மயிலாப்பூரில் திருவள்ளுவருக்கு 1935ல் கோவில் உருவானதாக அங்கிருக்கும் கல்வெட்டு சொல்கிறது.
27/04/1973ல் முதல் அமைச்சர் கருணாநிதி கோவில் திருப்பணியை தொடங்கி வைத்திருக்கிறார். நெடுஞ்செழியன், கண்ணப்பன் ஆகியோர் முன்னிலை வகிக்க குன்றக்குடி அடிகள் தலைமையில் திருப்பணி குழுவும் அமைக்கப்பட்டிருக்கிறது.
இதெல்லாம் கல்வெட்டு விபரங்கள்.
திருவள்ளுவர்-வாசுகி சிலைகள் இருந்தாலும் கூடவே ஏகாம்பரேசுவரர் உடனுறை காமாட்சி அம்மன் கருமாரி அம்மன், நவக்ரகம், சனீஸ்வரர் சந்நிதிகளும் இருக்கின்றன.
இந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் அந்த கோவிலுக்கு குருக்கள் நியமிக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதில் தெரியும் உண்மை என்ன?
கலைஞர் ஏமாந்தாரா? வள்ளுவரை இந்து என்று ஒப்புக் கொண்டாரா?
வள்ளுவரை யார் எப்படி போற்றினாலும் திருக்குறளை யாரும் மாற்ற முடியாதல்லவா?
உலகப் பொதுமறை என்று எல்லாரும் ஒப்புக் கொள்ளும் திருக்குறள் எல்லா மதத்தினருக்கும் பொதுவானது.
வள்ளுவம் பார்ப்பனீயத்திற்கு எதிரானது என்பதால் அதை கபளீகரம் செய்ய பார்பனீயம் செய்யும் முயற்சிகளில் ஒன்றுதான் இந்த கோவில் விவகாரமும்.
எதை பார்ப்பனீயம் விழுங்கவில்லை.?
உலகம் முழுதும் பரவியிருக்கும் பௌத்தம், தான் பிறந்த இந்தியாவில் செல்வாக்கற்றுப் போனதற்கு பார்ப்பனீயம் செய்த தந்திரங்கள்தான் காரணம்.
பார்ப்பநீயத்திற்கு இரையான மதங்கள் ஜைனம், சீக்கியம் என்றும் சொல்லலாம். தன்னை ஏற்றுக் கொள்ளாத தத்துவத்தை உறவாடி அழிப்பதே பார்ப்பனீயத்தின் இயல்பு.
அந்த வகையில் உருவானதுதான் இந்த வள்ளுவர் கோவில் பிரச்னையும். தமிழர்கள் ஏற்றுக் கொண்டிருந்தால் தமிழகம் முழுதும் வள்ளுவர் கோவில்கள் பரவி இருக்குமே? அவர்கள் உண்மை அறிவார்கள்.
பார்ப்பனர்கள் வள்ளுவரை தனதாக்கிக் கொள்ள செய்த சூழ்ச்சிகள் ஆயிரம். அவைகள் ஏன் எடுபடவில்லை என்றால் அவர்களுக்கு உண்மையில் அதில் ஈடுபாடு இல்லை. நாடகத்துக்கு ஒரு கோவில் கட்டினால் அதை உண்மையாக பரப்ப அவனுக்கு என்ன பைத்தியமா ?
அது மட்டுமல்ல. முன்னோர்களை நடுகல் நாட்டி வழிபடுவது தமிழர் மரபு. அந்த வகையில் கூட வள்ளுவருக்கு கோவில் அமைந்ததாக கொள்ளலாம்.
இந்த ஒன்றை சான்றாக காட்டி வள்ளுவரை இந்துவாக மத மாற்றம் செய்யும் சங்கப் பரிவாரங்களின் முயற்சி ஒருபோதும் வெற்றி அடையப் போவதில்லை.