தமிழக அரசியல்

பொறுப்பு முதல்வர் வேண்டுமா வேண்டாமா?!

Share

ஜெயலலிதா உடல்நலம் பெற்று மீள வேண்டும் என்பது எல்லாரது எதிர்பார்ப்பாக இருந்தாலும் அதுவரை நிர்வாகம் முடங்க வேண்டுமா என்ற கேள்விக்கு பலரும் பல கருத்துகளை சொல்லி வருகிறார்கள்.

சுப்ரமணியசாமி ஜனாதிபதி ஆட்சி வேண்டும் என்கிறார்.   வெங்கையா நாயுடு அதிமுக கட்சியே முடிவு செய்யவேண்டும் என்கிறார்.   ஸ்டாலின் பொறுப்பு முதல்வர் வேண்டும் என்கிறார்.   திருநாவுக்கரசர்  தேவையில்லை என்கிறார்.  கலைஞர் ஒரு புகைப்படத்தையாவது  வெளியிடுங்கள் என்று சொன்னார். திருமாவளவன் ஏதாவது ஒரு மாற்று ஏற்பாடு வேண்டும் என்றார்.   இப்படி ஆளாளுக்கு ஒரு கருத்தை சொல்லி வருகிறார்கள்.

அண்ணா , எம்ஜியார் போன்றவர்கள் உடல் நலம் குன்றியபோது செய்த ஏற்பாடுகளை ஒட்டியாவது ஏதாவது செய்ய வேண்டும் என்ற குரல் வலுத்துக் கொண்டிருக்கிறது.

அதிமுக கட்சி தலைவர்கள் கூடி முடிவு செய்ததாக செய்தி வந்தாலாவது கொஞ்ச நாள் பொறுத்திருக்கலாம்.      அப்பலோ மருத்துவமனை  நீண்டகாலம் முதல்வர் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என  அறிக்கை வெளியிட்டபின் பொறுப்பான முடிவை எடுக்கத் தவறுவது அதிமுக கட்சி குழப்பத்தில் இருக்கிறது என்பதன் அடையாளம்..     முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்படும்போது யார் எடுப்பார்கள்.    அவர்கள் பின்னால் கட்சி நிற்குமா?

இம்மாதிரியான பல கேள்விகளுக்கு  இடம்  கொடுக்காமல் முடிவுகள் எடுக்கபட்டிருந்தால்  கட்சி வலுவாக நீடிக்கும் என்று நம்பலாம்.

மாறாக இப்போதே குழப்பினால் சோதனை வரும்போது கட்சி கலகலத்து விடும் என்ற கருத்துதான் மேலோங்கும்.

ஸ்டாலின் சொல்வதில் தவறு இருப்பதாக தெரியவில்லை.   இதில்  என்ன அரசியல் இருக்கிறது?

வதந்திகளை பரப்புவதாக சிலர் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.     ஏன்  இடம் கொடுக்கிறீர்கள்?

முதல்வர்  பேசும் நிலையில் இருந்தால் மாற்று ஏற்பாடு தேவையே இல்லை.    மாறாக நிலைமை இருந்தால் எம்ஜியார் காலத்தில் செய்ததுபோல் ஆளுநருடன் கலந்து பேசி ஐந்து பேர் கொண்ட சப் கமிட்டி ஒன்றை போட்டு அவர்களுக்கு முடிவெடுக்கும் அதிகாரத்தை தந்து அதன்பின் அவர்களது ஆலோசனையின் பேரில் அவர்கள் சொல்லும் ஒருவரை அமைச்சரவை கூட்டங்களுக்கு தலைமை ஏற்க அனுமதித்து அவருக்கு முதல்வரின் இலாகாக்களை ஒதுக்கி அறிக்கை வெளியிட்டால் மட்டுமே அமைச்சரவை இயங்க முடியும்.

இப்போது முதல்வரின் இலாகாக்களை யார் கவனிப்பது?   அதிகாரிகளிடம் விட்டு விடுவதா?

எந்த முடிவையும் எடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருப்பது நீடித்தால் மத்திய அரசு தலையிடும் தலையிட வேண்டும் .

அப்போது மாநில சுயாட்சி  என்று கதறுவதில்  பயனில்லை.

 

This website uses cookies.