பிந்து , கனகதுர்கா இருவரும் சபரிமலையில் அய்யப்பனை தரிசனம் செய்து வந்ததும் அதை அறிந்து இரண்டு மணிநேரம் கோவில் நடையை அடைத்து பரிகார பூஜை செய்து பின்னர் திறந்திருக்கிறார்கள் கோவில் தந்திரிகள்.
இது நீதி மன்ற அவமதிப்பு அல்லவா?
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல் வலுத்துள்ளது.
சங்க பரிவாரங்கள் பெண்கள் தரிசனத்தை எதிர்த்து அரசியல் செய்து வருகிறார்கள்.
அந்த இருவரும் தரிசனம் செய்தபோது அதைப்பார்த்த பக்தர்கள் யாரும் ஆட்சேபிக்க வில்லை என்பதும் அப்போது எந்த பிரச்னையும் எழவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது. அதாவது ஆட்சேபணை பக்தர்களுக்கு இல்லை. அதை வைத்து அரசியல் செய்யும் சங்க ஆதரவாளர்கள் தான் பிரச்னையாக்கி வருகிறார்கள்.
ஒரு அய்யப்ப பக்தர் கல் வீச்சில் பலியான சோக சம்பவமும் நடந்துள்ளது.
இதுவரை எந்த சீர்திருத்தமும் போராடாமல் வந்ததில்லை. எதையும் பக்தர்கள் எனப்படுவோர் தாங்களாகவே ஏற்றுக் கொண்டதும் இல்லை.
சட்டத்தின் மூலமாகவே அத்தனை சீர்திருத்தங்களும் அமுலுக்கு வந்திருக்கின்றன.
அதே வழியில் ஐயப்பன் சன்னதியில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யும் உரிமையும் அமுலுக்கு வரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை .
ஆனால் அதற்கு தூண்டி விடப்படும் போராட்டங்களால் என்னென்ன விலை கொடுக்கப் படும் என்பதுதான் கேள்வியாக இருக்கிறது.
மத்திய அரசு தலையிட்டு மேலும் பிரச்னையை பெரிதாக்கும் என்பதால் மாநில அரசு நிதானமாக செயல்படுகிறது. மாநில காங்கிரசும் இந்த பிரச்னையில் பாஜக வோடு சேர்ந்து கொண்டு அரசை விமர்சிப்பது அதன் இரட்டை வேடத்தை காட்டுகிறது. அகில இந்திய தலைமை மௌனம் காப்பதும் சரியல்ல.
கன்னியாகுமரியில் மட்டும் பாஜக போராட்டத்தை தூண்டி விட்டிருக்கிறது. இவர்கள் வலுப்பெற்றால் மத நல்லிணக்கம் காணாமலே போய்விடும்.
உச்சநீதிமன்றம் தலையிட்டு இந்த பிரச்னைக்கு முற்றுப் புள்ளி வைக்க வில்லையென்றால் கேரள இடது சாரி அரசை கலைக்கும் எல்லைக்கும் கூட மதவாத பாஜக அரசு துணியும். தடுப்பது வர இருக்கும் பாராளுமன்ற தேர்தல்தான்.
ஆட்சி செய்யப் போவது சட்டமா சட்டத்தை அமுல் படுத்த மறுக்கும் மத வாதிகளா என்பதை உச்ச நீதிமன்றம் தான் தெளிவு படுத்த வேண்டும்.