போராட்டம் நடத்துவதற்கு எதிராக போராட்டமா?
அரசை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்கள் போராட்டம் நடத்துவதுதான் இயல்பு. அந்த வகையில் மத்திய அரசின் குடி உரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மக்கள் போராடுகிறார்கள்.
அதனால் மக்கள் மனம் மத்திய அரசுக்கு எதிராக கூர் சீவப்படுகிறது.
பாஜக என்ன செய்ய வேண்டும். இந்த எதிர்ப்பில் பொருள் இல்லை. கொண்டு வந்த சட்டம் நேர்மையானது என்று பிரச்சாரம் செய்யலாம். அவ்வளவுதானே.
ஆனால் சட்டத்துக்கு எதிராக போராடுவதை கண்டித்து ஒரு போராட்டம் அறிவித்து நடத்தியிருக்கிறது பாஜக.
நாளை ஒரு அரசு இதுமாதிரி ஒரு சட்டத்தை அமுல்படுத்தினால் மக்கள் மத்தியில் பாஜக பிரச்சாரம் செய்யாதா?
எவ்வளவு கேவலமான சிந்தனை?
முதலில் திமுகவை எதிர்த்து போராட்டம் என்று அறிவித்தார்கள். பிறகு என்ன சிந்தனையோ. மாற்றிக்கொண்டு போராடும் கட்சிகளுக்கு எதிராக என்று அறிவித்து விட்டார்கள்.
சிந்தனை வறட்சி!
எதிர்ப்பு கட்டுக் கடங்காமல் வளர்ந்து கொண்டே போவது அவர்களுக்கு கவலை அளிக்கலாம்.
இவர்கள் ஒன்றும் செய்ய முடியாது. பிரச்னைகள உருவாக்குவது மத்திய பாஜக அரசு. அதன் பலன்களை அனுபவித்துத் தானே தீர வேண்டும்.
இன்னும் கடும் தாக்குதல்களை தனது திட்டத்தில் வைத்திருக்கிறது அமித் ஷா –மோடி கூட்டணி.
அவற்றை எல்லாம் மக்கள் பெருமளவில் எதிர்க்கத்தான் போகிறார்கள். அது எந்த வடிவம் எடுக்கும் என்று இப்போது சொல்ல முடியாது.
அது அமுல் படுத்தப்படும் போது தான் தெரிய வரும்.
நாட்டை நாசகார பாதையில் கொண்டு செல்வது என்று இருவரும் முடிவெடுத்த பிறகு தடுப்பது உச்ச நீதி மன்றம் தான் என்ற நிலை கூட இப்போது மாறத் தொடங்கி இருக்கிறது. அதுதான் கவலை அளிக்கிறது.
வரும் 23 ம் தேதி பிரமாண்டமான கண்டன பேரணியை திமுக கூட்டணி கட்சிகள் மட்டும் அல்லாது எல்லாரும் சேர்ந்து நடத்த இருக்கிறார்கள். மாணவர்கள் இந்த பிரச்னையை கையில் எடுத்த பிறகு மத்திய அரசு ஏதாவது செய்து பிரச்னையின் தாக்கத்தை குறைத்தால் தவிர போராட்டம் ஓயும் என்று தோன்றவில்லை.
நியாயமான போராட்டத்தை கூட தூண்டிவிடப்படும் போராட்டம் என்று ஒரு பெயரிட்டு அலட்சியப்படுத்தினால் அதன் விளைவுகள் ஏற்படுத்தும் இழப்புகள் ஆளும் கட்சியை மட்டுமே சேரும்.