கோழிக்கோட்டில் இயங்கும் முஸ்லிம் கல்விக் கழகத்தின் தலைவர் கபூர் (Muslim Educational Society ) ஒரு சுற்றறிக்கையை தன் கீழ் இயங்கும் அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் அனுப்பி இருந்தார்.
அதில் யாரும் முகத்தை மூடும் உடை அணியக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருந்தது.
அதற்கு சன்னி மாணவர்கள் பெடரேஷன் ஆட்சேபணை தெரிவித்து இருக்கிறது. முன்பு அடிப்படை வாதிகளான சலாபி என்னும் பிரிவுக்கு ஆதரவு தந்த கல்விக் கழகம் இப்போது எதற்கு இந்த தடை விதிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பி இருக்கிறது.
பலர் கபூருக்கு மிரட்டல் தொலைபேசி அழைப்புகளை அனுப்பி வருவதால் அவர் காவல் துறையில் புகார் தெரிவித்திருக்கிறார.
இடையில் பர்க்கா என்னும் உடை பயங்கரவாதத்தின் அடையாளம் என்று கூறி பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர் சங்கீத் சோம் என்பவர் எரிகிற திரியில் எண்ணையை ஊற்றி இருக்கிறார்.
கள்ள வாக்கு போடுவதற்கு பர்க்கா உடை பயன்படுத்தப்படுகிறது என்பதும் அவரது வாதம்.
இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்துக்குப் பின்னர் இலங்கை அரசு அதை சாக்காக பயன்படுத்தி முஸ்லிம்களின் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. சாதாரண காலத்தில் தடை விதிக்க முடியாது. இப்போது அங்கே முகத்தை மூடும் உடை அணிய தடை விதிக்கப்பட்ட போது எதிர்ப்பதற்கு ஆள் இல்லை.
எந்த மத தீவிரவாதமும் கட்டுப்பாட்டில் இல்லையென்றால் பயங்கர வாதமாகத்தான் மாறும்.
தீவிரவாதம் என்றால் கொள்கையில் மிகவும் தீவிரமாக இருப்பது. அல்லது தான் கொண்ட கொள்கை மட்டுமே சரி என்று நம்புவது. அது கூட தவறு இல்லை.
ஆனால் அதுவே சிறிது காலம் சென்று அந்த கொள்கையை ஏற்றுக் கொள்ளாதவர்களை அடிமைப்படுத்த அல்லது இல்லாமல் செய்ய முயற்சிக்கும்போது அது பயங்கரவாத நடவடிக்கையாக மாறுகிறது.
தவிரவும் உடை பற்றி இஸ்லாம் முஸ்லிம்களுக்கு விதித்திருக்கும் அறிவுரைகள் தவிர்க்கக் கூடாதவையா அல்லது விருப்பம் சார்ந்ததா என்பதையும் அந்த சமுதாயம் தீர்மானிக்க வேண்டும். பாலைவனங்களில் வாழ்பவர்கள் அணியும் உடையை குளிர் பிரதேசங்களில் சமவெளி பிரதேசங்களில் வாழ்பவர்கள் அணிய வேண்டுமா என்ன?
பொதுவாக இஸ்லாம் சொல்வதாக நாம் அறிந்திருப்பது பெண்கள் உடை அணியும்போது ஆண்கள் மனதில் சலனம் ஏற்படுத்தா வண்ணம் அணிய வேண்டும் என்பதுதான்.
சிறிது காலம் முன்பு இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மகள் முகத்தை மூடி உடை அணிந்து வந்தபோது எழுந்த விமர்சனத்தை அவர் தனது இன்னொரு மகளும் மனைவியும் முகத்தை மூடாமல் பொதுவெளியில் நடமாடிய புகைப்படத்தை வெளியிட்டு, உடை அவரவர் விருப்பம் என்பதை மிகவும் நாகரிகமாக பதில் சொன்னார்.
இது பற்றி கருத்து சொன்ன ஜாவீத் அக்தர் என்ற பிரபல இந்தி திரைப்பட எழுத்தாளர் பர்க்காவையும் நீக்கட்டும் ஜுன்க்ஹிட் என்ற இந்து பெண்கள் முகத்தை மூடும் உடையையும் நீக்கட்டும் என்றார். வடநாட்டில் பல மாநிலங்களில் இந்து பெண்கள் முகத்தை சேலை தலைப்பால் மூடிக் கொள்வார்கள். அவரே ஈராக் பற்றியும் குறிப்பிட்டார். ஈராக் அடிப்படை முஸ்லிம் நாடு என்றாலும் அங்கு முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடும் உடை அணிவதில்லை என்றார். பல முஸ்லிம் நாடுகள் பெண்கள் சுதந்திரம் பற்றி வெவ்வேறு விதமான பழக்கங்களை கொண்டிருக்கிறார்கள்.
முஸ்லிம் சமுதாயமே அது பற்றி சிந்தித்து முடிவேடுப்பதுதான் நல்லதாகவும் சரியானதாகவும் இருக்கும்.
அது சரி. அவர்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை யார் களைவது?