சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றங்களில் வழக்கறிஞராக தொழில் செய்யும் வாஞ்சிநாதன் மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் ஒருங்கிணைப்பாளராக வும் இருக்கிறார்.
இவர் தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு என்ற அமைப்பின் சார்பில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.
இவரை விமான நிலையத்தில் வைத்து பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட சட்ட பிரிவுகளின் கீழ் பதிவான வழக்கில் கைது செய்திருக்கிறார்கள்.
அந்த வழக்கு பொய்யா உண்மையா என்பது நீண்ட விசாரணைக்கு பின்பே தெரிய வரும். அதற்கு பல ஆண்டுகள் பிடிக்கும். இந்த தாமதம்தான் பிரச்னையின் மையப் புள்ளி.
இதை ஆட்சேபித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார்கள்.
நமக்கு எழும் கேள்வி வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் மட்டும்தான் செய்ய முடியுமா?
நன்றாக இது பொய் வழக்கு என்று தெரியும் வழக்கில் ஏன் பொய் வழக்கு போட்டவர் மீது குற்ற வழக்கு போட்டு தண்டிக்க முடியவில்லை.
சட்டத்தில் இதில் இடமில்லை என்று சொல்ல முடியாது.
அதில் ஆயிரம் சந்து பொந்துகள் உள்ளன. நீதிமன்றத்தின் நெடிய படிக்கட்டுகளை தொடர்ந்து தட்டிக் கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் நீதி கிடைக்கும்.
பொய் வழக்கு போடுகிறோம் என்ற பயம் காவல் அதிகாரிகளுக்கு அறவே இல்லை. ஏன் என்றால் யார் நீதிமன்றத்துக்கு அலைவார்கள். செலவு செய்வார்கள். அதுவே பயமின்றி பொய் வழக்கு போடும் துணிவை தருகிறது.
வக்கீல்கள் தங்கள் மீதான பொய் வழக்குகளில் தக்க நிவாரணம் பெற முடியாது என்பது நீதித் துறைக்கே களங்கம்.