தஞ்சையில் நடந்த திருமணத்தில் ஸ்டாலின் முன்னிலையில் பேசிய அண்ணா திராவிடர் கழக தலைவர் திவாகரன் நாளைய முதல்வர் ஸ்டாலின்தான் என்று பேசினார். உள்ளாட்சி தேர்தலில் திமுக பெற்ற 85 % வெற்றியை ஆளும் கட்சி தட்டி பறித்து விட்டதாகவும் கூறினார். திராவிட தலைவர்கள் மறைந்து விட்டதால் இன்று கன்னடத்தில் இருந்து ஒருவர் வந்து பெரியாரை பற்றி பேசும் அளவுக்கு வந்து விட்டது . அதை தடுக்கும் ஆற்றல் ஸ்டாலின் ஒருவருக்குத்தான் உள்ளது என்றும் பேசியிருக்கிறார்.
திவாகரன் திமுகவுக்கு போகப் போகிறார் என்ற பேச்சு உடனே கிளம்பிவிட்டது. ஆனால் அதில் துளி அளவு கூட உண்மை இல்லை.
ஏற்கெனவே பலவீனமாக இருக்கும் எடப்பாடியை எல்லோரும் மிரட்ட ஆரம்பித்து விட்டார்கள்.
அமைச்சர்கள் பலரும் ஆளாளுக்கு ஏதேதோ பேசி எடப்படிக்கு சங்கடத்தை உண்டாக்கி வருகிறார்கள்.
இந்நிலையில் சசிகலா சிறையில் இருந்து வரும்போது என்ன வரவேற்பு கிடைக்கும் என்பதை பற்றி எடப்பாடி உறுதியாக எதையும் சொல்ல மறுக்கிறாராம்.
பாவம்! பாஜகவின் நெருக்குதல் ஒருபுறம், சசிகலா வரவால் அதிமுக உடையும் அபாயம் மறுபுறம் என தத்தளித்து நிற்கிறார் எடப்பாடி.
அதோடு திவாகரன் சொல்லும் எதையும் செய்து கொடுக்கும் மனநிலையிலும் இல்லையாம் எடப்பாடி.
எனவே எடப்பாடிக்கு திவாகரன் விடுத்த மறைமுகமான எச்சரிக்கை யாகத்தான் இந்த பேச்சு பார்க்கப்படுகிறது.
இதெல்லாம் ஸ்டாலினிடம் எடுபடுமா?