இலங்கையில் குண்டு வெடிப்பு- இனி ராணுவ ஆட்சிதான்!! அரசியல் தீர்வு இப்போது இல்லை!

srilanka-bomb-blasts
srilanka-bomb-blasts

மனிதத்தை மாய்த்திருக்கிறது மதம்.

ஏசு உயிர்த்தெழுந்த நாளில் இலங்கையின் தேவாலயங்களில் ஸ்டார் ஓட்டல்களில் நடந்த 9 குண்டு வெடிப்பு சம்பவங்களில் 295 பேருக்கு மேல் இறந்திருக்கிறார்கள். 500 பேருக்கு மேல் படுகாயம் அடைந்திருக்கிறார்கள்.

இந்த கொடுமையை செய்தவர்கள் ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் என்ற தீவிரவாத இஸ்லாமிய அமைப்பு என்று  சிங்கள அரசு முடிவு செய்து 24 பேருக்கு மேல் கைது செய்திருக்கிறது. அவர்கள் யார் என்று சொல்ல மாட்டார்களாம். ஏன் என்றால் அதனால் விசாரணைக்கு பாதிப்பு ஏற்படுமாம். அவர்களுக்கு விளம்பரம் தந்தது போல் ஆகிவிடுமாம்.

மத வெறியர்களுக்கு மனித உணர்வு அற்றுப்போய்விடும் என்று இதன் மூலம் நிரூபணம் ஆகியிருக்கிறது.

இறந்தவர்களுக்கு இழப்பீடு கொடுப்போம் இடிந்த தேவாலயங்களை அரசு செலவில் புதுப்பித்து கொடுப்போம் என்றெல்லாம் சிங்கள அரசு சொன்னாலும் நடந்த நிகழ்வுகளில் எங்கோ தவறு தெரிகிறது.

பயங்கரவாதிகள் எப்போது தாக்கினாலும் அதற்கு பொறுப்பேற்றுக் கொள்வார்கள்.  ஏன் என்றால் அப்போதுதான் உலகம் அவர்களை கண்டு அஞ்சும். அதுதான் அவர்களுக்கு வேண்டும். இதுவரை இலங்கை குண்டு வெடிப்புகளுக்கு எந்த தீவிரவாத இஸ்லாமிய அமைப்பும் பொறுப்பு ஏற்றுக் கொள்ளவில்லை. 

இலங்கை தௌஹீத் அமைப்பு சில புத்த சிலைகளை உடைத்தார்கள் என்று வழக்குகள் உள்ளன.

ஆனால் இலங்கையில் சிங்கள பௌத்தர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பெரிய அளவில் பிரச்னை வெளிப்படவில்லை.

அதிலும் குறிப்பாக இலங்கை கிறிஸ்தவர்களுக்கும் இலங்கை முஸ்லிம்களுக்கும்  இடையே பெரிய பிரச்னைகள் எதுவும் இல்லை. பின் ஏன் முஸ்லிம் தீவிரவாத அமைப்பு கிறிஸ்தவர்களை குறி வைக்க வேண்டும்? 

ஒரு மேலை நாட்டில் மசூதிக்குள் புகுந்து வழிபாடு நடத்திக் கொண்டிருந்தவர்களை ஒரு கிறிஸ்தவன் கொன்றான் என்பதற்காக  இது நடந்திருக்கும் என்றால் ஏன் அவர்கள் அதற்கு சிறிலங்காவை தேர்ந்தெடுக்கவேண்டும்?

srilanka-blast-afp

அங்கே 70% சிங்கள பௌத்தர்கள், 13% தமிழர்கள், 9% முஸ்லிம்கள், 7% கிறிஸ்தவர்கள் என்றால் சிங்களர்களுக்கு எதிராக மற்றவர்கள் என்ற நிலைதானே இருக்கிறது. சிறுபான்மையர் தங்களுக்குள் ஏன் மோதிக் கொள்கிறார்கள்?  

இறந்தவர்கள் பெரும்பாலும் கிறிஸ்தவர்கள். அதிலும் குறிப்பாக அமெரிக்க, பிரிட்டிஷ், பிரெஞ்சு, டென்மார்க் நாட்டினர்.  நால்வர் இந்தியர். மற்றவர்கள் இலங்கை  தமிழர்கள். இவர்கள் யார் பேரிலும் சிங்கள பௌத்தர்களுக்கு அதிக அக்கறை இருந்ததில்லை.

வருகிற டிசம்பர் மாதம் அதிபர் தேர்தல். மைத்ரிபாலவுக்கும் ரணில் விக்கிரம சிங்கேவுக்கும் எத்தனை மோதல்கள் இருந்தாலும் பதவி பிடிக்க இனி சேர்ந்துதான் ஆக வேண்டும்.

2009ல் விடுதலை புலிகளுடன் ஆன போர் முடிவுக்கு வந்து விட்ட போதிலும் இதுவரை அமைதியாக இருந்த தமிழர்கள் இப்போது அரசியல் தீர்வை பற்றி பேச ஆரம்பித்து விட்டார்கள்.

ராணுவத்தின் மேலாதிக்கம் குறைக்கப்பட வேண்டும் என்று சர்வதேச நாடுகள் குரல் கொடுக்க தொடங்கிய நிலையில் தமிழர்கள் அறவழி போராட்டங்களை முன்னெடுக்க தொடங்கி விட்டார்கள்.

எல்லாவற்றுக்கும் ஒரே வழி ராணுவத்தின் ஆதிக்கத்தை  மீண்டும் கொண்டு வருவதுதான். அதற்கு பயங்கர வாதிகளின் ஆபத்து இருந்தால் தான் முடியும். 

நடந்து முடித்த பயங்கரவாதிகள் தாக்குதல் அவசர நிலை பிரகடனத்துக்கு வழி ஏற்படுத்தி கொடுத்து விட்டது.

ஆக இதனால் பயன் அடையப் போவது சிங்கள பௌத்த தீவிரவாதிகள்தான்.  தாக்குதல் பற்றி உளவு அமைப்பு பத்து நாட்களுக்கு முன்பே எச்சரித்தது என்பவர்கள் ஏன் மெத்தனமாக இருந்தார்களாம்? நடக்கட்டும் என்று காத்திருந்தர்களா ?

பயன் அடையப்போகிறவர்கள் தான் இதை நிகழ்த்தி இருக்க வேண்டும்  என்ற எண்ணம்  தோன்றுகிறதா இல்லையா?

             ஒரு சிங்கள அமைச்சரின் மகன் தன்னை தன் தந்தை  சர்ச்சுக்கு போகவேண்டாம் என்று  தடுத்ததாக கூறியிருக்கிறார். முன்கூட்டியே குண்டு வெடிக்கும் என்று தெரிந்தவர்தானே எச்சரித்திருக்க முடியும்.

இன்டெர் போல் இதை விசாரிக்க ஒரு குழுவை அனுப்ப போவதாக கூறியிருக்கிறது.

மனித வெடிகுண்டு என்கிறார்கள். அதுதான் இடிக்கிறது. எவ்வளவு சதி செய்தாலும் சிங்களர்களையே மனித வெடிகுண்டாக மாற்றியிருக்க முடியாது. மனித வெடிகுண்டு என்பதே பொய்யாக இருந்தால்? இறந்து கிடந்தவர்களில் யார் அப்பாவி யார் பயங்கரவாதி என்று எப்படி கண்டறிவது?

மனிதத்தை மதம் மாய்த்திருக்கிறது. 

பயங்கரவாதம் இந்தியாவில் நிகழ்த்தப்பட்டது. பாகிஸ்தானில் மையம் கொண்டிருக்கும் பயங்கரவாதிகள் அதை நடத்தினார்கள். அவர்களுக்கும் ஸ்ரீலங்கா சம்பவங்களுக்கும் தொடர்பு இருக்கவும் வாய்ப்பிருக்கிறது.

குண்டு வெடிப்புகளை கண்டித்த தமிழ் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இதனால் தமிழர் பிரச்னை தீர்வும் தள்ளிப் போகும் என்பதையும் கவலையுடன் தெரிவித்து இருக்கிறார்.

எல்லா கோணங்களிலும் ஆராய வேண்டும் என்பதே பொதுமேடையின் கருத்து.

இந்தியாவும் தன் பங்கை செலுத்தி உண்மையை கொண்டு வர முயற்சி  செய்ய வேண்டும். நமக்கும் அக்கறை இருக்கிறதே??!!