பாமக பிரமுகர் படுகொலை; மதச் சண்டையை தூண்டும் சங்க பரிவார்; எச்சரிக்கை தேவை!!

ramalingam-pmk
ramalingam-pmk

பாமக பிரமுகர் படுகொலை

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் நகர முன்னாள் பாமக செயலாளர் ராமலிங்கம் .

கொஞ்ச நாட்கள் முன்பு வாட்ஸ் அப்பில் அவர் ஒரு முஸ்லிமுடன் வாக்கு வாதத்தில் ஈடுபடும்  காட்சி ஒன்று உலா வந்தது. அதில் அவர் அந்த  குல்லா அணிந்த முஸ்லிமை பார்த்து நீங்கள் உங்கள் தெருவில் எங்களுக்கு வீடு தருவீர்களா நாங்கள் எங்கள் தெருவில் உங்களுக்கு வீடு தருகிறோமே, என்றும் நாங்கள் எங்கள் சாமிக்கு படைத்த உணவை கொடுத்தால் வாங்கிக் கொள்வீர்களா நாங்கள் உங்களிடம்  வாங்கிக் கொள்கிறோமே என்றெல்லாம் வாதிட்டுக் கொண்டிருந்தார். அந்த முஸ்லிம் சிரித்துக் கொண்டே ஒரு சில வார்த்தைகளை சொல்லிக் கொண்டு மறுத்து வந்தார்.

நேற்று அவர் இரவில் வீட்டுக்கு வந்தபோது காரில் வந்த சிலர் அவரது இரு கைகளையும் வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளனர். மருத்துவமனை செல்லும் வழியில் அவர் இறந்திருக்கிறார். காவல் துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.

சம்பவம் தொடர்பாக முஸ்லிம் நபர்கள் ஐந்து பேர் கைது செய்யப் பட்டதாக ஊடக செய்தி ஒளிபரப்பியது. முதல் கட்ட விசாரணையில் மத மாற்றம் செய்வதை தட்டி கேட்டதால் இந்த கொலை நடந்த தாக போலீசார் கூறியுள்ளனர். உண்மையாக இருந்தால் அது ஆபத்து.

பாஜக-வின் எச்.ராஜா இறந்த ராமலிங்கம் வீட்டுக்கு சென்று துக்கம் விசாரித்து விட்டு சென்றதுடன் பாஜக-வின் கருப்பு முருகானந்தமும் இதை பெரிதுபடுத்தி அரசியல் ஆதாயம் அடைய முயற்சிப்பதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

இடையில்  சீமானும் இது தொடர்பாக உண்மை குற்றவாளிகளை கைது செய் என்று ஒரு கோரிக்கையை வைத்து கைது செய்யப்பட்டவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல என்ற தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக செய்திகள் வருகின்றன.

நடப்பன நல்லதற்கல்ல என்று மட்டும் தெரிகிறது.

காவல்துறை விரைவாக செயல்பட்டு குற்றவாளிகளுக்கு  தண்டனை வாங்கிக் கொடுப்பதன்மூலம் தான் பிரச்னை பெரிதாகாமலும் மதச்சண்டை உருவாகாமலும் தடுக்க முடியும்.

குற்றவாளிகள் முஸ்லிம்களாகவே இருந்தாலும் எல்லா முஸ்லிம்களும் இதற்கு உடந்தையாக இருக்கிறார்கள் என்று பிரச்சாரம் செய்வது எப்படி சரியாகும்?

குற்றவாளிகள் எந்த மதத்தையும் சேர்ந்தவராக இருக்கலாம். அவன்தான் தண்டிக்கத் தக்க குற்றவாளியே தவிர அவன் சார்ந்த மதத்தை சேர்ந்தவர்கள் அத்தனை பேரும் குற்றவாளிகள் என்று முடிவு கட்ட முடியுமா? அவன் இந்துவாக இருந்தாலும்  முஸ்லிமாக இருந்தாலும் அவனை தண்டிக்க வேண்டுமே தவிர அவன் சார்ந்த மதத்தை சேர்ந்தவர்களை எல்லாம் குற்றவாளிகள் ஆக முத்திரை குத்துவது சரியல்ல.

தமிழ்நாடு மதக்கலவரங்கள் அற்ற பூமியாக விளங்கி வருகிறது. அதை கெடுக்க வேண்டாம்.

பாஜக வளர்ந்த இடங்களில் எல்லாம் மதச் சண்டைகள் நிறைந்து காணப்படுகிறது என்பதை மறுக்க முடியுமா?

அதே நேரத்தில் முஸ்லிம்களில் தீவிரவாதிகள் இல்லை என்றும் சொல்லிவிட முடியாது. ஐஎஸ் இயக்கத்தில் ஆள் சேர்க்க  முயன்ற சிலர் கைது செய்யப்பட வில்லையா? அவர்களை அடக்கி வைக்க வேண்டியதும் அவசியம்.

கொலைகாரர்களுக்கு  மிகக் கடுமையான தண்டனை வாங்கிக் கொடுப்பதன் மூலம்தான் மதச் சண்டையை முளையிலேயே கிள்ளி  எறிய முடியும்.