திருச்சி அருகே முத்தையம்பாளயத்தில் கருப்புசாமி கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அமாவாசையில் சிறப்பு பூசை நடத்தி அருள்வாக்கு கூறும் பூசாரி தனபால் பூசை முடித்து பக்தர்களுக்கு பிடிக்காசு வழங்குவதை ஒட்டி பல மாவட்டங்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடினார்கள்.
பிடிக்காசை வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.
அப்போது கூட்ட மிகுதியால் பக்தர்களுக்கு இடையே போட்டாபோட்டி ஏற்பட்டு ஒருவரை ஒருவர் முண்டியடித்துக் கொண்டு முன்னேறி செல்ல முயன்ற போது இரும்பு தடுப்பு சரிந்து விழுந்து அதன் கீழ் சிலர் சிக்கி இருக்கின்றனர். கீழே விழுந்தவர்களை மற்றவர்கள் மிதித்துக் கொண்டு சென்று இருக்கிறார்கள். அதில் சிக்கி நான்கு பெண்கள் உட்பட ஏழு பேர் அதே இடத்தில இறந்திருக்கிறார்கள்.
எல்லாம் 50-60 வயதுடையவர்கள். 12 பேர் படுகாயம் அடைந்திருக்கிறார்கள்.
காவல்துறை பாதுகாப்பு கொடுக்கப் பட்டதா மனு கொடுத்தார்களா இல்லையா என்பது தெரியவில்லை. பூசாரிக்கு அந்த முன்னேற்பாடு செய்ய தெரியவில்லையா ஆலோசகர்கள் இல்லையா என்பதும் தெரியவில்லை.
அதற்குபின் நடந்ததுதான் கொடுமை. ஏழு பேர் இறந்து கிடக்கையில் விழா தொடர்ந்து நடந்திருக்கிறது. பூசாரியும் தொடர்ந்து ஏராளமான மூட்டைகளில் சில்லறை காசுகளை நிரப்பி வைத்துக் கொண்டு பிடிக்காசு வழங்கிக் கொண்டு இருந்திருக்கிறார். பக்தர்கள் என்போரும் தங்களுக்கு பிடிக்காசு கிடைத்தால் போசும் என்ற மனநிலையில் பூசாரியை நோக்கி சென்று கொண்டு இருந்திருக்கிறார்கள்.
மாவட்ட ஆட்சியர் அங்கு வந்து எச்சரிக்கை செய்த பின்னர்தான் பிடிக்காசு வழங்கும் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டிருக்கிறது.
இந்த மிருகங்களை பக்தர்கள் என்று யாரேனும் ஏற்றுக் கொள்வார்களா? பக்தர்கள் என்று இவர்கள் சொல்லிக் கொள்ளலாமா?
தமிழ்நாட்டில் பக்தர்கள் என்பவர்களின் தன்மை எப்படிப் பட்டது என்பதற்கு இதைவிட ஒரு சான்று இருக்க முடியாது.
பிரதமர் மோடி இறந்தவர்களுக்கு இரண்டு லட்சமும் காயம் அடைந்தவர்களுக்கு தலா ஐம்பதாயிரமும் அறிவித்திருக்கிறார். முதல்வர் தலா ஒரு லட்சம் அறிவித்தார்.
அவர்களுடைய நம்பிக்கை சரியா இல்லையா என்பது வேறு. அது அவர்கள் உரிமை.
ஆனால் சக மனிதர்கள் இறந்திருக்கிறார்களே என்ற உணர்வைக்கூட ஒரு நம்பிக்கை தடுக்குமானால் அது பக்தியா முட்டாள்தனமா??!!
காவல்துறை ஏன் தன் கடமையில் இருந்து தவறியது என்பதற்கும் ஒரு விசாரணை தேவை. பூசாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. விசாரணை நடக்கட்டும்.
தமிழ் அமைப்புகள் இதிலும் கவனம் செலுத்த வேண்டும்..
இந்து அறநிலைய துறை என்பது சொத்து பாதுகாப்புக்கு மட்டுமல்ல. மக்களை வழி நடத்தவும் வேண்டும். நம்பிக்கையின் பேரால் நடக்கும் அத்துமீறல்களை அனுமதிப்பது அல்ல மத சுதந்திரம்.
This website uses cookies.