பெரும்பான்மை இழந்த எடப்பாடியின் ஆட்சி தொடர்வது மிகப் பெரிய அநீதி!
எப்படி இது சாத்தியம்?
பா ஜ க வின் ஆசியும் ஆளுநரின் தந்திரமும் இதை சாத்தியமாக்கி இருக்கிறது.
தினகரனின் ஆதரவாளர்கள் பதினெட்டு பேரை தகுதி நீக்கம் செய்த சபாநாயகர் தெரிந்தே இந்த தவறை செய்திருக்கிறார்.
சபாநாயகர் பதவி பாதி நீதிபதிக்கு சமம். கால அவகாசம் கேட்டு வழக்கறிஞர் மூலம் முறையிட்டும் கூட அவகாசம் அளிக்காமல் அவசரம் அவசரமாக தகுதி நீக்கம் செய்ய என்ன காரணம்?
அவர்கள் கட்சி மாறினார்களா? சட்ட மன்றத்தில் கொறடா உத்தரவை மீறி மாறி வாக்களித்தார்களா ?
திமுக உறுப்பினர்கள் 21 பேர் மீது குட்கா கொண்டு வந்த பிரச்னையில் உரிமை மீறல் காரணம் காட்டி பதவி பறிப்பு நடவடிக்கை எடுக்க தடை கேட்டு உயர்நீதி மன்றத்தில் வழக்கு இருக்கிறது.
அதேபோல் தினகரன் ஆதரவு உறுப்பினர்கள் பதினெட்டு பேர் மீது கட்சித் தாவல் தடை சட்டத்தின் மீது நடவடிக்கை எடுக்க தடை கேட்டும் வழக்கு இருக்கிறது. தலைவரை மாற்ற கோரி மனு கொடுப்பது தகுதி இழப்புக்கு காரணம் ஆகாது என்று தீர்ப்பு இருக்கிறது.
இந்த 39 பேரையும் பதவி நீக்கம் செய்து விட்டு வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மை காட்டி ஆட்சியல் தொடர திட்டமிட்ட எடப்பாடியின் கனவு வாக்கெடுப்பு நடத்தக் கூடாது என்ற நீதி மன்ற உத்தரவால் தகர்ந்து போய் இருக்கிறது.
இப்படி எல்லாம் மோசடிசெய்து பதவியில் நீடிக்க வேண்டுமா என்ன?
வெட்க உணர்வு மரத்துப் போய் விட்டதா? நம்பிக்கை இருந்தால் தங்கள் மீது உள்ள நியாயத்தை சட்ட மன்றத்தில் வைத்து விவாதித்து வெற்றி பெற்று ஆட்சியில் தொடர்வது மட்டுமே நாணயமானவர்கள் செய்ய வேண்டிய வேலை.
எடப்பாடி யும் பன்னீர்செல்வமும் அதைப் பற்றியெல்லாம் கவலை படாமல் பதவியில் ஒட்டிக் கொள்ள எதையும் செய்யும் மனநிலைக்கு வந்து விட்டார்கள்.
டெல்லி எஜமானர்கள் கதை வசனம் எழுதி நடத்தும் நாடகத்தில் ஒழுங்காக நடித்துக் கொண்டிருப்பது மட்டுமே இன்று இவர்கள் செய்யும் வேலை.
இவர்கள் கையில் தமிழகம் பாதுகாப்பாக இருக்குமா என்ற கேள்விக்கே இடமில்லை. தங்களையே விற்றவர்கள் நாட்டையா விற்க மாட்டார்கள்?
எஸ் ஆர் பொம்மை வழக்கில் உச்சநீதி மன்றம் எப்போதெல்லாம் ஆட்சி பெரும்பான்மை இழக்கிறதோ அப்போதெல்லாம் சட்ட மன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிருபித்து விட்டு மட்டுமே ஆட்சியில் தொடர வேண்டும் என்ற தீர்ப்பு இறுதியானது.
அந்த தீர்ப்பையே இன்று கேலிக் கூத்தாக்கு கிறார்கள்.
சட்ட மன்றத்தில் உடனடி நீதி கிடைக்காது.
நீதிமன்றத்தில் நீதி கிடைக்க மாதக் கணக்கில் காத்துக் கிடைக்க வேண்டும்.
மக்கள் புரட்சி ஒன்றே உடனடி மாற்றத்திற்கு வழி கிடைக்கலாம்.
வெடிக்குமா புரட்சி?
This website uses cookies.