குற்றம் செய்திருந்தால் யாராக இருந்தாலும் கைது செய்யப் பட்டு விசாரணை செய்வதில் தவறு இல்லை. அது கடமையும் கூட.
ஆனால் குற்றங்களை தடுக்கிறோம் என்று மனித உரிமைகளுக்கு கல்லறை கட்டுவதை ஏற்க முடியுமா?
மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி பல பிரச்னைகளை கையாளுகிறவர்.
அவர் மீது 22 வழக்குகள் பதியப் பட்டுள்ளனவாம்.
அவர் என்ன அவ்வளவு பயங்கரவாதியா? அரசுக்கு எதிரான பல கருத்துக்களை கொண்டிருப்பவர் என்றால் பரப்புரை செய்வது அவர் கடமை. அதில் அரசுக்கு ஆட்சேபணை இருக்க முடியாது.
அரசை, அரசின் கொள்கைகளை விமர்சிக்கவே கூடாதா?
சமீபத்தில் ஜெனீவாவில் மனித உரிமை சம்பந்தப் பட்ட உரை ஒன்றை அவர் ஐ நா வின் கூட்டத்தில் பேசியிருக்கிறார்.
அதில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு அதில் 13பேர் இறந்தது பற்றியெல்லாம் பேசினாராம். அதற்காக அவர் இந்தியா திரும்பி பெங்களூரில் வந்திறங்கியபோது கைது செய்யப் பட்டிருக்கிறார். தேச துரோக குற்றமாம்.
நீதிமன்றம் அவரை ரிமாண்ட் செய்ய மறுத்து காவல் துறை விசாரணைக்காக அனுப்பி இருக்கிறது. ஐநா வில் பேசியது எப்படி தேச விரோத மாகும் என்று கேள்வியும் எழுப்பி இருக்கிறது.
நீதிமன்றத்தால் விடுதலை செய்யப் பட்ட அவரை விசாரணைக்குப் பின் மீண்டும் வேறு வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்து விட்டார்கள். புழல் சிறையில் இருந்தால் வந்து பார்ப்பார்கள் என்று வேலூர் சிறைக்கு மாற்றி இருக்கிறார்கள்.
இப்படியா ஒரு ஜனநாயக நாட்டில் கருத்துரிமை நசுக்கப் படும்?
நீதி மன்றத்தில் வெளியே வரும் அவரை வலுக்கட்டாயமாக கைது செய்து ஜீப்பில் ஏற்றி அழைத்துச் செல்வதை கண்டு ஏன் எந்த பத்திரிகையும் கண்டித்து எழுதவில்லை. ?
தமிழ் நாட்டில் ஊடகங்கள் எப்படி செயல் படுகின்றன என்பதற்கு இதுவே சான்று.
எதிர்க் கருத்து சொல்பவர்களை எல்லாம் தேச விரோத வழக்கில் சிக்க வைப்பது மிகவும் ஆபத்தான போக்கு.
ரிமாண்ட் செய்ய மறுத்த நடுவர் தன் கடமையை செய்திருக்கிறார். ஆனால் அவரது முடிவை காவல் துறை ஏற்றுக் கொள்ளவில்லை.
சம்மன் அனுப்பி ஆஜராக தவறினால் மட்டுமே கைது போன்ற நடவடிக்கைகளில் இறங்க வேண்டும்.
காவல் துறையின் மதிப்பை இம்மாதிரி நடவடிக்கைகள் சீர்குலைத்து விடும்.