2015 ம் ஆண்டு அனுபவித்த வேதனைகளை சென்னை வாசிகள் மீண்டும் அனுபவித்து வருகிறார்கள்.
பட்ட பின்பும் புத்தி வரவில்லையே?
வட கிழக்கு பருவ மழை வரும் என்று தெரியும். வந்தால் வடிகால்கள் சரியான முறையில் பராமரிக்கப் படாமல் இருந்தால் தன்ணீர் ஊருக்குள் பாயும் என்றும் தெரியும்.
இந்த ஆண்டு ஜூன் முதல் ஆகஸ்டு வரை தூர் வாரும் பணிகள் முழு வீச்சில் முடுக்கி விடப் பட்டிருந்தால் எவ்வளவு தண்ணீர் வந்தாலும் கடலுக்குள் சென்று இருக்கும்.
அப்படி ஏதாவது பணிகள் நடந்ததாக தமிழக அரசால் சொல்ல முடியுமா?
இரண்டு நாள் மழையில் தெருக்கள் ஆறுகள் ஆகி விட்டன. கீழ் பாலங்கள் எல்லாம் குளங்கள் ஆகி விட்டன.
வடசென்னை , தாம்பரம் முடிச்சூர் பகுதிகள் சென்னையின் முக்கிய பகுதிகள் எல்லாம் மழை நீரில் தத்தளித்து நிற்கிறது.
இரண்டு குழந்தைகள் மின்சாரம் பாய்ந்து இறந்திருக்கிறார்கள்.
ஆயிரம் குடும்பங்கள் வீடுகளை விட்டு விட்டு குடி பெயர்ந்திருக்கிறார்கள்.
இன்னும் மூன்று நாள் மழை நீடிக்கும் என்றால் நிலைமை கட்டுக்குள் இருக்காது.
இதில் புயல் வரும் என்று வேறு எச்சரிக்கை . ! அடையாறு, கூவம் ஆறு பக்கிங்காம் கால்வாய் மூன்றும் சரியான நேரத்தில் தூர் வாரி இருந்தால் பெருமளவு சேதத்தை தவிர்த்து இருக்கலாம்.
தூர் வார நானூறு கோடி ரூபாய் செலவிடப் பட்டதாக முதல்வர் கூறியதா செய்திகள். ஆனால் எங்கு எப்போது யாரால் இந்த வேலைகள் செய்யப் பட்டன என்ற விபரங்கள் இல்லை.
தகவல்கள் கேட்டு வெள்ளை அறிக்கை கேட்டிருக்கிறார் தி மு க செயல் தலைவர் ஸ்டாலின்.
குறிப்பிட்டு வெள்ளத்துக்கு ஒதுக்கப் பட்ட துகையில் தூர் வாரி விட்டார்கள் என்று குற்றம் சாட்டியிருக்கிறார். அதற்கும் இந்த அரசு அசைய வில்லை என்றால் யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள் நாங்கள் ஊழல் செய்வதை நிறுத்த மாட்டோம் என்பதில் இந்த அரசு உறுதியாக இருக்கிறது என்றுதான் மக்கள் புரிந்து கொள்வார்கள்.
டெல்டா மாவட்டங்களில் சாகுபடி செய்திருக்கும் விவசாயிகள் அங்கும் வடிகால்கள் தூர் வாரப் படாத நிலையில் நடப்பட்டிருக்கும் பயிர்களில் தண்ணீர் வடியாவிட்டால் நீர் தேங்கி பெருத்த நட்டத்தை ஏற்படுத்தி விடும் ஆபத்தில் இருக்கிறார்கள்.
சென்னையில் ஏரிகள் குளங்கள் எல்லாம் விரைவாக நிரம்பி வருகின்றன. நிரம்பி விட்டால் தண்ணீரை திறந்து விடுவதை தவிர வேறு வழி இல்லை. அப்போது வடிகால் கள் வேலை செய்ய வில்லை என்றால் பாதிப்பேர் சென்னையை காலி செய்ய வேண்டியது வரும்.
கட்டுப்பாட்டு அறை அமைப்பது, அதிகாரிகளை தொடர்பு கொள்ள தொலைபேசி எண்கள் என்றெல்லாம் அறிக்கை வெளியிட்டால் மட்டும் போதாது. தொடர்பு கொண்டால் செயல் பட போதுமான அதிகாரிகளும் அதற்கான திட்டங்களும் இல்லை என்றால் என்ன பயன்?
எந்த சட்ட மன்ற உறுப்பினரும் மக்களை சென்று சந்தித்ததாக செய்தி இல்லை.
அவலத்தின் உச்சிக்கு மக்களை தள்ளிக் கொண்டு இருக்கிறது இந்த பொம்மை அரசு.
This website uses cookies.