ஜக்கி வாசுதேவ் தமிழர்களுக்கு சத்குருவா? சத்துருவா?

jaggi-vasudev
jaggi-vasudev

பிரமிக்க வைக்கிறது ஜக்கி வாசுதேவ் தமிழகத்தில் கண்ட அசுர வளர்ச்சி.

சாமியார்களின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் திடீர் திடீர் எனத்தான்      தோன்றும்.

03.09.1957 ல் மைசூரில் ஒரு தெலுகு பேசும் தம்பதிக்கு பிறந்த ஜகதீஷ் ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றார். அதுதான் அவரது மூலதனம்.    இன்று சரளமாக ஆங்கிலத்தில் அவர் உரை நிகழ்த்தும் அழகு அவருக்கு தனி மரியாதையை சர்வ தேச ரீதியில் பெற்று தந்திருக்கிறது.

தனது 25 வயதில் 1982ல் சாமுண்டி மலையில்யோகா பயிற்சி செய்தவர்    1883ல் முதல் யோகா வகுப்புகள் எடுக்க தொடங்குகிறார்.

1993 ஈஷா பௌண்டேஷனை கோவையில் தோற்றுவிக்கிறார்.

12.10.1997 ல் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை ஒரு சாமியார் மீது கொலை குற்றச்சாட்டு என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டது. அது ஜக்கி வாசுதேவ் தனது மனைவி விஜியை கொலை செய்து விட்டார் என்று அவரது மாமனார் காவல் துறையில் புகார் கொடுத்ததுதான். மனைவி இறைவனில் ஐக்கியமாகி விட்டார் என்று ஜக்கி வாசுதேவ் வாக்குமூலம் கொடுத்தார்.  வழக்கு அவ்வளவுதான்.

2017ல் வெள்ளிங்கிரி மலையில் 112 அடி ஆதியோகி சிலையை பிரதமர் நரேந்திர மோடி கையால் திறந்து வைத்த நிகழ்ச்சி ஜக்கி வாசுதேவின் செல்வாக்கை உலகிற்கு பறைசாற்றியது.

ஈஷா யோகமைய்யம் மத சார்பற்ற வருவாய் ஈட்டும் நிறுவனமாக இல்லாமல் செயல்படுகிறது என்று விளம்பரப் படுத்தப் படுகிறது.

ஆனால் உண்மையில் இந்து மத சாயல் கொண்டும் பின்னணியில் இந்து மத சக்திகள் தான் இயக்கு கின்றன என்று குற்றச்சாட்டு இருப்பது உண்மை.

இன்னர் இன்ஜினியரிங், இன்க்ளுசிவ் எகானமி என்றெல்லாம் சத்குரு ஆற்றும் உரைகள் பாமரர் களுக்கு அல்ல. படித்த மேல்தட்டு மக்களுக்கானது. அவர்கள்தான் ஈஷா மையத்தின் காவலர்கள். படித்த இளைஞர்கள் அவரிடம் ஐக்கியமாவதை விரும்புவதன் காரணம் இன்னும் பலருக்கு விளங்கவில்லை.

இயல்பாகவே மனிதர்களிடம் இருக்கும் நல்ல குணங்களை வாசுதேவ் தட்டி எழுப்புகிறார்.

ஏராளமான புத்தகங்கள் உலக முழுதும் ஈஷா மையம் சார்பில் விற்கப் படுகின்றன. பல கோடிப்பேரை மிகச் சாதாரணமாக அவரால் ஈர்க்க முடிந்திருக்கிறது.

தங்கள் பிள்ளைகளை ஜக்கி வாசுதேவ் மயக்கி வைத்திருப்பதாகவும் மீட்டுத் தரக் கோரியும் புகார்கள் வந்தன. பின்னர் அவை மறைந்தன.

ரவிசங்கர், வாசுதேவ் போன்றவர்கள் மிக சுலபமாக வர்த்தக நிறுவனங்களை தங்கள் வயமாக்கிக் கொள்கிறார்கள். மேல்தட்டு  மக்களுக்கும் இவர்களைத்தான் பிடித்திருக்கிறது.

பாமரர்கள் தான் பாவம் உள்ளூர் சாமியார்களோடு திருப்தி அடைய வேண்டி இருக்கிறது.

பத்மவிபூஷன் விருது பெறும் அளவு மத்திய அரசு ஜக்கி வாசுதேவுக்கு அங்கீகாரம் அளித்திருக்கிறது. கலைஞரும் கூட மையத்தில் மரக்கன்று நட்டு தனது ஆதரவை வெளிப் படுத்தி இருக்கிறார்.

அதிகார மையங்கள் இத்தகைய குருமார்களுக்கு வேண்டியவர் களாகத்தான் இருக்கிறார்கள். மன்னர் காலத்து வழக்கம் மக்களாட்சி யிலும் தொடர்கிறது.

காவி தவிர்த்து, மத சின்னங்கள் தவிர்த்து, வித்தியாசமான உடை அணிந்து ஜக்கி  வாசுதேவ் தனித்துத்தான் காணப் படுகிறார்.

சிவராத்திரி அன்று அவரது உரை மிகச்சிறப்பானது. ஆனால் அது திருமூலரும், வள்ளலாரும், வள்ளுவரும் சொன்னதன் ஆங்கில ஆக்கம் என்பதை யாரும் மறுக்க முடியாது.

பார்ப்பனீயம் அதன் செல்வாக்கு பற்றி சத்குரு வெளிப்படையாக பேசுவதில்லை. அங்கேதான் சந்தேகம் வருகிறது.

ஒரே ஒரு வேண்டுகோள்; சத்குரு அவர்களே பாமரர் பக்கமும் கொஞ்சம் கவனம் செலுத்துங்களேன். ஏனென்றால் அப்போதுதான் நீங்கள் சத்குருவா தமிழர் மத்தியில் நிலைகொண்டிருக்கும் சுயமரியாதை உணர்வுக்கு சத்துருவா என்பது தெரியும்.