10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் சபரிமலையில் சுவாமியை தரிசிக்க அனுமதி இல்லை. இதுதான் காலங்காலமாக இருந்து வரும் நடைமுறை . அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் “ சுவாமி ஒரு நைஷ்டிக பிரம்மச்சாரி” அவரை தரிசிக்க மாதவிலக்கு வருகிற பெண்கள், அதாவது 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் தகுதி பெற்றவர்கள் அல்ல. ஏனென்றால் 41 நாள் விரதத்தை அவர்களால் கடைப்பிடிக்க முடியாது. இதுதான் சனாதனவாதிகளின் வாதம். அதைத்தான் உச்சநீதிமன்றம் இன்று ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது.
1991இல் கேரள உயர் நீதிமன்றம் இந்தத் தடை செல்லும் என்று தீர்ப்பளித்தது .2006ஆம் ஆண்டு ஜெயமாலா என்கிற ஒரு கன்னட அரசியல்வாதி நடிகை, தான் 1987 ல் 28 வயது இருக்கும்போது ஒரு அர்ச்சகரின் உதவியோடு தான் ஐயப்ப தரிசனம் செய்ததாக சொல்லியிருந்தார் . அது ஒரு வழக்கு ஆகி பெரிய பிரச்சனையாக உருவாகி விவாதத்திற்கு வந்தது .
அதற்கு பிறகு 2008 ஆம் ஆண்டு கேரளாவின் இடதுசாரி அரசு எல்லோரும் கோயிலுக்குள் நுழைய இடமுண்டு என்று நீதிமன்றத்தில் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்தது . 2016 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் ஆன பொதுநல வழக்கு இப்பொழுது இறுதி விசாரணைக்கு வந்தது. விசாரித்தது ஒரு அரசியல் சாசன அமர்வு . 5 பேர் கொண்ட அமர்வில் தீபக் மிஸ்ரா , நாரிமன் , கன்வில்கர் , சந்திரசூட் ஆகிய நால்வரும் பெரும்பான்மை தீர்ப்பாக எல்லா வயது பெண்களும் சுவாமி தரிசனம் செய்ய உரிமை உண்டு என்று தீர்ப்பளித்தார்கள் . இந்து மல்ஹோத்ரா என்ற ஒரே பெண் நீதிபதி மட்டும் நம்பிக்கை சார்ந்த சமய வழிபாட்டு முறைகளில் நீதிமன்றம் தலையிடக்கூடாது அது பாரபட்சமாகவே இருந்தால் கூட தலையிடக்கூடாது என்று தீர்ப்பளித்திருக்கிறார் .
எனவே பெரும்பான்மை தீர்ப்பு அடிப்படையில் இனிமேல் எல்லா வயது பெண்களும் சுவாமி தரிசனம் செய்யலாம் என்பதை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியிருக்கிறது. இதை அந்த கோவிலின் தலைமை அர்ச்சகர், காலங்காலமாக இருந்த ஒரு மரபு தடைபடுவதற்கு வருத்தம் தெரிவித்திருக்கிறார். பந்தள அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் இதில் வருத்தம் தெரிவித்து இருக்கிறார்கள்..ஆனால் திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் இதை வரவேற்று இருக்கிறார். உச்சநீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்துவதற்கான வேலைகளை பார்ப்போம் என்று அவர் உறுதிபடதெரிவித்திருக்கிறார் . தமிழ்நாட்டில் மதுரை ஆதீனம் இந்த தீர்ப்பை வரவேற்று பேட்டி கொடுத்திருக்கிறார் . அர்ஜுன் சம்பத் போன்ற சனாதன ஆதரவாளர்கள் மட்டும் எதிர்த்திருக்கிறார்கள்.
இந்தத் தீர்ப்பு பல அம்சங்களை நிலைநாட்டி இருக்கிறது. அதாவது மதம் சம்பந்தமான பல பிரச்சினைகளுக்கு இது ஒரு விடை கொடுத்து இருக்கிறது என்றே சொல்லலாம் . தனிமனித உரிமையை எந்த காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்க முடியாது என்றும் வழிபாட்டு உரிமையை மதம் என்ற ஒன்றைக் காட்டி மறுக்க முடியாது என்றும் mob morality மந்தை நியாயத்தை அமல்படுத்த முடியாது என்றும் இந்த சம்பிரதாயமே ஒரு ஆணாதிக்க வெளிப்பாடு என்றும் ஐயப்ப வழிபாடு என்பது ஒரு தனி மதம் அல்ல என்பதையும் இந்த மரபு ஒருவகையான தீண்டாமையை ஒத்தது என்பதையும் இந்த தீர்ப்பு வலியுறுத்துகிறது .
பலகோணங்களில் பார்க்கும்போது இந்த தீர்ப்பு ஐயப்ப வழிபாட்டிற்கு மட்டும் என்று எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. ஒரு விடயம் இந்த தீர்ப்பின் மூலமாக தெளிவுபடுத்தப்படுகிறது. எந்த வகையான மத நம்பிக்கை அடிப்படையிலும் எந்த ஒரு தனி மனிதனுடைய அடிப்படை உரிமையையும் பறிக்க முடியாது என்பதுதான் அது . ஏறத்தாழ எல்லாக் கோயில்களுக்கும் இது பொருந்தும் . அதுதான் நாம் கவனிக்க வேண்டிய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக நாம் இந்தத் தீர்ப்பை பார்க்கிறோம்.
இன்னும் பல கோயில்களில் சம்பிரதாயம் என்ற பெயரில் பல வகையான தீண்டாமைகளும் பாரபட்சங்களும் அமுலில் இருக்கின்றன. அவைகளை எல்லாம் கண்டறிந்து நீக்குவதற்கு இந்து மத ஆர்வலர்கள் என்போர் இனி பாடுபட வேண்டும். அதுதான் இறைவனுக்கு செய்கிற தொண்டு. அதை விட்டு விட்டு இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போகிறோம் என்றோ அமல்படுத்த மாட்டோம் என்றோ நிலை எடுப்பார்களே ஆனால் அது இந்து சமுதாயத்திற்கு செய்கிற பெரிய தீமையாகத் தான் முடியும்.
இந்துத்துவத்தை தூக்கிப்பிடிக்கும் பாஜகவின் மோடி அரசு இந்த தீர்ப்பின் பின் விளைவுகள் , பல மாநிலங்களில் பல கோயில்களில் எதிரொலிக்கும் என்பதை உணர்ந்தே இருக்கும். எனவே இந்த தீர்ப்பை அப்படியே விட்டு விடுவார்களா அல்லது இதை அமுலாக்கம் செய்யாமல் இருப்பதற்கு வேறு வழி என்ன என்பதை திட்டமிடுவார்களா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் .
நம்மைப் பொறுத்த வரையில் இறைவழிபாட்டுக்கு ஆலயம் செல்ல கூட தேவையில்லை என்பதுதான் நிலைப்பாடு. ஆனால் நம்பிக்கையாளர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு இடையே சமத்துவம் நிலவுவதை உறுதி செய்வதும் ஒரு நாகரிக சமுதாயத்தின் மற்றும் அரசின் கடமை என்ற வகையில் இந்த தீர்ப்பை பொதுமேடை வரவேற்கிறது. உச்ச நீதி மன்றத்தை வாழ்த்துகிறது .