சென்ற ஆண்டுதான் உள்ளாட்சித் தலைவர்கள் நேரடியாக மக்களால் தேர்ந்து எடுக்கும் வகையில் சட்டத்தை இயற்றியது அதிமுக அரசு.
உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கால் உடனடியாக தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டிய நிலையில் இருக்கும் அதிமுக அரசு சென்ற ஆண்டு கொண்டு வந்த சட்டத்தை மாற்றி மறைமுகமாக உள்ளாட்சி தலைவர்கள் தேர்ந்து எடுக்கப்படும் வகையில் அவசர சட்டம் கொண்டு வந்து உள்ளது.
அதுவும் மக்களால் தேர்ந்து எடுக்கப் படும் மேயர்கள் தலைவர்கள் கவுன்சிலர்களின் தயவில் செயல் பட வேண்டி உள்ளது என்று காரணம் காட்டித்தான் சட்டம் கொண்டு வந்தது அதிமுக. .
அதிமுகவின் கூட்டணி கட்சிகளே இந்த நடவடிக்கையை கண்டிப்பதை பார்க்கும்போது இவர்களிடம் இருந்து தப்பிக்கவே அதிமுக அரசு இந்த நடவடிக்கையை எடுத்திருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது.
இரண்டு மேயர் தொகுதிகளை குறிவைத்த பாஜக வுக்குத்தான் ஏமாற்றம் அதிகம். பாமகவும் தேமுதிகவும் ஏமாற்றத்தின் உச்சியில்.
நேரடி தேர்தல் என்றால் மக்கள் வாக்கு செலுத்த வேண்டும். மறைமுக தேர்தல் என்றால் பிரதிநிதிகளை விலைக்கு வாங்கி விடலாம் என்று கணக்குப் போடுகிறது அதிமுக.
பிரதிநிதிகள் தங்கள் சொந்தக் காசை செலவு செய்து வெற்றி பெற்று வந்து மேயர் வேட்பாளரிடம் கறந்து விடலாம் என்று நம்பிக்கையுடன் காத்திருப்பார்கள்.
முறைகேடுகளை செய்யும் போதுதான் நாம் மக்களாட்சிக்கு தகுதி யானவர்கள் தானா என்ற கேள்வி எழுகிறது.
நேரடித் தேர்தல் என்றால் கட்சி செலவு செய்யும். இப்போது கவுன்சிலர்கள் தாங்களாகவே செலவு செய்து வரவேண்டும்.
இதிலும் பலருக்கு ஏமாற்றம்.
தேர்தலுக்கு முன்பே தன் தோல்வியை அதிமுக ஒப்புக்கொண்டது போல் இது இருக்கிறது.
இதில் நீதிமன்றம் தலையிட்டு செய்யப் போவது எதுவுமில்லை. அரசின் கொள்கை முடிவுகளில் எப்போதும் நீதிமன்றங்கள் தலையிடுவதில்லை.
இது எடப்பாடியின் வியூகத்துக்கு கிடைத்த வெற்றியா தோல்வியா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். அதாவது தேர்தல் நடந்தால்.?!
நேரடியோ மறைமுகமோ உள்ளாட்சி தேர்தல் நடைபெற வேண்டும்.
அதுவே மக்களின் எதிர்பார்ப்பு.