மதம்

நாத்திகர் என ஏன் சான்றளிக்கக் கூடாது? குஜராத் உயர் நீதிமன்றம் கேள்வி??!!

Share

ராஜ்வீர் உபாத்யாய ஒரு ஆட்டோ ரிக்சா ஓட்டுனர்.

அவர் கரோடா பிராமின் என்ற தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்.

வாழ்க்கை முழுதும் சாதி காரணமாகவே ஒவ்வொரு கட்டத்திலும் போராடிக் கொண்டே வாழ்ந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் இந்து மதத்தில் இருந்து விலக முடிவெடுத்தார். ஆனால் வேறு எந்த மதத்திலும் சேர விரும்பவில்லை. எனவே நாத்திகர் ஆக வேண்டும் என முடிவெடுத்தார்.

குஜராத்தில் ‘மத சுதந்திர சட்டம்” அமுலில் உள்ளது. அங்கு மதம் மாறினால் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும்.

அதுவே வேடிக்கை. மத சுதந்திரம் அமுலில் இருந்தால் எந்த குடிமகனும் தன் விருப்பப் படி மதம் மாற உரிமை உண்டு என்றுதானே பொருள். அதற்கு எதற்கு மாவட்ட ஆட்சியரின் அனுமதி?. வேண்டுமானால் அவருக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்று விதி வைக்கலாம். அனுமதி வேண்டும் என்பது சுதந்திர உரிமையை கட்டுப்படுத்துவதாக ஆகாதா?

ஆனால் ராஜ்வீர்  மாவட்ட ஆட்சியரிடம் தான் இந்து மதத்தில் இருந்து நாத்திகர் ஆகி விட்டதாகவும் அதற்கான சான்றிதழை தரும்படியும் கேட்டார். அதை இரண்டு ஆண்டுகள் கிடப்பில் போட்ட மாவட்ட ஆட்சியர்   மத சுதந்திரம் என்பது ஒரு மதத்தில் இருந்து வேறொரு மதத்துக்கு மாறுவது தானே தவிர நாத்திகம் என்பது ஒரு மதம் ஆகாது என்பதால் சான்று வழங்க முடியாது என மறுத்தார்.

மாவட்ட ஆட்சியரின் உத்தரவை எதிர்த்து மேன்முறையீடு செய்த ராஜ்வீரின் மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் அரசுக்கு அறிவிப்பு  அனுப்ப உத்தரவிட்டு ஏன் நாத்திகர் என சான்று வழங்க கூடாது என கேட்டு வழக்கை ஒத்தி வைத்திருக்கின்றனர்.

மத சுதந்திர சட்டத்தில் தகுந்த திருத்தம் செய்யும்படியும் ராஜ்வீர்  கேட்டுக்  கொண்டிருக்கிறார். ஒரு சட்டத்தையே ஒரு மாவட்ட ஆட்சியர் எப்படி  திரித்து கூறுகிறார் பாருங்கள். ஐஏஎஸ் படித்த அவருக்கு சட்டம் தெரியாமல் இருக்க  முடியாது.

பொதுமேடை வலியுறுத்தி வருவதைப் போல நாத்திகராக இல்லாமல் அதே நேரம் எந்த மதத்தையும் சாராமல் ஆத்திகராக இருப்பவர்களையும் அங்கீகரிக்க வேண்டும்.     

அதைத்தான் வள்ளுவரும், திருமூலரும், வள்ளலாரும் வலியுறுத்தி வந்தார்கள் என்பதை மனதில் கொள்ள வேண்டும். அதுவே தமிழர் ஆன்மிகப் பாதை. 

அதுவே உண்மையான ஆன்மிகப் பாதை. அது தமிழர்களுக்கு மட்டுமல்லாமல் இந்தியர்களுக்கு மட்டுமல்லாமல் அகில உலகத்தாருக்கே வழி காட்டும் பாதை.

உலகில் மத சண்டைகள் தீர இது ஒன்றே வழி.!

This website uses cookies.