திருப்பூர் மாவட்டம் ஏறக்காரம்பட்டி கிராமத்தில் 800 ஆண்டு பழமையான அய்யனார் சிற்பம் கண்டெடுக்கப் பட்டது தொல்துறை ஆராய்ச்சியாளர்களை மட்டுமல்லாது தமிழ் உணர்வாளர்களையும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
120 அங்குல அகலமும் 60 அங்குல உயரமும் கொண்ட இந்த சிற்பம் தனியார் ஒருவரின் வேம்பு மரத்தின் அடியில் இருந்து கண்டு எடுக்கப் பட்டது.
இந்த கண்டுபிடிப்பை மேற்கொண்ட வீரராஜேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மைய நிர்வாகிகள் எஸ் ரவிக்குமார் , கே பொன்னுசாமி , எஸ் சதாசிவம் மற்றும் எஸ் வேலுசாமி ஆகியோர் போற்றுதலுக்கு உரியோர்.
அய்யனார் பழங்குடி மக்களால் தங்கள் குல தெய்வமாக பய பக்தியுடன் வணங்கப் படும் தெய்வம். இது பொதுப்பெயர்.
முன்னோர் வழிபாடு பற்றி சங்க கால கலித்தொகை பேசுகிறது.
இந்த கல் சிற்பத்தில் அய்யனார் ‘ மகாராஜா லீலாசன ‘ பாவனையில் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார்.
அதாவது வலது கால் படுக்கை வாக்கில் வளைந்தும் இடது கால் நெட்டு வாக்கில் வளைந்தும் உள்ளது. அவரது இடது கை இடது முழங்காலில் இருக்கிறது. வலது கையில் செண்டு என்ற ஆயுதம் ஏந்தி இருக்கிறார். அவர் எட்டு வித ஆபரணங்களையும் அணிந்து இருக்கிறார். அவரது இரு மனைவியர் பூரணை மற்றும் புஷ்கலா இரு புறமும் இருக்கிறார்கள்.
இந்த சிற்பம் 12 ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்க வேண்டும்.
எனது கருத்து அநேகமாக தமிழகத்தின் எல்லா கிராமங்களிலும் இருக்கும் எல்லா அய்யனார்களும் அந்தந்த கிராமத்து முன்னோர்கள். ஒவ்வொரு கிராமத்து அய்யனாருக்கும் ஒவ்வொரு பெயர் இருக்கும். அதாவது அவர்கள் எல்லாம் அந்தந்த கிராமத்து முன்னோர்கள் தெய்வங்களாக வழிபடப் பட்டவர்கள்.
எல்லா அய்யனார் கோவில்களிலும் ஆடு கோழி பலியிடுவது வழக்கம்.
எனவே இவை தமிழர் குல தெய்வங்கள்.
இவர்களை சிறு தெய்வங்கள் என்று அழைப்பதே தவறு.
தெய்வங்களில் சிறு தெய்வம் பெரு தெய்வம் என்று பிரிப்பது பெரும் பிழை.
எல்லா தெய்வங்களுமே நமது முன்னோர்கள் என்று வரையறை செய்து கொண்டால் ஒரு பிழையும் வராது.
‘நடுகல் வணக்கம் ‘ என்பது தமிழர் முன்னோர் வழிபாட்டு முறை. யாகம் வளர்ப்பதற்கும் தமிழர் வழிபாட்டு முறைக்கும் தொடர்பே இல்லை.
அதைத்தான் இப்போது திருப்பூரில் கண்டு எடுத்திருக்கிறார்கள் .
மேற்குக் கடற்கரை ஓர முசிறி பட்டணம் கிழக்கு கடற்கரை ஓர பூம்புகார் இடையே இருந்த பூர்விக வணிக பாதை இதுவாகத்தான் இருக்க வேண்டும். வெள்ளலூர் சூலூர் காங்கேயம் கரூர் நகரங்களை இணைக்கும் ராஜகேசரி பெருவழி யாக இது இருந்ததாக ஆராய்ச்சி மையத்தின் எஸ் ரவிக்குமார் கூறுகிறார்.
அய்யனார் கோவில்களில் எப்படி பார்ப்பனர் புகுந்து பூசை செய்ய ஆரம்பித்தார்கள்?
முன்பெல்லாம் தமிழர்கள் தான் பூசாரிகளாக இருந்தார்கள். அவர்கள் இடங்களை பின்னால் பார்ப்பனர்கள் கைப்பற்றிக் கொண்டார்கள்.
தமிழ் அர்ச்சனைகள் மறைந்து சமஸ்க்ரித மந்திரங்கள் ஆக்கிரமித்துக் கொண்டன.
புரியாத மொழியில் அவர்கள் ஏதோ ஸ்லோகங்கள் சொல்ல இவர்கள் பொருள் புரியாமல் ஏதோ சாமியை பாடுகிறார்கள் என்று வாய்மூடி மௌனிகளாக கும்பிட்டு வந்து கொண்டிருக்கிறார்கள்.
இது என்ன வகை பக்தி ?
அடிமைப் புத்திக்குப் பெயர் பக்தியா?
தமிழர் சிந்தனையை இந்த திருப்பூர் கண்டுபிடிப்புகள் தட்டி எழுப்பினால் நல்லது.
This website uses cookies.