தமிழகத்தில் பருவ மழை பெய்வதற்காக முக்கிய கோவில்களில் யாகம் நடத்த அறநிலையத்துறை அனையர் பணிந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
சொந்த புத்தியில் அதிமுக அறநிலைய துறை அமைச்சர் இந்த முடிவை எடுத்ததாக தெரியவில்லை .
இதுவரை இல்லாதவகையில் இப்போது யாகம் செய்ய அவசியம் என்ன?
அந்தந்த கோவில்களின் பழக்க வழக்கத்துக்கு உட்பட்டு நடத்த வேண்டும் என்று சொல்லி விட்டு பெண் ஏன் யாகம் நடத்த சொல்ல வேண்டும்? அந்தந்த வழக்கம் யாகத்தில் இருந்து வேறுபட்டு இருந்தால் ஏன் யாகம் செய்ய வேண்டும்? யாகம் பார்ப்பனர்களுக்கு மட்டுமே சொந்தமான ஒன்று. அதனால் பலன் அடைபவர்களும் அவர்களாகத்தான் இருப்பார்கள்.
ஓதுவார்களைக் கொண்டு சுந்தரமூர்த்தி நாயனார் இயற்றிய ஏழாம் திருமுறை மழை வேண்டும் பதிகம் ஓதுதல் செய்ய வேண்டும் என்பதும் அதில் ஒன்று. எத்தனை கோவில்களில் ஓதுவார்கள் இருக்கிறார்கள்.? இருப்பவர்களை எப்படி எல்லாம் வழிபாட்டில் பயன்படுத்துகிறார்கள்? தீண்டத் தகாதவர்களைப்போல் வெளியே நிறுத்தி வைத்து அவமானப்படுத்துவார்கள். அதுதானே நடக்கிறது.
தமிழுக்கு உரிய இடம் எந்தக் கோவிலில் இருக்கிறது?
திராவிட இயக்கம் ஆட்சிக்கு வந்தபிறகு அரசு அலுவலகங்களில் வளாகங்களில் எந்த மத வழிபாட்டு சின்னங்களும் இருக்கக் கூடாது என்று சுற்றறிக்கை ஆணை பிறப்பிக்கப் பட்டு அமுலில் இருக்கிறது.
இன்றைய ஆட்சியாளர்கள் பாஜகவுக்கு அடிவருடுபவர்கள் ஆக இருக்கின்ற படியால் அதிகாரத்தை யாரோ பயன்படுத்துகிறார்கள். அறநிலையத்துறை அமைச்சர் இருக்கிறாரா? ஆணையர் யார் சொல்லி இந்த முடிவை எடுத்தார்?
விட்டால் தவளைக்கும் ஓணானுக்கும் திருமணம் செய்விக்கும் நிகழ்ச்சியை கூட கோவில்களில் நடத்த துவங்கி விடுவார்கள்.
கடவுள் நம்பிக்கைக்கும் மூட நம்பிக்கைக்கும் உள்ள வேறுபாடுகளை விளக்கி கோவில்களில் பரப்புரை நிகழ்த்தலாம்.
கர்நாடகாவில் இருப்பதை போன்று மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டம் இங்கே நிறைவேற்ற வேண்டும்.
கோவில்களுக்கு சென்று மழை வேண்டி கூட்டு வழிபாடு நடத்துங்கள். இறைவன் அருள்புரிய மாட்டாரா?
எவருடைய நம்பிக்கையையும் விமர்சிப்பது நமது வேலையல்ல. கடவுள் நம்பிக்கை கூட அறிவு சார்ந்து இருக்க வேண்டும். அறிவுக்கும் நம்பிக்கைக்கும் தொடர்பு இருக்கக் கூடாது என்பவர்கள்தான் பயங்கரவாதிகள்.
ஒன்று மட்டும் தெளிவு. நடப்பது தமிழர்கள் ஆட்சியல்ல.