தெருக்களை ஆக்கிரமித்து இருக்கும் வழிபாட்டுத்தலங்கள்
பொது இடங்களை ஆக்கிரமித்து எத்தனை வழிபாட்டு தலங்கள் உள்ளன என்று அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு இட்டு இருக்கிறது.
அரசு அலுவலக வளாகங்களில் வழி பாட்டு தலங்கள் இருக்கக்கூடாது என்ற 1968-ம் ஆண்டின் தமிழக பொதுத்துறை ( சட்டம் மற்றும் ஒழுங்கு ) அரசாணை மற்றும் அதை வலியுறுத்தி 1994-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை ஆகியவைகளை அமுல்படுத்த தாக்கல் செய்யப்பட்ட மனுவில் சென்னை உயர் நீதிமன்றம் மேற்கண்ட அறிக்கை கேட்டு உத்தரவிட்டிருக்கிறது.
இப்போது, நீதிமன்றம், மருத்துவமனை, காவல் நிலையங்கள் அரசு அலுவலகங்கள் என்று எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் தெய்வங்களும் சிலுவைகளும், பிறைகளும் அகற்றப் பட்டால்தான் இந்த நாடு மதம் சார்ந்தது அல்ல என்ற உணர்வு தழைக்கும். மத போட்டி மறையும்.
தெரு ஆக்கிரமிப்பு கோவில்கள் லட்சக் கணக்கில் இருக்கும். கிறிஸ்தவர்கள் தெரு முனைகளில் ஆக்கிரமித்து மேரிமாதா, சிலுவை போன்றவற்றை வைத்து இருப்பார்கள். முஸ்லிம்கள் சில இடங்களில் நட்ட நடுத்தெருவில் தர்காக்களை வைத்திருக்கிறார்கள். நீதிமன்ற கருத்துப்படி எல்லா ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட வேண்டும்.
இதில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என்ற பாகுபாடு கூடவே கூடாது. அவர்கள் அனைவரும் ஆக்கிரமிப்பாளர்கள் என்ற முறையிலேயே அணுகப்பட வேண்டும்.
அநேகமாக எல்லா ஆக்கிரமிப்புக் கோவில்களும் தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டவையே. மத உணர்வுள்ளவர்களின் ஆதரவைப் பெற்று பின்னர் விரிவு படுத்திவிடுகிறார்கள்.
அதுவும் சென்னை போன்ற நகரங்களில் தான் தெரு ஆக்கிரமிப்பு கோவில்கள் அதிகம்.
மிகவும் சிறிதாக ஒரு சிலையை வைப்பார்கள். பின்னர் சில மாதங்களில் அது சிறிதாக விரிவு படுத்தப்படும். கோவில் கட்டுவதை ஒரு தொண்டாக இல்லாமல் ஒரு வணிகமாக பார்த்துத் தான் இவை தோன்றுகின்றன.
அதிலும் சில காலமாக சீரடி சாய்பாபா கோவில்கள் நடமாடும் வண்டிகளில் ஆரம்பித்து தெரு முனை கோவில் என்று பல ரூபங்களில் கிளை பரப்பிக்கொண்டிருக்கிறது. அதற்கு என்று முதலீடு போடுவதற்கு என்று சிலர் இருக்கிறார்கள்.
பக்தி வணிகம் பல ரூபங்களில் கிளை பரப்பிக் கொண்டிருக்கிறது.
இதிலே பலி ஆவது உண்மை பக்திதான்.
அதிலும் திடீர் திடீர் என்று கிராமப் புறத்து அய்யனார் கோவில்களுக்கு பக்கத்தில் ஆஞ்சநேயர் கோவில்கள் முளைக்கின்றன. இதெல்லாம் யார் வேலை என்றால் தமிழர் தெய்வங்களுக்கு பதில் சனாதன தெய்வங்களை பிரபலபடுத்தும் வேலையில் யாருக்கு அக்கறை இருக்கிறதோ அவர்களால் முடுக்கி விடப்படுகிறது.
பாமர இந்துக்களுக்கு தெருக்கொவில்கள் பெரிதும் ஆறுதல் என்பதும் உண்மைதான். அவர்களுக்கு பக்தியை வீட்டிலேயே கடைப்பிடிக்க கற்றுக் கொடுக்க வேண்டும்.
உண்மையான் பக்தி மார்க்கம் பரவ தெருக்கோவில்கள், சிலுவைகள், பிறைகள் இடம் கொடுத்து ஒதுங்க வேண்டும் அல்லது அரசு ஒதுக்க வேண்டும்.
அதற்கு அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.