அண்ணா ராசாசியோடு கூட்டணி வைத்தாலும் அண்ணா வலதுசாரி ஆகிடவில்லை கலைஞர் பாஜகவோடு கூட்டணி வைத்ததால் மதவாதி ஆகிடவில்லை எனவே ரசினி பாஜகவோடு சேர்ந்தாlலும் மதவாதி ஆகிட மாட்டார் – இதுதான் தமிழருவி மணியனின் கண்டுபிடிப்பு.
கொஞ்சம்கூட வெட்கமும் தயக்கமும் இல்லாமல் எப்படி இந்த மணியனால் அவர்களோடு இவரை ஒப்பிட முடிந்தது? காலம் போன கடைசியில் என்ன உனக்கு கிடைத்து விடப் போகிறது?
அண்ணாவும் கலைஞரும் ஒரு மாபெரும் தத்துவத்தின் பிரதிநிதிகள். சமூக நீதிக்காக தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்தவர்கள். அவர்களின் அரசியல் அனுபவத்தை வேறு யாரோடும் ஒப்பிட முடியாது. ரசினி இதுவரை தான் எந்த தத்துவத்தின் பிரதிநிதி என்பதை ரகசியமாகவே வைத்துக் கொள்ள முயல்கிறவர்.
சோவோடு உறவாடி சுசாமியோடும் குருமூர்த்தியோடும் ஆலோசித்து அரசியல் செய்ய திட்டமிடுகிறவர்.
தமிழகத்தில் நடப்பது ஆரிய திராவிட அதிகாரப் போட்டி தான். இதில் ரசினி எந்தப் பக்கம்?
காட்டிக் கொடுப்பதில் தமிழர்களுக்கு இணை இல்லை என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் மணியன். மற்றவர்கள் தெரியாமல் ஏமாறலாம். ஆனால் மணியன் தெரிந்தே ஏமாற்ற துணை போகும் கோடரிக்காம்பு.
இன்னும் எத்தனை கோடரிக் காம்புகள் வரிசை கட்டி வந்தாலும் அத்தனையையும் துவம்சமாக்கும் சக்தியை தமிழ் சமூகம் இன்று பெற்று விட்டது.
தமிழன் முன்பிருந்த ஏமாந்த நிலையில் இருப்பதாக மணியன் கனவு காண்கிறார்.
கடைசியில் வெகு காலமாக கட்டிக் காத்த தமிழருவி மணியன் என்ற பெயரை இழந்து மாங்கா மணியன் என்ற பெயரை சம்பாதித்ததுதான் மிச்சமாக இருக்கப் போகிறது மணியனின் ரசினிக்கு பல்லக்கு தூக்கிய வேலை.