ரமலான் மாதத்தில் முஸ்லிம்களை கொல்பவர்கள் முஸ்லிம் தீவிரவாதிகளா ? மனித குலத்தின் எதிரிகளா?

தீவிரவாதிகளா? மனித குலத்தின் எதிரிகளா?

ஐ.எஸ். தீவிரவாதிகள் ஈராக் -சிரியா நாடுகளில் மட்டுமல்லாமல் ஏமன், துனிசியா போன்ற பல நாடுகளிலும் வசிக்கும் சியா பிரிவு முஸ்லிம்களை கொல்லுமாறு புனிதமான ரமலான் மாதத்தில் கட்டளை இட்டதன் விளைவாக எண்ணற்ற சியா பிரிவு முஸ்லிம்கள் மட்டுமல்லாமல் வெளிநாட்டினர் பலரும் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
பகலில் உணவு எடுத்துக் கொண்டதற்காக இரண்டு சிறுவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மனித நேயம் அற்றதா இஸ்லாம்? நம்பிக்கை அற்ற காபிர்களை எல்லாம் கொலை செய்வது என்றால் மனித குலத்தின் பெரும் பகுதியை கொல்ல வேண்டி வரும். முடியுமா என்பது வேறு? அதைதான் இஸ்லாம் போதிக்கிறதா? சியா பிரிவினருக்கும் சன்னி பிரிவிற்கும் பெருத்த வேறுபாடு இல்லை. இருவரும்  ஓரிறைக்கொள்கை உடையவர்கள்தான். முஸ்லிம்கள்தான்.
சியா பிரிவினர் இஸ்லாத்தை திரித்து கூறுகிறார்கள் என்று வாதத்திற்காக வைத்துக் கொண்டாலும் அதற்கு தீர்வு கொலையாக இருக்க முடியுமா? மாற்றுக் கொள்கை உடையவர்கள் வாழக் கூடாது என்பது ஐ.எஸ் பிரிவினரின் கொள்கை என்றால் அவர்கள் ஒருபோதும் வெற்றி அடைய முடியாது. இஸ்லாத்துக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் ஐ.எஸ் தீவிரவாதிகள் அடக்கப்பட வேண்டியவர்களே! அடக்கும் பொறுப்பு மற்றவர்களை விட உண்மை முஸ்லிம்களுக்கே அதிகம் உள்ளது. என்ன செய்யப் போகிறார்கள் முஸ்லிம்கள்?