வள்ளலார் வழி தனி வழி என அறிவிக்க உயர் நீதிமன்றத்தில் மனு?! இருட்டடிப்பு செய்த தமிழ் பத்திரிகைகள்

vallalar
vallalar

பொதுமேடை பலமுறை வலியுறுத்தி வந்ததை இப்போது உயர்நீதிமன்றத்தில் ஒருவர் மனுவாக கொடுத்திருக்கிறார்.

வள்ளலார் சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டவர். ஆனால் அவரை இந்து மதத்துக்குள் முடக்கி விட ஆதிக்க சக்திகள் முயன்று கொண்டே இருக்கின்றன.

குறிப்பாக நால்வருணக் கொள்கை உடைய சனாதன தர்மத்தை ஏற்றுக் கொண்டவர் இல்லை.

முதல் ஐந்து திருமுறைகள்– ஆறாம் திருமுறை- வள்ளலாரின் உரைநடை இவையே திருஅருட்பா.

முதல் ஐந்து திருமுறைகளை அவர் இயற்றி இருந்தாலும் அவர் எழுதிய ஆறாம் திருமுறையும் அதற்கு அவர் கொடுத்த உரைநடை விளக்கமுமே முடிபாகும்.   அதுவும் அவரே முதல் ஐந்து திருமுறைகளை ஒதுக்கிவிடுங்கள் என்று கட்டளை இட்ட பின் அவர் தொண்டர்கள் என்பவர்கள் ஐந்து திருமுறைகளை போற்றுவதும் பின்பற்றுவதும் வள்ளலாருக்கு  கெட்ட பெயர் ஏற்படுத்தும் செயலாகவே ஆகும்.

மதச்சண்டைகளை தீர்க்கும் மாமருந்து

வள்ளலார் கண்ட சமரச சுத்த சன்மார்க்கமே !!!

வள்ளலார் கண்ட  சமரச சுத்த சன்மார்க்கம்–மதமல்ல- ஓரிறை வழிபாடு- அதுவும் சோதி வடிவிலான ஆண்டவர் வழிபாடு.

சாதி சமய சழக்கை விட்டேனருள் ஜோதியைக் கண்டேனடி– என்பது வள்ளலார்  வாக்கு .

உயிர்க்குலத்திற்கே இயக்கத்தின் ஆதாரமாக உள்ள சோதிதான் இறைவன்

யார் வேண்டுமானாலும் கடைப்பிடிக்கலாம்- எம்மதத்தவரும் கடைப்பிடிக்கலாம்.

எந்தச் சடங்கும் தேவையில்லை-குருவும் தேவையில்லை

எந்தக் கோயிலுக்கும், எந்த வழிபாடு போகக் தேவையில்லை இருக்கும் இடத்திலேயே கடைப்பிடிக்கலாம்.

தயவே வடிவமாக இருந்து ஜீவகாருண்ய ஒழுக்கத்துடன் நாம் வாழ வேண்டும். -இறைவனின் திருவடியை இறுகப் பற்றிக்கொண்டு உயிர்களிடம் இரக்கம் காட்டி அவைகளுக்கு பணி புரிந்து கொண்டு வாழவேண்டும்.

எல்லா உயிர்களிடத்திலும் தயவு- பிரபஞ்சத்தில் பற்றின்மை- சிவத்தினிடத்தில் மாறாத அன்பு – அவ்வருள் நம்மை அடையும்- நாமும் அதனை அடைந்து ஒப்பற்ற சுகத்தில் இருப்போம். -லட்சியம் மரணமிலாப் பெருவாழ்வு  இவைதான் வள்ளலார் கண்ட தத்துவத்தின் சாரம். 

வேதநெறி ஆகமத்தின் நெறிபவுரா ணங்கள்

விளம்புநெறி இதிகாசம் விதித்தநெறி முழுதும்

ஓதுகின்ற சூதனைத்தும் உளவனைத்தும் காட்டி

உள்ளதனை உள்ளபடி உணர உரைத்தனையே ( 186 )

கலையுரைத்த கற்பனையே நிலைஎனக் கொண்டாடும்

கண்மூடி வழக்கம் எலாம் மண்மூடிப் போக

மலைவறுசன் மார்க்கம் ஒன்றே நிலைபெற மெய் உலகம்

வாழ்ந்தோங்கக் கருதியருள் வழங்கினை என் தனக்கே“  (187 )

இருட்சாதி தத்துவச் சாத்திரக் குப்பை

இருவாய்ப்புப் புன்செயில் எருவாக்கிப் போட்டு

மருட்சாதி சமயங்கள் மதங்களாச் சிரம

வழக்கெலாம் குழிக்கொட்டி மண்மூடிப் போட்டுத்

தெருட்சாறும் சுத்தசன் மார்க்கநன் நீதி

சிறந்து விளங்கஓர் சிற்சபை காட்டும்

அருட்ஜோதி வீதியில் ஆடச்செய் தீரே

அருட்பெருஞ் சோதிஎன் ஆண்டவர் நீரே.             (496)

சாதியும் மதமும் சமயமும் பொய் என

ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்சோதி                  ( 4 )

ஆக பாடல் மற்றும் பேருபதேசம் ஆகிய இரண்டையும் பொருந்திப் பார்த்து வள்ளலார் சாதி, மதம், தவிர்த்த சன்மார்க்க சங்கத்தைத்தான் இறுதியாக தன் அன்பர்களுக்கு விட்டுச் சென்றார் என்பது பற்றி யாருக்கும் ஐயம் இருக்க முடியாது.

ஆனால் வள்ளலார் நாத்திகர் அல்லர்.

“நாத்திகம் சொல்கின்றவர்தம் நாக்குமுடை நாக்கு“ என்பதே அவர் முடிபு.

எனவே வள்ளலார் வழி என்பது நாத்திகமும் அல்ல எந்த மதமும் அல்ல –

ஆனால் வள்ளலார் பக்தர்கள் இந்துக்கள் என்றுதான் அறியப்படுகிறார்கள். – வள்ளலார் பாடல்களிலே எங்குமே இந்து என்ற சொல் இல்லை. இந்து என்ற சொல்லை முதன் முதலில் அறிமுகப்படுத்தியது – கிழக்கு இந்தியக் கம்பெனி கொண்டுவந்த  Hindu Widows Remarriage Act 1856 / 25/07/1856 Lord Dalhousie-Lord Canning ஆல் தான்.

இன்றைக்கு இந்து என்றால் புத்த ஜைன, சீக்கிய மதங்களை உள்ளடக்கி, பார்சி  கிறிஸ்தவ, இஸ்லாமிய மதம் தவிர்த்தவர்கள்தான்.

உலகமெங்கும் நாடுகளுக்கு இடையே இருக்கும் பிரச்னைகளுக்கு மதங்களே மூல காரணிகளாக இருக்கின்றன. மதங்களுக்கு இடையே இருக்கும் மோதல்களை முரண்பாடுகளை பேசித் தீர்க்கவே முடியாது. மதப் பிரச்னைகளை தீர்க்க ஒரேவழி மதங்களில் இருந்து வெளியேறுவதுதான்.   

அதைத்தான் சொன்னார் வள்ளலார். இறை நம்பிக்கைக்கும் மதத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் நம்பிக்கையாளன். ஆனால் எந்த மதத்தையும் சாராதவன். பிரச்னை என்னவென்றால் அரசு ஆவணங்களிலே அப்படி குறிப்பிட எந்த சொல்லும் இல்லை. அதை ஆவணப் படுத்த சன்மார்க்கிகள் முயல வேண்டும் என்ற பலரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் சென்னை  உயர் நீதிமன்றத்தில் ஒருவர் ஓரு மனு தாக்கல் செய்து வள்ளலார் வழி வழிபாட்டை தனி வழிபாடு முறையாக அங்கீகரிக்க வேண்டும் என்று கேட்டுக்  கொண்டிருக்கிறார்.  நீதிமன்றமும் அறிவிப்பு அனுப்பி அரசு பதில் அளிக்க அவகாசம் அளித்திருக்கிறது. 

இந்த செய்தியை ஒரே ஒரு தொலைகாட்சியில் கேட்க முடிந்ததே தவிர எந்த தமிழ் அல்லது ஆங்கில பத்திரிகைகளிலும் படிக்க முடியவில்லை. 

ஏன் இந்த இருட்டடிப்பு?

Religion- இந்து கிறிஸ்தவர் முஸ்லிம் பார்சி என்று எழுத முடியும். நாத்திகன் என்றோ மதமற்ற கடவுள் நம்பிக்கையாளர் என்றோ குறிப்பிட இடமில்லை.

குஜராத்தில் ராஜ்விர் பிராமின் என்ற கரோடா பிராமின் தாழ்த்தப் பட்ட வகுப்பை சேர்ந்தவர்.. சாதி அடக்கு முறைக்கு ஆளாகி தன்னை இந்து என்று குறிப்பிடாமல் நாத்திகர் என்று குறிப்பிட வேண்டும் என்று மாவட்ட ஆட்சி தலைவரிடம் மனு போட அவர் நிராகரிக்கிறார். வேறு மதம் மாறு நாத்திகனாக முடியாது என்று உத்தரவு.  குஜராத் உயர் நீதிமன்றம் ஏன் கூடாது என்று விளக்கம் கேட்டு அறிவிப்பு அனுப்பி இருக்கிறது. .

லிங்காயத்துக்கள், கேரளாவின் நாராயண குரு, குமரியின் அய்யா வைகுண்டர் போன்றோர் தனித்தனி வழிபாட்டு வகை கண்டவர்கள். எல்லாரையும் விழுங்கி இந்து என்ற மாயை ஆண்டு கொண்டிருக்கிறது. அது மதமே அல்ல என்று உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு சொன்ன பிறகும் எப்படி உயிர் வாழ்கிறது என்பது இறைவனுக்கே வெளிச்சம். அந்த வகையில் சன்மார்க்கிகளையும் இந்து விழுங்கி விட்டது. அதில்  இருந்து விடுதலை பெறும் வழியை சன்மார்க்கிகள் ஆராய வேண்டும் என்ற வேண்டுகோளை பணிவோடு வைக்கிறேன்.

பெரும்பான்மை சமூகத்திலிருந்து விலகி சிறுபான்மை ஆக வேண்டும் என்பது எனது நோக்கம் அல்ல.

எல்லா மதங்களையும் சட்டப்படி தடை செய்ய முடியும் என்றால் அதற்காக அனைவரும் ஒன்று சேரலாம். ஆதரிக்கலாம்.

அதுவரை தன்மானமுள்ள இறை நம்பிக்கையாளனாக வாழவேண்டும் என்பதே வள்ளலார் பக்தர்களின் எதிபார்ப்பு.

-வைத்தியலிங்கம்