பிப்ருவரி மாதம் 5ம் தேதி தஞ்சை பெருவுடையார் கோவிலுக்கு குடமுழுக்கு நடக்க இருக்கிறது.
ராஜராஜ சோழன் தமிழர். சைவ மகுட ஆகமப் படி அமைந்த பெரிய கோவிலுக்கு 48 ஓதுவார்களை நியமித்து 12 திருமுறைகளை ஓதி வழிபட ஏற்பாடுகளை செய்திருக்கிறார்.
ஆனால் இன்று நிலைமை என்ன?
தமிழ் ஓதப்படுவதை யாராவது கேட்டிருக்கிறார்களா? முழுநேரமும் தமிழ் ஒலிக்க வேண்டிய ஆலயத்தில் புரியாத சமஸ்கிரிததில் என்னவோ சொல்லி அர்ச்சனை செய்வதை கேட்டுக் கொண்டுதான் தமிழர்கள் வரமுடியுமே தவிர புரியும் மொழியில் வழிபாடு நடத்த முடியுமா?
சிவாச்சாரியார்களை கேட்டால் தேவாரம் ஓதிய பிறகுதான் தீபாராதனை காட்டுகிறார்களாம். பலமுறை சென்று பார்த்த வகையில் அப்படி பாடி நான் கேட்டதாக நினைவில்லை.
சிவாச்சாரியர்கள் தமிழர்களா பார்ப்பனர்களா என்ற கேள்விக்கு நேரடியாக பதில் வராது. ஏனென்றால் அவர்கள் எல்லாம் பிராமணர் சங்கத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்கள். எப்படி தமிழர் ஆவார்கள்? தமிழருக்கு எப்படி எப்போது சமச்கிரிதம் தெரிய ஆரம்பித்தது? ஏதோ ஒரு கட்டாயத்துக்காக கற்றுக் கொண்டோம் என்றாலும் ஏன் தமிழை பயன் படுத்தாமல் இறைப்பணி செய்கிறீர்கள்? தமிழர்களாக இருந்து இனத் துரோகம் செய்து வாழ்பவர்கள் என்ற அவப்பெயர் உங்களுக்கு தேவையா?
அக்கறையிருப்பவர்கள் விரும்பினால் தமிழில் வெளியில் நின்று பாடுவதை யார் தடுத்தார்கள் என்று வீம்புக்கு கேள்வி கேட்கலாமே தவிர ஏன் வெளியில் நின்று தமிழில் பாட வேண்டும் அருகில் நின்று பாடக்கூடாதா என்ற கேள்விக்கு என்ன பதில்?
அப்படி ஒரு நிலை வந்தால் அதையும் நாங்களே செய்வோம் என்பதையும் ஏற்க முடியாது. இறைப்பணியில் உன்னோடு நாங்களும் தான் சேர்ந்து செய்வோம். மறுக்க உனக்கு உரிமையில்லை.
தகுதி உள்ள அர்ச்சகர்கள் பணி நியமன ஆணையை எதிர்பார்த்து காத்துக் கிடக்கிறார்கள். கேரளாவில் கம்யுனிஸ்டு அரசு நிறைவேற்றிய அனைத்து தரப்பினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற ஆணையை தமிழக அரசுதான் நிறைவேற்றாமல் காலம் கடத்துகிறது.
சம்பிரதாயம் என்ற செல்லாத, சொத்தை வாதத்தை சொல்லிக் கொண்டிருக்காமல் தமிழக அரசு உடனடியாக செயல்பட்டு தமிழில் குடமுழுக்கு நடத்த முயற்சிகளை துரிதப்படுத்த வேண்டும் என்பதே எல்லாருடைய எதிர்பார்ப்பும்.
அன்று மன்னன் விரும்பியதை செய்து முடித்த இறைப்பணி யாளர்கள் இன்று அரசு விரும்புவதை செய்து முடிக்க கடைமைப் பட்டவர்கள் என்பதை நிலைநாட்ட வேண்டிய காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.