ஐயப்பன் கோவிலை திருவாங்கூர் தேவஸ்தானம் தான் நிர்வகித்து வருகிறது.
இந்நிலையில் அனைத்து வயது பெண்களும் கோவிலுக்கு செல்லும் உரிமையை உச்சநீதிமன்றம் உறுதி செய்த நிலையில் சங்பரிவாரின் தூண்டுதலில் பந்தள அரச குடும்பமும் தந்திரிகளும் அறிவித்து பிரச்னை செய்தார்கள்.
பெண்கள் வந்தால் நடையை பூட்டி சாவியை கொடுக்க உத்தரவிட்டதாக பந்தள அரச குடும்பம் சொல்ல தந்திரிகள் பதினெட்டாம் படி முன் உட்கார்ந்து தர்ணா செய்த காட்சியும் நடந்தேறியது.
இதற்கெல்லாம் பதில் சொல்லும் வகையில் இன்று முதல்வர் பினராயி விஜயன் விளக்கம் கொடுத்தார்.
” தேவஸ்தானம் தான் கோவிலின் சட்ட பூர்வ சொந்தக்காரர். பூசாரியோ அல்லது பந்தள அரண்மனை உறுப்பினர்களோ சொந்தம் கொண்டாட முடியாது. அவர்கள் ஒரு நூற்றாண்டுக்கு முன்பே கோவிலை திருவாங்கூர் அரச வம்சத்திடம் ஒப்படைத்து விட்டார்கள். போராட்டம் நடத்திய பூசாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப் படும். நடையை சாத்தி விடுவேன் என அறிவிக்க தந்திரி கண்டரரு மோகனருவுக்கு அதிகாரம் கிடையாது. மலபார் பகுதியில் உள்ள கடத்த நாடு சிற்றரசுக்கு சொந்தமான லோகனற்கவு கோவிலில் தாழ்த்தப் பட்டவர்களை அனுமதிக்க பூசாரிகள் எதிர்ப்பு தெரிவித்து நடையை சாத்தினார். அவர்களை நீக்கி விட்டு புதிய பூசாரிகளை கடத்த நாடு சிற்றரசர் நியமித வரலாறு உண்டு. தந்திரிகளின் கடமை பக்தர்களுக்கு உதவுவதுதான் . எதிர்ப்பது அல்ல. ”
முதல்வரின் இந்த விளக்கத்தை சங்பரிவார் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை.
இடது சாரி அரசுக்கு சங்கடம் ஏற்படுத்த சங்பரிவார் முடிவுசெய்துள்ளன.
பக்தர்கள் வழிபட செல்ல வேண்டுமே தவிர போராட்டம் நடத்த அல்ல.
அதுவும் சக பக்தர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க எல்லாருக்கும் கடமை உள்ளது.
எந்த சீர்திருத்தமும் போராட்டங்கள் இன்றி நிறைவேறிய தில்லை. எந்த போராட்டமும் வெற்றி பெறாமல் போனதும் இல்லை. சபரிமலையிலும் அதுதான் நடக்கும்.