தமிழக அரசியல்

பாமக-வின் சந்தர்ப்பவாத அரசியலை ஒப்புக்கொண்ட அன்புமணி ராமதாஸ்?!

Share

சந்தர்ப்பவாத அரசியலை ஒப்புக்கொண்ட அன்புமணி ராமதாஸ்

திமுக -அதிமுக வோடு இனி கூட்டணி கிடையாது என்று மருத்துவர் ராமதாஸ் அறிவித்திருந்தார். இருவரும் ஊழல் குற்றவாளிகள் என்பது அவரது முடிவு.

வரும் பாராளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டு என்பது அவரவர் உரிமை. ஆனால் அதற்கு ஏதாவது காரணம் கூற வேண்டும். நேற்று வரை எதிரியாக இருந்தவர்களுடன் இன்று கூட்டு வைத்துக் கொண்ட செயலை எல்லாக் காலத்திலும் எல்லாரும் செய்திருக்கிறார்கள்.

ஆனால் நான்தான் நாணயமானவன் மற்ற எல்லாரும் அயோக்கியர்கள் என்று மார் தட்டிக் கொள்ள வேண்டும் என்றால் அதற்கு நீங்கள் சொல்லியபடி நடக்க வேண்டும்.

திமுக- காங்கிரஸ்-கம்யுனிஸ்டுகள் -முஸ்லிம் லீக் -வி சி -மதிமுக கூட்டணி ஏறத்தாழ முடிவாகி  விட்ட நிலையில் மற்றவர்களுக்கு ஏதாவது வழியை தேட வேண்டிய நிலை.  அதிமுக பாஜக வலையில் விழுந்து விட்டதாக அறிகுறிகள் தெரிகின்றன. அதில் பாமகவும் தேமுதிகவும் சேரும் என்ற அடுத்த கணக்கு தவிர்க்க முடியாதது.

            ஆனால் இன்று அன்புமணி ராமதாஸ் ‘  நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து அதிமுக- மற்றும் திமுக வுடன் பேச்சு வார்த்தை நடக்கிறது. முடிந்தவுடன் அறிவிப்போம்’ என்று பேசியிருக்கிறார். 

  இதைவிட சந்தர்ப்ப வாதம் வேறென்ன இருக்க முடியும்? 

பாமக வுக்கு யாருடன் கூட்டணி என்று தீர்மானிக்க இருக்கும் உரிமையை யாரும் கேள்வி கேட்க முடியாது.

பாமக -விடுதலை சிறுத்தைகள் கூட்டணி முறிந்ததன் காரணத்தை ஊர் ஒப்புக் கொள்ளும் வகையில் யாராவது விளக்கி இருக்கிறார்களா?

தமிழர் ஒற்றுமையை வலியுறுத்தும் பாமக  சாதிய அரசியலில் இருந்து வெளி வர வேண்டும் என்று ஏன் முடிவெடுக்க வில்லை? மீண்டும் மீண்டும் சாதி அரசியலை விரிவாக்கும் வேலையை தானே செய்து வருகிறார்கள். சாதி நிலைத்தால் தமிழர் ஒற்றுமை கானல் நீர் தானே?

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் முன்னெடுத்த தன்மான நேர்மையான அரசியல் இன்று பா ம க வுக்கு அன்னியப் பட்டு விட்டதா?

பாமக  எடுக்கும் முடிவுக்கு அப்போது அவர்கள் விளக்கம் அளித்து இருக்கலாம்.

மாறாக திமுக -அதிமுக இருவருடனும் பேசிக்கொண்டு இருக்கிறோம் என்று ஒப்புக் கொண்டதன்  மூலம் அரசியல் லாபத்துக்காக யாருடனும் சேரத் தயாராக இருக்கும் கட்சிதான் பாமக என்று அன்புமணி ராமதாஸ் ஒப்புக்கொண்ட தாகத்தான் பொருள்.

விடுதலை சிறுத்தைகள் முன்பே திமுக அணியில் இருக்கும் போது பாமக பேசிக்கொண்டிருகிறது  என்று செய்தி வெளியிட்டு அவர்களுக்குள் பிளவை  ஏற்படுத்தும் முயற்சியாக அன்புமணி இப்படி பேசினாரா என்பதும் தெரியவில்லை.

அதையும் தாண்டி மீண்டும் விடுதலை சிறுத்தை களோடு கை கோர்க்கத் தயார் என்பது அன்புமனியின் செய்தியாக இருக்கு மானால் அது நல்ல செய்தியாக இருக்கும். அதை திமுக வரவேற்கவும் செய்யலாம்.

திருமாவளனோடு சேர்ந்ததால் தான் வன்னியர் வாக்கு கிடைக்க வில்லை என்பது  மருத்துவர் ராமதாசின்  தவறான மதிப்பீடு. ஒற்றுமையை ஏற்படுத்த உழைத்தவர் பின் வாங்கிய நிகழ்வு வரலாற்றின் சோகம்.

என்ன முடிவை அறிவித்தாலும் இன்று அன்புமணி தன் இரட்டை முகத்தை வெளிக்காட்டி இருக்க  வேண்டாம்.

This website uses cookies.