மதம்

வள்ளலார் பிறந்த நாளை மறந்ததா தமிழகம்??!!

Share

05/10/1823   –   வள்ளலார் ராமலிங்க அடிகள் திரு அவதார திருநாள்.

சனாதனத்தின் முதல் எதிரி வள்ளலார். அதனால்தான் அவர் ஓரங்கட்டப்பட்டார்.

வள்ளலார் கொண்டாடப் பட்டிருந்தால் பெரியாரின் தேவையே  எழுந்திருக்காது.  வள்ளலார் நாத்திகர் அல்லர்.   நாத்திகம் பேசுபவர் தம் நாக்கு முடை நாக்கு என்றார் வள்ளலார்.

ஆனால் கடைசிவரை சாதி மத பேதங்களை எதிர்த்தே நின்றார். அதனால் தான் அவரை சனாதனம் சதி செய்து வீழ்த்தியது.

காவிக்குப் பதில் வெள்ளை ஆடை. மத சின்னங்கள் ஒதுக்குதல். உருவ வழிபாட்டை தவிர்த்தல். வள்ளலார் கண்ட சமரச சுத்த சன்மார்க்கம் களங்கங்கள் அற்ற   தூய ஆன்மிகம். 

இன்று மதத்தின் பேரால் நடக்கும் அத்தனை அட்டூழியங்களும் எந்த மதமும் போதித்தல்ல. மதத்தின் பேரால் ஆசாமிகள் திணித்த கொடுமைகள். அதில் ஊறிப்போன கறை சாதி.

இந்த கொடுமைகள் அகல இன்னும் நெடுந்தூரம் செல்ல வேண்டும். நாத்திகர் ஆக பெரியார் சொன்ன காரணம் மூட நம்பிக்கைகளுக்கு மதம் மரமாக இருக்கிறது என்பதால்தான் .

வள்ளலாரின் போதனைகளை பெரியார் தனது குடியரசு பத்திரிகையில் வெளியிட்டார் என்றால் அப்போதாவது தமிழ் சமூகம் அவரது முக்கியத்துவத்தை உணர்ந்திருக்க வேண்டாமா?

இன்னும் சுகி சிவம் போன்றவர்கள் தமிழ் உணர்வு பேசிக்கொண்டே ச்னாதனத்துக்கு எதிராக வெளிப்படையாக பேச தயங்குவதன் காரணம் பேச மேடை  கிடைக்காது என்பதால் தானே. ஆக பிழைப்புக்காக உண்மையைப்  பேச தயங்குகிறவர்கள்தான் நமது ஆன்மிக பேச்சாளர்கள்.

வள்ளலார்தான் சரியான முறையை சொன்னார். சனாதனத்தை ஒதுக்கினாரே தவிர எதிர்க்க வில்லை, அதற்காக சனாதனம் அவரை விட்டு விட்டதா?

வள்ளலார் நாம் செய்ய வேண்டியதை சொன்னாரே தவிர நமது எதிரிகள் யார் என்பதை அடையாளம் காட்ட வில்லை. அதுதான் அவரது பலவீனமாக போய் விட்டது.

ஆனால் இறையருள் அவரை கைவிட வில்லை. இன்னும் லட்சக்கணக்கான பக்தர்கள் அவரது சன்மார்க்க கொள்கைகளை பரப்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

கெடுவாய்ப்பாக சன்மார்க்க தொண்டர்கள் ஒருங்கிணைக்கப் படாமல் சிதறிக் கிடக்கிறார்கள்.

சன்மார்க்கத் தொண்டர்கள் ஒருங்கிணையும் நாள் தான் நமக்கு ஆன்மிக விடுதலை நாள்.

This website uses cookies.