எப்படியோ மூன்றாவது இடத்தை தக்க வைத்துக்கொண்டார் தினகரன்.
ஆனால் இவர் பெற்ற 22.5 லட்சம் வாக்குகளும் தேர்தல் முடிவுகளில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியவில்லை.
நான்கு சட்டமன்ற இடைதேர்தல்களிலும் மூன்று பாராளுமன்ற இடங்களிலும் இவரால் அதிமுக வெற்றி தடுக்கப்பட்டது ஒன்றே இவருக்கு ஆறுதல்.
அடுத்த அரசியலுக்கு இது போதுமா?
அதிருப்தியாளர்கள் திரும்பவும் அதிமுகவுக்கு தாவுவதை இனி இவரால் தடுக்க முடியுமா?
இனி அதிமுக என்றால் ஒபிஎஸ் – இபிஎஸ் என்றாகி விட்டது.
அமமுக என்ற தனிக்கட்சியோடு திருப்தி அடைய வேண்டியதுதான் தினகரனின் ஒரே வாய்ப்பு.
போதா குறைக்கு பெரியார் அண்ணா கொள்கைகளை தினகரன் அதிகம் பேசுவதில்லை. ஜெயலலிதா பெயரை மட்டுமே சொல்கிறார். எம்ஜியாரே பெரியார்,அண்ணா கொள்கைகளை சொல்லித்தான் அரசியல் செய்தார் தவிர தான் தனித்து எந்த கொள்கையையும் முன்னெடுத்ததில்லை. அதேபோல் ஜெயலலிதாவும் அண்ணா எம்ஜியாரை சொல்லித்தான் ஆட்சி செய்தார். தனித்து எந்த கொள்கையையும் முன்னெடுக்காத ஜெயலலிதாவை மட்டுமே முன்னிலைப்படுத்தும் தினகரன் எப்படி அரசியல் செய்ய முடியும்.
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலாவை வெளியில் வந்ததும் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பது நடக்கவே முடியாத ஒன்று.
பணம் மட்டுமே தேர்தல் வெற்றியை தீர்மானிக்கும் என்று இன்னமும் தினகரன் நம்பிக் கொண்டிருக்கிறார். பணம் தேனியில் மட்டுமே செல்லுபடியானது. அங்கேயும் கூட ஒபிஎஸ் மகன் வெற்றிபெற மோடி உதவினார் என்று ஈவிகேஎஸ் குற்றம் சாட்டுகிறார்.
வழக்கு போடப்போவதாகவும் சொல்லிக்கொண்டிருக்கிறார்.
பாஜக எதிர்ப்பு என்ற ஒரு கொள்கையில் மட்டுமே தினகரன் இதுவரை உறுதியாக இருக்கிறார். எதிர்காலத்தில் இருப்பாரா என்பதை சொல்ல முடியாது.
உள்ளாட்சி தேர்தல்களில் மட்டும் இவரால் சாதிக்க முடியும் என்று எதை வைத்து நம்புவது.? இப்போதே ஆர்கேநகர் வெற்றி பற்றி இனி பேச முடியாது என்று ஆகிவிட்டது.
இவர் எழுப்பும் புதிய புகார் தேர்தல் ஆணையம் பதில் அளிக்க வேண்டியது.
சுமார் 300 வாக்குச் சாவடிகளில் ஒரு வாக்கு கூட பரிசு பெட்டுக்கு விழவில்லையாம். அங்கே இருந்த நான்கு வாக்குச்சாவடி ஏஜெண்டுகளின் வாக்குகளும் எங்கே போனது என்பது பற்றி தேர்தல் ஆணையம்தான் பதில் சொல்ல வேண்டும் என்கிறார்.
உங்கள் ஏஜெண்டுகள் உங்களுக்குத்தான் வாக்களித்தார்கள் என்று எதை வைத்து சொல்கிறீர்கள் என்று கேட்டால் இவர் என்ன சொல்வார்?
ஆனாலும் இவரது புகாரை புறந்தள்ளி விட முடியாது. மின்னணு வாக்கு எந்திரங்கள் இன்னும் என்னவெல்லாம் கேள்விகளை எழுப்பப்போகிறதோ? விசாரணை நடக்குமா என்று கூட உறுதியில்லை.
இருக்கிற உதிரிகளில் கொஞ்சம் வலுவான உதிரி.