கோவிலில் ஜீன்ஸ், டி ஷர்ட் தடை அமைச்சருக்கு தெரியுமா?

kovil
kovil

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் வரும் பக்தர்களுக்கு ஜீன்ஸ், டவுசர், லெக்கின்ஸ், டி ஷர்ட் அணிய திடீர் என்று கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.

இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும்  இந்த கோவிலில் விதிக்கப் பட்டிருக்கும் இந்த  தடை விபரம் அந்த துறை அமைச்சருக்கு தெரியுமா தெரியாதா?

நடப்பதை பார்த்தால் ஒவ்வொரு துறையாக ஹைஜாக் செய்து கொண்டிருக்கிறார்கள் பாஜக காரர்கள் என்று தான் தோன்றுகிறது.

பெயருக்குத்தான் அதிமுக அரசு. நடப்பது பாஜக ஆட்சி. இல்லையென்றால் ஒரு கோவிலுக்கு மட்டும் இப்படி ஒரு கட்டுப்பாடு விதிப்பார்களா? அதுவும் மைலாப்பூரில். அங்கே அவர்கள் விதிததுதான் சட்டம். எல்லா இடங்களிலும் அவர்கள் வைத்ததுதான் சட்டம் என்றாலும் அங்கே கொஞ்சம் கூடுதல்.

அறிவிப்பு பலகையில் இப்படி எழுதியிருக்கிறார்கள்.

“திருக்கோவிலுக்கு வரும் ஆண் பக்தர்கள் வேட்டி, சட்டை, முழுக்கால் பேன்ட், சர்வானி, ஆகிய பாரம்பரிய உடைகளை அணிந்து வர வேண்டும். கைலி, அரைக்கால் டவுசர், அணிந்து வரக்கூடாது. பெண் பக்தர்கள் சேலை ரவிக்கை, பாவாடை தாவணி, சுடிதார், துப்பட்டா, பஞ்சாபி உடை அணிந்து வர வேண்டும். டி ஷர்ட், ஸ்கர்ட், மினி சர்ட், லெக்கின்ஸ் பேன்ட் அணிந்து வரக்கூடாது. துப்பட்டா அணியாமல்  மேல் சட்டை மட்டும் அணிந்து வரக்கூடாது. கண்டிப்பாக துப்பட்டா அணிய வேண்டும்

நல்ல வேளை பஞ்சகச்சம் மடிசார் கட்டி வந்தால்தான் தரிசனம் என்று சொல்லாமல் விட்டார்களே!

 கைலி என்பது முழுவதும் மூடப்பட்டிருக்கும் உடை. வெள்ளைக்கைலிகளும் கூட இருக்கின்றன. அது முஸ்லிம்களுக்கு மட்டுமே உரியது என்று முத்திரை குத்துவது ஏன்? 

இந்த உடைகளை அணிந்து அலுவலகம் செல்லலாம். சுப நிகழ்ச்சிகளுக்கு செல்லலாம். ஆனால் கோவிலுக்கு செல்ல முடியாது என்று எந்த சட்டத்தில் தடை இருக்கிறது?

அறநிலையத்துறை ஒரு கோவிலுக்கு மட்டும் ஒரு முடிவை எடுக்க முடியுமா?  எல்லா கோவில்களுக்கும் இதே கட்டுப்பாட்டை  அவர்கள் விதிக்க போகிறார்கள் என்பதற்கு இது முன்னோட்டமா?

இந்த முடிவை ஒரு கோவிலின் நிர்வாக அதிகாரி எடுக்க முடியுமா?

அமைச்சர் வெறும் பொம்மைதானா?

ஒரு விளக்கமாவது தரக்கூடாதா ?