திருச்சியில் இன்று நடந்த குடிநீர் கேட்டு நடந்த ஆர்ப்பாட்டத்தில் கேஎன் நேரு பேசும்போது வர இருக்கிற உள்ளாட்சி தேர்தல்களில் திமுக தனித்துப் போட்டியிட வேண்டும் என்றும் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு காங்கிரசை தூக்கிச் சுமப்பது என்றும் கேட்டு அதிர வைத்தார்.
ஆனால் கேஎன் நேரு தானாக இதை பேசவில்லை. சில காங்கிரஸ் தலைவர்கள் பொறுப்பற்ற தன்மையில் பேசியதால்தான் இதை அவர் பேச வேண்டி வந்தது என்று அந்தக் கட்சிக்காரர்கள் கூறுகிறார்கள்.
நேரு தெளிவாக இது தன் சொந்த கருத்து என்றும் தன் கருத்தை தலைவர் ஸ்டாலினிடம் கூறப் போவதாகவும் இறுதி முடிவை தலைமை எடுக்கும் என்றும் கூறிவிட்டு தலைமை நீங்கள் தூக்கிச் சுமக்கத்தான் வேண்டும் என்று கூறினால் அதற்கும் தான் தயாராகவே இருப்பதாக தெளிவுபடுத்தினர் நேரு.
இன்று மாலையே பத்திரிகையாளர்களை கூப்பிட்டு தான் சொல்லியது தனது விருப்பம் என்றும் காங்கிரஸ் கூட்டணியை விட்டு திமுக வெளியேற வேண்டும் என்று தான் கூறவில்லை என்றும் மறுத்து விளக்கம் அளித்தார். திமுக அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்பதே தனது ஆசை என்றும் அவர் தெரிவித்தார். இதன் மூலம் இந்த பிரச்னை ஒரு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு திரி கொளுத்தியவர்கள் காங்கிரஸ் காரர்கள்.
இன்னும் உள்ளாட்சி தேர்தல் தேதியே அறிவிக்கப்படவில்லை. இரு கட்சிகளும் இப்போதுதான் பாராளுமன்ற தேர்தலில் வரலாற்று சாதனை வெற்றியைப் பெற்று இருக்கிறார்கள்.
அடுத்த தேர்தல் வரும்போது இரு கட்சி தலைவர்களும் உட்கார்ந்து பேசி முடிவு செய்ய வேண்டிய பிரச்னையை பொறுப்பில்லாமல் பத்திரிகைகளுக்கு அறிக்கையாக கொடுத்தால் மறு தரப்பும் அதற்கு பதில் தரத்தானே செய்யும்.
சென்னையில் உள்ள 38 வார்டுகளில் போட்டியிட்டே தீருவோம் என்று முதலில் கொளுத்திப் போட்டது காங்கிரஸ்காரர்கள்.
ஆட்சிக்கு எதிரான மக்கள் உணர்ச்சியை பயன்படுத்த முனையும் போது ஒற்றுமையை காட்ட வேண்டும்.
தலைவர்கள் பேசி முடிவு செய்ய வேண்டிய ஒன்றை தொண்டர்கள் அறிக்கை மூலம் முடிவு செய்ய முனையக்கூடாது.
மாநில காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி சென்னையில் பேசும்போது உள்ளாட்சி தேர்தலில் அவரவர் மாவட்டங்களில் 100 சதவீதம் காங்கிரசார் போட்டியிட ஏற்பாடு செய்ய வேண்டும். வெற்றிக்கு கூட்டணியை நம்பியிருக்க கூடாது. அவர்கள் வெற்றிக்கு உதவுவார்கள். நாம்தான் உழைக்க வேண்டும் என்று பேசியிருக்கிறார்.
அதில் நியாயம் இருக்கிறது. மாவட்ட அளவில் கூட்டணி தலைவர்கள் பேசி முடிவு செய்து கொள்ளுங்கள் என்று தலைமை விட்டு விட்டால் எது நடக்கும் என்று இப்போது சொல்ல முடியாது.
எது நடந்தாலும் அது ஊழல் ஆட்சியாளர்களுக்கு சாதகமாக அமைந்து விடக்கூடாது.