“சோலிய முடிங்க” நெல்லை கண்ணன் ஏன் சொன்னார்?

நெல்லையில் நடந்த குடி உரிமை பாதுகாப்பு பொதுக்கூட்டத்தில் பேசிய நெல்லை கண்ணன் கடுமையாக பிரதமர் மோடியையும் அமித் ஷாவையும் கண்டித்து பேசியிருக்கிறார்.

அவர் அவர்களை மட்டுமா பேசினார். நமது முதல் அமைச்சரையும் ஒ பி எஸ் யும் கூட விட்டு வைக்கவில்லை.

75 வயதான கண்ணன் தமிழ்க்கடல் என்று போற்றப் படுபவர். சிறந்த பேச்சாளர். சரளமாக பேசுவார். அதுவே தொழில். நெல்லைத் தமிழ் அவரது சிறப்பு.

காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர்.

குடி உரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து பேச வந்தவர் மோடியையும் அமித்  ஷாவையும் தாக்கிப் பேசினார். அப்போது பேசிய சோலிய முடிங்க என்ற சொல்லுக்கு நெல்லையில் தீர்த்துக் கட்டுங்க, கொலை செய்யுங்க என்று பொருள் என பாஜகவும் போராட்டம் ஆரம்பித்தது.

கண்ணன் வீட்டு முன்பு ஆர்பாட்டம் நடத்த காவல் துறை துணை செய்தது. மருத்துவ மனை கொண்டு செல்ல ஆட்சேபித்தார்கள். வழக்கும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

நான் அப்படி பேசவில்லை. இறைவனிடம் முறையிடுங்கள். அவன் பார்த்துக் கொள்வான் என்றுதான் பேசினேன் என்று விளக்கம் சொன்னார் கண்ணன். எந்த பொருளில் பேசினார் என்பதை அவர்தான் சொல்ல வேண்டும். அதை நீதிமன்றம் ஏற்றுக் கொள்கிறதா என்பது இனிதான் தெரியும் .

எங்கே இப்படி என்று கேட்டால் சும்மா ஒரு சோலியா என்று பதில் சொல்வது சோலிக்கு வேலை என்று பொருள் என்று தெரிகிறது

சோலிய முடிக்க வேண்டும் என்றால் எடுத்த காரியத்தை முடிக்க வேண்டும் என்று அர்த்தம். ஆக சோலிக்கு பொருள் இடத்துக்கும் ஆளுக்கும் தகுந்தபடி மாறுபடும்.

அரசியலில் சோலியை முடி என்றால் அரசியலில் அவருக்கு  இருக்கும் இடத்தை காலி செய் என்றுதான் பொருள். அதாவது வெற்றி கொள் என்று சொல்லலாம்.

ஆனால் ஒரு கேள்வி எழுகிறது. கோர்ட்டாவது மயிராவது என்று பேசிய எச் ராஜா மீது என்ன நடவடிக்கை எடுத்தது போலிஸ்?.

ஊடகங்களில் பணி புரியும் பெண்கள் அட்ஜஸ்ட் செய்து கொள்ளமலா வேலை செய்கிறார்கள் என்று பேசிய எஸ் வி சேகர் மீது என்ன நடவடிக்கை எடுத்தது போலிஸ்.?

வைரமுத்துவின் தலையை வெட்டலாமா என்று கேட்டவர் நயினார் நாகேந்திரன்.  என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? 

நாங்களும் சோடா பாட்டில் வீசுவோம் என்றார் ஒரு ஜீயர். நடவடிக்கை இருந்ததா? 

நிறைய நல்ல விபரங்களை பேசினார் கண்ணன். ஆனால் அவரது பேச்சு நடை கொச்சைதனமாக அமைந்தது துயரம்.

ஒருவருடைய பேச்சை முழுவதுமாக பார்த்துதான் எடை போட வேண்டுமே தவிர அங்கொன்றும் இங்கொன்றுமாக எடை போடக்கூடாது.

நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டு நீதி மன்ற காவலில் வைக்கப்பட்டு பிணை மறுக்கப்பட்டிருக்கிறது. மேல் நீதிமன்றம் தான் பிணை தரவேண்டும்.

பேசியது குற்றம் என்றால் அது பிணையில் வரத் தக்க குற்றம் தான்.

பாஜகவுக்கு பயந்து நடவடிக்கை தீவிரமாக எடுப்பது போல் இருக்கிறது அதிமுக அரசின் நடவடிக்கை.

அது சரியல்ல. அரசுக்கு கெட்ட பெயர் தான் கூடும்.

பொதுவாழ்வில் நாகரிகத்தை கடைப்பிடிப்பது எல்லாருடைய கடமை.

அதற்காக நெல்லை கண்ணனை மட்டும் குறிவைத்து நடவடிக்கை எடுப்பது அதைவிட தவறு.