பாராளுமன்ற தேர்தலோடு 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் முடிந்துவிட்டது. மேலும் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடக்க இருக்கிறது. எல்லாவற்றுக்கும் சேர்த்த மே மாதம் 23ம் தேதி தேர்தல் முடிவுகள் வர இருக்கின்றன.
இப்போது 114 பேர் எடபாடியோடு இருப்பதாக கணக்கு இருந்தாலும் தினகரனோடு இருக்கும் மூன்று பேரையும் தமிமும் அன்சாரி, கருணாஸை சேர்த்து ஐந்து பேர் எதிராக இருப்பதால் உண்மையான பலம் 109 தான்.
இந்நிலையில் ஆட்சியை தக்க வைக்க குறைந்தது 9 இடங்களிலாவது வெற்றி பெற வேண்டும். வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை ஓட்டுக்கு ரூபாய் 2000 கொடுத்தும்கூட எடப்பாடிக்கு வரவில்லை.
எனவே குறுக்கு வழியில் பெரும்பான்மையை தக்க வைக்க எல்லா வழிகளிலும் முனைப்பு காட்டுகிறார்.
அதில் ஒன்றுதான் இன்று அதிமுக வின் சட்டமன்ற கொறடா ராஜேந்திரன் சபாநாயகரிடம் கொடுத்திருக்கும் கடிதம். அதில் கட்சிக்கு விரோதமாக செயல்படும் தினகரன் ஆதரவு எம் எல் ஏக்களான அறந்தாங்கி ரத்தினசபாபதி, கள்ளக்குறிச்சி பிரபு, விருத்தாசலம் கலைச்செல்வன் மூவர் மீதும் நடவடிக்கை எடுக்ககோரி கேட்டுக் கொண்டிருக்கிறார்.
சபாநாயகர் விளக்கம் கேட்டு அறிவுப்பு கொடுப்பார். விளக்கம் தந்ததும் அது ஏற்றுக் கொள்கிற விதத்தில் இல்லையென்று அவர்களை தகுதி நீக்கம் செய்வார்.
தேவைப்பட்டால் இதே நடவடிக்கையை தமிமும் அன்சாரி மீதும் கருணாஸ் மீதும் கூட எடுக்க முனைவார். ஏனென்றால் அவர்கள் தனி கட்சியாக இருந்தாலும் இரட்டை இலை சின்னத்தில் நின்று வென்றதால் அதிமுகவின் கொறடா கட்டளைக்கு கட்டுப் பட்டவர்கள்.
அதன் மூலம் பெரும்பான்மையை நிரூபிக்க எடப்பாடிக்கு தேவைப்படும் வாக்குகள் குறைந்து விடும். இதுதான் திட்டம். இதைவிட மோசடி வேறு என்ன இருக்க முடியும்?
உடனே எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அப்படி எதுவும் நடந்தால் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்படும் என எச்சரித்து இருக்கிறார்.
தமிழ்நாட்டில்தான் இத்தனை பித்தலாட்டங்கள் நடக்கின்றன. எல்லாம் சட்டப்படியே நடக்கின்றன. அதுதான் சோகம்.
எதிர்த்து வாக்களித்த ஒபிஎஸ் உள்ளிட்ட பதினொரு பேர் மீது நடவடிக்கை இல்லை. ஏனென்றால் சபாநாயகர் எந்த உத்தரவும் இடாத நிலையில் அவரை நாங்கள் உத்தரவு பிறப்பியுங்கள் என்று உத்தரவிட முடியாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு சொல்ல உச்ச நீதிமன்றம் என்ன சொல்லப்போகிறது புதிதாக என்று அலுத்துக் கொண்டு சாமானியன் தலையை பிய்த்துக் கொள்கிறான். என்னங்கடா உங்க சட்டம் என்று !
18 பேர் தகுதி இழப்பு வழக்கிலும் ஒரு நீதிபதி சரி என்றும் மற்றொருவர் சரியில்லை என்றும் தீர்ப்பளிக்க மூன்றாவது நீதிபதியும் சரி என்று என்று தீர்ப்பளித்து எடப்பாடி ஆட்சியை காப்பாற்றினார்கள்.
18 பேர் வழக்கு தீர்ப்பு இந்த 3 பேருக்கும் பொருந்தும்தானே என்று எடப்பாடி துணிந்து விட்டார்.
இப்படி முறைகேடுகளை துணிந்து செய்பவர்கள் எப்படி நியாயமான ஆட்சியை நடத்த முன்வருவார்கள்.
மோடி வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு எல்லா கட்சிகளிலும் ஒருவர் கலந்து கொண்டால் அதிமுக வில் தம்பிதுரை, ஒ பி எஸ், வேலுமணி, வேணுகோபால் என்று நான்கு பேர் கலந்து கொள்கிறார்கள். அவ்வளவு விசுவாசம்.
ஆனால் இந்த முறை இந்த மூன்று பேரைஅவ்வளவு சுலபமாக தகுதி நீக்கம் செய்ய முடியாது. நீதிமன்றம் தடை கொடுக்கும். வேண்டுமானால் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு நடவடிக்கை எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லலாம்.
எடப்பாடி ஆட்சியே நீடிக்க முடிந்தாலும் தினகரன் தொகுதிக்கு ஒரு லட்சம் என்று நாற்பது முதல் ஐம்பது லட்சம் வரை வாக்குகள் வாங்கி விட்டால் அதிமுகவில் இருந்து மூழ்கும் கப்பலில் இருந்து எலிகள் துள்ளிக் குதித்து தப்பிக்க முயல்வதை போல் வெளியேறுவார்கள். அப்போது இந்த கணக்கெல்லாம் துணைக்கு வராது.
தகுதி நீக்க நடவடிக்கைக்கு முன்னர் நல்ல புத்தி வரவேண்டும் ஆட்சியாளர்களுக்கு!