க வேண்டும்.   

ஒரு பிராமணனுக்கு சிவன் கொடுத்த வரம் வேறு நாடுகளுக்கு செல்லுமா செல்லாதா என்பதையும் அவர்கள் தான் விளக்க வேண்டும்.       ஐரோப்பா ஆப்பிரிக்கா அமெரிக்கா கண்டங்களில் சென்று இதே மாதிரி ஆறுகளை தேர்ந்தெடுத்து புனிதப்படுத்த சொல்வார்களா? கடவுளை  நாம் நம்புகிறோம். அவருக்கு உருவம் கிடையாது என்றும் அதே நேரத்தில் பல ரூபங்களிலும் காட்சி தருவார் என்றும் நம்புகிறோம்.     இறைவனுக்கு எந்த சடங்குகளும் அத்தியாவசியம் இல்லை. எதையும் எதிர்பார்ப்பவன் இறைவனாக இருக்க முடியாது . தன்னால் படைக்கப்பட்ட ஜீவன்களுக்கு அனைத்தையும் அள்ளி தருவதே இறைவன் கடமை.     அதே நேரத்தில் தன்னை படைத்த இறைவனுக்கு நன்றியுடன் நடந்து கொள்வதே படைக்கப்பட்ட ஜீவன்களின் கடமை. அவ்வளவே. இதைத்தாண்டி பக்தி என்ற ஒன்று இருக்க வேண்டிய அவசியமில்லை.

பண்டிகைகளை மறுபரிசீலனை செய்யவேண்டிய கடமை தமிழர்களுக்கும் ஏனைய இந்தியர்களுக்கும் இருக்கிறது .       காலம் காலமாக ஒரு தவறான பழக்கத்துக்கு ஆளாகி இருந்தால் அதைத் தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை.       அரசும் பொறுப்பு உணர்ந்து நடக்க வேண்டும். நம்பிக்கையோடு வருகிற மக்களை பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது . நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ தாமிரபரணி ஆற்றில்   குறுக்குத்துறை சுப்பிரமணியர் கோயில் கொக்கிரகுளம் இரண்டு பகுதிகளில் படித்துறைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் அறநிலைத்துறை அங்கே பக்தர்கள் குளிக்க வேண்டாம் என்று தடை விதித்திருக்கிறது. .   ஏனைய இடங்களில் தடையேதும் இல்லை . சிந்தித்து செயல்பட்டு நம்பிக்கையில் பழக்கப் பட்டவர்கள் அங்கு எச்சரிக்கையுடன் சென்று பாதுகாப்புடன் எந்தவித அசம்பாவிதத்திற்கும் இடம் கொடுக்காமல் தாங்களாகவே பெயருடைய துணையின்றி வழிபாடு நடத்தி திரும்ப வேண்டும் என்பதே நமது வேண்டுகோள் .   

இன்னும் கூரிய  சிந்தனை உடையோர்  வீட்டில் இருந்தவாறே கூட வழிபாடு செய்யலாம்.