இயற்கைப் பேரிடர் களங்களில் அரசியல் செய்வது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று.
ஆனால் அதற்காக அதிகாரத்தை கையில் வைத்திருப்பவர்கள் காட்டும் அலட்சியத்தையும் அவலத்தையும் பொறுத்துக் கொள்ள வேண்டுமா?
பத்து மாவட்ட மக்களின் துயரங்கள் எப்போது தீரும் எனத் தெரியவில்லை. தொடக்கத்தில் யாரும் அரசியல் செய்யாமல் அதிகாரிகளின் முயற்சிகளை பாராட்டவே செய்தார்கள்.
ஆனால் அடுத்தடுத்து அமைச்சர்களும் முதல் அமைச்சரும் நடந்து கொள்ளும் முறை விமர்சனத்தை தவிர்க்க முடியாததாக்கி விட்டது.
மூன்று நாள் கழித்து முதல் அமைச்சர் சில அமைச்சர்கள் புடை சூழ விமானத்திலும் ஹெலிகாப்டரிலும் சென்று குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் யந்திரத்தனமாக நிவாரணங்கள் வழங்கி விட்டு திரும்ப வருகிறார்.
அங்கேயே முகாமிட்டு இருக்கும் அமைச்சர்களுக்கு உள்ளூர் மக்கள் எந்த மரியாதையையும் தர மறுக்கிறார்கள். ஓ.எஸ்.மணியன் சுவர் ஏறிக்குதித்து ,,காவலரின் இரு சக்கர வாகனத்தில் ஏறி தப்புகிறார். திண்டுக்கல் சீனிவாசன் இன்னும் நான்கு புயல் வந்தால் நல்லது. ஏன் என்றால் அப்போதுதான் ஏறி குளங்கள் நிரம்பும் என்கிறார். உதயகுமார் மக்கள் போராட்டங்கள் தூண்டி விடப்பட்டவை என்கிறார். மக்களை இவர்கள் புரிந்து கொள்ளவே மாட்டார்களா?
துயரத்தில் இருப்பவர்கள் போராடத்தான் செய்வார்கள். அதை பொறுத்துக் கொள்ள வேண்டாமா? உள்ளூர் அமைச்சர் ஒரத்தநாடு வைத்திலிங்கம் மக்களால் கேள்வி கேட்கப் பட்டு ஆத்திரமடைந்து சத்தம் போடுகிறார்.
இதெல்லாம் மக்களால் நேசிக்கப் படும் அரசில் நடக்குமா?
விபத்தால் பதவிக்கு வந்தவர்கள் விபத்துக்களை பேரிடர்களை துடைக்க முடியாமல் தடுமாறுகிறார்கள்.
ஒரு லட்சம் மின் கம்பங்கள் சாய்ந்து விட்டன, ஒரு கோடி தென்னைகள் விழுந்து விட்டன, பல லட்சக்கணக்கில் வாழைகள் சாய்ந்தன, வீடுகள் உடைமைகளுடன் நாசம், குடிநீர் தட்டுப் பாடு, உடுத்த உடைகள் இல்லை, பல நூறு கிராமங்களில் பத்து மாவட்ட மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து வாடுகின்றனர். அவர்கள் பட்டினி கிடந்து அரசின் கவனத்தை ஈர்க்க ரோட்டுக்குவந்தால் அவர்கள் எதிர்க் கட்சிகளால் தூண்டி விடப் படுகிறார்கள் என்று குற்றச்சாட்டு.
மொத்தமாக எவ்வளவு இழப்பு என்பதை இனிதான் கணக்கு பார்க்க வேண்டும். மாநில அரசின் நிதி ஆதாரத்தில் மட்டுமே இந்த இழப்பை ஈடு கட்ட முடியாது.
தனியார் நிறுவனங்கள் தாமாக முன்வந்து துயர் துடைக்க அரசின் பக்கம் நிற்கின்றன.
திமுக முதல் முதலாக கட்சி சார்பில் ஒரு கோடியும் சட்ட மன்ற பாராளுமன்ற உறுப்பினர் சம்பள வகையில் ஒரு கோடியும் ஆக இரண்டு கொடி அளவில் நிதி அளித் திருகிறது. நடிகர்கள் சிவகுமார் குடும்பம் ஐம்பது லட்சம், விஜய்சேதுபதி இருபது ஐந்துலட்சம் ஊடகங்கள் உதவிப் பொருட்கள் சேகரித்து அனுப்புவது என்று உதவிக் கரங்கள் நீளுகின்றன .
ஆனால் இதுவரை மத்திய அரசு எந்த அறிவிப்பையும் செய்ய வில்லை. எல்லாம் முடிந்து சாககாசமாக வந்து பார்த்து இழப்பில் இரண்டு சதம் ஈடுகட்டுவார்கள் . முந்தைய அனுபவம் பார்த்தோமே!
நாளை பிரதமரை பார்த்தபின் முதல்வர் என்ன அறிவிப்பு வெளியிடுகிறார் என்று பார்ப்போம்.
ஆனால் தனக்கு கிடைத்த இந்த அரிய வாய்ப்பை முதல்வர் பழனிசாமி பயன்படுத்திக் கொள்ள தவறி விட்டார் என்பதே பொது மக்களின் கணிப்பு.
ஒரு சில அமைச்சர்கள் கடுமையாக உழைத்தார்கள் என்பது உண்மைதான் என்றாலும் அவர்களிடம் என்ன அதிகாரம் இருக்கிறது?
இழப்பீடு கொடுப்பதற்கு கணக்கீடு செய்ய கால அவகாசம் வேண்டும் என்பதை ஒப்புக் கொள்ளலாம்.
ஆனால் பசியால் துடிப்பவர்களுக்கு உணவு கொடுப்பதற்கு அவகாசம் கேட்பவர்கள் அதிகாரத்தில் இருப்பதற்கு தகுதி இல்லாதவர்கள்.