சுவாமி அய்யப்பனை தரிசனம் செய்ய காவல் துறை பாதுகாப்பு கேட்டு மனு செய்த நான்கு பெண்களின் மனு கேரள உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது கருத்து சொன்ன ராமச்சந்திர மேனன் தேவன் ராமச்சந்திரன் அடங்கிய அமர்வு இந்துக்கள் அல்லாதோரை சபரிமலைக்கு அனுமதிக்க மறுப்பது கேரளாவில் நிலவி வரும் சமய ஒற்றுமையை சீர் குலைக்கும் என்றனர்.
மேலும் கூறுகையில் சபரிமலை மட்டுமே எல்லா மதத்தவரும் சென்று வழிபட உரிமை படைத்த கோவிலாக விளங்கி வருகிறது. அங்கேதான் பக்தர்கள் சபரிமலை பிரயாணத்தின் ஒரு பகுதியாக வாவர் மசூதிக்கும் சென்று வழிபடுகின்றனர் என்றனர்.
இந்து ஆலயத்தின் ஒரு பகுதியாக மாற்று மதத்தவர் வழிபாட்டிடம் இடம் பெறுவது அரிது.
வாவர் ஒரு இஸ்லாமியர். ஐயப்பன் சுவாமி. இஸ்லாம் தோன்றி 1600 ஆண்டுகள்தான் ஆகின்றன. இஸ்லாம் இந்தியாவுக்கு வந்து அங்கே இருக்கும் ஒரு குடிமகன் இஸ்லாமியனாக மாற சில நூற்றாண்டுகள் பிடித்திருக்கும். அவர் சுவாமி அய்யப்பனின் நண்பராக விளங்கி இருக்கிறார். அதுவும் சுவாமி அய்யப்பன் ஆலயம் இருக்கும் இடத்திலேயே வாவருக்கும் ஒரு மசூதி எழுப்பி அவரையும் வணங்கி வரவும் அனுமதி வழங்கப் படுகிறது. அதிலும் குறிப்பாக மசூதியிலேயே விபூதி பிரசாதம் வழங்கப் படுவது ஆச்சரியம். இதெல்லாம் இஸ்லாத்தில் அனுமதிக்கப் படுவதில்லை என்றாலும் பல நூற்றாண்டுகளாக இந்த நடைமுறை அமுலில் இருந்து வருகிறது.
போகிற போக்கை பார்த்தால் வாவர் மசூதியை அங்கே இருக்கக் கூடாது என்று கூட குரல் எழுப்பலாம். அப்படி செய்தால் சுவாமி அய்யப்பனையே அவமதித்ததாக ஆகலாம்.
மாற்று மதத்தவர் இருமுடி கட்டாமல் பதினெட்டாம்படி ஏற முடியாது. இருமுடி கட்டாதவர்கள் வேறு வழியில் சுவாமி அய்யப்பனை தரிசிக்கலாம். இதுதான் நடைமுறை.
இந்து இயக்கங்கள் எதைச் செய்தாவது பாஜக வெற்றி பெற ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்கள் வழிபடும் உரிமை பிரச்னையை பெரிதாக்கி வருகிறார்கள்.
நீதிமன்றங்கள் இருக்கும் வரை அவர்கள் எண்ணங்கள் ஈடேற போவதில்லை.