தமிழனின் அடையாளங்களை அழிக்கும் திட்டத்தோடு செயல்படும் கூட்டம் நீண்ட காலமாக திட்டமிட்டு ஜல்லிக்கட்டை சட்ட பூர்வமாகவே தடை செய்ய வைத்தார்கள். ஜல்லிக்கட்டு பழைய கதை என்று வரலாற்றில் எழுதி வைத்துவிட்டு மறந்து விடவேண்டியதுதான் என்று இந்து பத்திரிகை தலையங்கம் எழுதியது.
அந்த சதியை ‘ மெரீனா புரட்சி’ மூலம் முறியடித்து மத்திய மாநில அரசுகளை பணிய வைத்து இன்று சட்ட பூர்வமாகவே நடந்து வருகிறது ஜல்லிக்கட்டு.
எதிரிகள் விடுவார்களா? இன்னும் ஜல்லிக்கட்டில் வன்முறை நிகழ்வதாகவும் அதில் பலியானவர்கள் எண்ணிக்கை அதிகமாவதால் ஜல்லிக்கட்டை மீண்டும் தடை செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் கதவுகளை தட்டிக் கொண்டே இருக்கிறார்கள் பீட்டா அமைப்பின் கூலிகள்.
எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அமைப்பாளர்கள் இன்னும் கவனக் குறைவாகவே இருக்கிறார்கள். அதனால் ஜல்லிக்கட்டுக்கு வந்த ஆபத்து முற்றிலும் நீங்கி விட்டதாக கருத முடியாத நிலையே இருக்கிறது.
இன்னிலையில் ஜல்லிக்கட்டு நடத்தும் குழுவில் எங்களுக்கும் இடம் வேண்டும் என்று சில சாதி அமைப்பை சேர்ந்தவர்கள் நீதிமன்றம் சென்றிருக்கிறார்கள் .
எல்லாரையும் அரவணைத்து செல்ல வேண்டிய விளையாட்டில் சாதி வன்மம் புகுவது நல்லதல்ல. கருத்து வேறுபாடுகள் வரலாம். அதை களைய வேண்டிய முறை வழக்கா?
போராடிய பொது சாதி பார்த்தா போராடினார்கள்.? எல்லா சாதிகளும் சேர்ந்துதானே போராடினோம். பெற்ற வெற்றி எல்லாருக்கும் தானே சொந்தம். வெற்றியை இழக்க சாதியை பயன்படுத்தலாமா?
தமிழர் ஒற்றுமை சாதியால் பாதிக்கப்படுகிறது என்பது உண்மைதான். எனவே சாதி ஒழிப்பை இலக்காகக் கொள்வோம். இலக்கை அடையும் வரை ஒற்றுமையை குலைக்க சாதியை பயன் படுத்த வேண்டாம்.
தொடர்புடைய சமுதாயங்களை சேர்ந்த தலைவர்கள் அமர்ந்து பேசி தீர்வு காண முயல்வதே நல்லது.
உரிமை கோருவது தவறல்ல. ஆனால் அதன் பின்னால் வேறு யாரும் இருக்கக்கூடாது.
சட்டப் போராட்டத்தில் தோற்ற ” பீட்டா ” இப்போது சாதியை தூண்டி வெற்றி பெற திட்டமிடுகிறது.
தமிழர் வாழ்வில் சாதி புகுந்ததே சதியால் தான். அந்த சதி இப்போது ஜல்லிக்கட்டிலும் சாதி வடிவில் புகுந்து பெற்ற வெற்றியை இழக்க அனுமதிக்க கூடாது.
This website uses cookies.