தமிழக அரசியல்

நாய்வாலை நிமிர்த்த முடியுமா பாஜக வை திருத்த முடியுமா எல் முருகனால்?!

Share

திரு எல் முருகன் அவர்கள்  தமிழக பாஜக தலைவராக நியமிக்கப் பட்டிருக்கிறார்.

பொதுமேடை அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்  கொள்கிறது .

ஒரு வழக்கறிஞர் . தேசிய தாழ்த்தப் பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர். அருந்ததியர்  வகுப்பை சேர்ந்தவர். அவருக்கு தலைவர் பதவியை தந்து தன்னை தாழ்த்தப் பட்டோர் வகுப்பின் நன்மையில் அக்கறை  கொண்ட கட்சியாக காட்டிக் கொள்ள விரும்புகிறது பாஜக.

முன்பு முயற்சி செய்து தோற்றுப் போன உக்தி அது.

பங்காரு லட்சுமணன் தேசிய தலைவராக நியமிக்கப் பட்டார். என்ன நடந்தது. ?  அவர் லஞ்சம் பெற்றதாக  தெகல்கா ஆதாரம் வெளியீட்டு அவரது அரசியலை காலி செய்தது.

இன்றைக்கும் பாஜக அதிக அளவில் தாழ்த்தப் பட்டோர் இடங்களை பாராளுமன்றத்தில் பெற்றிருக்கிறது. ஆனாலும் அவர்களுக்கு தாழ்த்தப் பட்டோர் எதிரிகள் என்பதுதானே முத்திரை.

பெற்ற இடங்கள் எல்லாம் மோடியின் ஈர்ப்பு இந்து மத ஒற்றுமையின் அடையாளம்.      தேர்ந்தெடுக்கப் பட்ட பாஜக பாராளுமன்ற உறுப்பினர்களிடம் சென்று நீங்கள் உங்கள் தொகுதியில் சம உரிமையுடன் வாழ்கிறீர்களா உங்கள் சமுதாயத்தினர் வாழ்கிறார்களா என்று  கேளுங்கள். ஆம் என்ற பதில் வராது.  இதுதான் நிதர்சனம்.

தமிழ்நாட்டிலேயே டாக்டர் கிருபாநிதியை தலைவராக கொண்டு வந்தார்கள். அவமானப்  படுத்தினார்கள். சிறுமைப் பட்டு கடைசியில் கட்சியில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்தார்.

பெயருக்குத்தான் அவர் தலைவர். அதிகாரங்கள் எல்லாம் பொதுச் செயலாளரிடம்.        அப்படித்தான் இப்போதும் நடக்கும்.

 ~ தேசிய கட்சியாக இருந்தாலும்  தமிழ்நாடு பாஜக  மாநில மக்களின் எதிர்பார்ப்புகளிலும்  நலங்களிலும் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது ~

இதுதான் மாநிலக்கட்சி தலைவராக பொறுப்பேற்ற   பின் எல் முருகன் தெரிவித்த செய்தி.

மாநில பாஜக தனி கட்சியா என்ன ? தேசிய கட்சியின்  முடிவுகளுக்கு மாறாக முடிவெடுக்க !

இந்தி திணிப்பை , சமஸ்கிரித திணிப்பை , பிற்பட்டோர் தாழ்த்தப் பட்டோர் இட ஒதுக்கீடு உரிமைகளை கைவிடுவதை  , டெல்டாவை பாலைவனம் ஆக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை , மாநில உரிமைகள் பறிப்பை  எல்லாம் எதிர்த்து போராட முடியுமா மாநில பாஜகவால்? 

ஏனென்றால்  இவைகளை  எல்லாம் நிகழ்த்துவதே அகில இந்திய பாஜக தானே ?

மாநில அடையாளங்களை அழித்து அகில  இந்திய அடையாளம் ஒன்றையே நிலை நாட்ட  பாடுபட்டுக்  கொண்டிருக்கும் கட்சி பாஜக. அதுதான் அதன் இயல்பான குணம். அதை மாற்ற  முடியும் என்று நம்புகிறாரா திரு எல் முருகன்? வளைந்து செயல்படும் வாலைக் கொண்டிருப்பது நாய்.  அதை நான் நீட்டுவேன் என்று  முயற்சித்தால் முடியுமா?

யாரையும் இழிவு படுத்தும் நோக்கம் நமக்கில்லை. நம்மை ஆண்டு கொண்டிருக்கும்  அகில இந்திய  கட்சி அது. வேறு  பொருத்தமான உதாரணம் கிடைக்க வில்லை. அவ்வளவுதான். போகட்டும்.

முதலில் ஜி கலாசாரத்தை ஒழியுங்கள். வாங்க ,  அண்ணன் , தம்பி , அய்யா என்று முகமன் சொல்ல தமிழில் வார்த்தைகளா இல்லை !

இரண்டாவது பாரத் மாதா கீ ஜெய் கோஷத்தை கைவிடுங்கள்.     இந்தியா என் தாய்நாடு.    அதை என் தாய்மொழியில்தான் வாழ்த்துவேன் என்று உறுதி எடுத்து    அன்னை பாரதம் வாழ்க என்று முழங்குங்கள் . 

உங்களை விட்டு வைத்தால் பிறகு மாநில உரிமைகளை  காப்பது பற்றி பேசுங்கள்.

 

This website uses cookies.